தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-10-2022

எசாயா 48 : 10

இதோ உன்னை புடமிட்டேன். ஆனாலும் வெள்ளியைப் போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்து கொண்டேன்.

இந்த வசனம் சொல்வது, கர்த்தர் நம்மை சுத்திகரிப்பதற்கு எல்லா துன்பங்களையும் பயன்படுத்துகிறார் என்பதே. நீங்கள் கர்த்தரை நோக்கி பார்க்கும் போது உங்கள் பிரச்சனைகள் எல்லாம் இலகுவாகிவிடும்.

எந்த பிரச்சனைகளை சந்தித்தாலும்  கர்த்தர் உங்களை நேசிக்கிறார் என்று கண்டுபிடித்தாலே போதும் அவை இலகுவாகிவிடும். நீங்கள் ஒரு கணம் நிறுத்தி , இயேசு உங்களுக்காக என்ன அனுபவித்தார் என்று ஒப்பிட்டுப் பார்த்தாலே உங்கள் பிரச்சனைகள் மிகச் சிறியது என்பது தெரிய வரும்.

நமது எளிதான மற்றும் தற்காலிக பிரச்சனைகள் எல்லாமே அவற்றை மிஞ்சும் நித்திய மகிமையை அடைவதற்காகவே.

யாக்கோபு 1 : 2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது , அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

கர்த்தருடைய வார்த்தைகள் நமக்கு படிப்பிப்பது என்னவென்றால் , நாம் அவற்றை களைந்துவிட விரும்பினாலோ அல்லது சந்திக்க விரும்பினாலோ , ஒவ்வொரு துன்பமும் நம்முடைய வாழ்க்கையை உள்ளிருந்து வலிமையாக்கி , நிலையற்ற சூழ்நிலைகளிலும் கூட நம்மை நிலையானதாக மாற்றும். அதற்கு நாம் பிதாவினுடைய சத்தத்தை  நிலைநிறுத்தி கேட்க வேண்டும். இதைத்தான் கல்வாரி சிலுவையில் கர்த்தர் நமக்கு காண்பித்தார்.

மேலும் காணப்படுகிறவைகளல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு , அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள் ,  காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.2 கொரிந்தியர் 14 : 17, 18

ஜெபம்

பிதாவே, இனிமேல் என்ன நடக்கவிருக்கிறது என்பதை  எங்கள் கண்கள் கவனிக்க எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையும் எங்களை உமது நித்திய மகிமைக்குள்  இயேசுவின் நாமத்தின் பெயரால் இட்டுச் செல்லட்டும்.  ஆமென்.

Sol. மகேந்திரா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 26-10-2022

உம்முடைய கிருபையும் நன்மையையும் என்னை பின்தொடரும்

மோசே கர்த்தரிடம் “உம்முடைய மகிமையை எனக்கு காண்பித்தருளும் என்றான். அதற்கு இயேசு என்னுடைய தயை எல்லாம் உனக்கு முன்பாக கடந்து போகப் பண்ணுவேன் என்றார். யாத்ராகமம் 33: 18 ல் இதைக் காணலாம்.

பெரும்பாலும் நான் காலையில் எழுந்திருக்கும் போது   என் மனதில் ஒரு பாடல் வரும். ஒரு நாள் நான் பாடலின் கோரஸுடன் எழுந்தேன்.” உங்கள் நன்மை எனக்குப் பின்னால் ஓடி வருகிறது. மீண்டும் எனக்குப் பின்னால் ஓடி வருகிறது.” இதுதான் அந்த வரிகள்.

 என்னுடைய சூழ்நிலைகளின் நிமித்தம் , நான் கர்த்தரின் நன்மைகளை சந்தேகிக்க வேண்டும் என்று என் எதிரிகள் விரும்புகின்றனர். ஆனாலும் புயல் போன்ற பிரச்சனைகளிலும், மிகப் பெரிய அச்சுறுத்தல்களிலும் , என் கர்த்தர் நல்லவர், என்மீது இரக்கம் உள்ளவர் என்று அறிக்கையிட வேண்டும். மேலும் நீங்கள், கர்த்தரின் நன்மை என்பது , மக்களின் உணர்வுகள்  சூழ்நிலைகளைப் பொறுத்தது அல்ல என்பதை அறிய வேண்டும். ” நன்மை ” என்பது நம் பிதாவின் அடையாளம். அதுவே அவர் யார் என்பது.

கர்த்தரின் நன்மையை தெரிந்து கொள்வது பாதுகாப்பைத் தரும்.

இன்று அவருடைய இரக்கத்தைப்பற்றி சிந்திக்கும்போது ,  நம்முடைய ஆத்துமா  குணப்படுவதை உணர முடியும்.  அவருடைய நன்மையையும் இரக்கத்தையும் யாராலும் தடுக்க முடியாது. எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் நல்லவராக இரக்கமில்லாதவராக அவர் இருந்ததில்லை. அவரது நன்மையில் நாம் பாதுகாப்பாக இருக்கலாம். அவர் என்றும் நல்லவராகவே இருக்கிறார். ஒருபோதும் மாறமாட்டார். நமது தந்தை நம்மீது இரக்கம் உள்ளவராகவும் நம்மை கண்காணிப்பவராகவும் இருக்கிறார்.

 யோவான் 10 : 11 ல் இயேசு , நானே நல்ல மேய்ப்பன் என்கிறார். இந்த உண்மை நமக்கு உறுதியையும் பாறையின்மேல் அமர்ந்திருக்கும் பாதுகாப்பையும் தருகிறது.

சங்கீதம்  136 : 1  ல் கர்த்தர் நல்லவர் , அவர் கிருபை என்றுமுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது.

கர்த்தரின் நன்மையை அறிவிப்பது

யோசபாத் அரசருடைய கதை,அவர் எவ்வாறு தீர்க்கதரிசியினுடைய வார்த்தையை நம்பி தன்னுடைய பாடகர் குழுவை படைகளுக்கு முன்னால்  அனுப்பினார் என்பது நம்மை உற்சாகப்படுத்துவதாக உள்ளது. அதே நேரத்தில் அது நமக்கு தெரியப்படுத்துவது ,

  1. நம்முடைய மன அழுத்தங்களின் போதும் தடைகளின் போதும் நம்முடைய கரங்கள் கர்த்தரை  துதிக்க வேண்டும்.
  2. நாம் இந்த வாக்குமூலத்தை அமைதியாகச் சொல்லலாம். ஆனால் ஆன்மீக வாழ்க்கையில் அது சிங்கத்தின் கர்ஜனை போல் இருக்க வேண்டும்.
  3. சத்தியத்தின் வார்த்தை பிசாசானவன் குரலை அமர பண்ணும். நம்வாழ்க்கையின் இருளான விஷயங்களை அகற்றி ஜீவனை கொடுக்கும்.
  4. உம்முடைய நன்மையும் கிருபையும் எப்போதும் என்னை தாங்குவதற்கு , கர்த்தாவே உம்மை துதிக்கிறேன்.

அவருடைய நன்மையும் இரக்கமும் என்னுடைய எதிர்காலமாகவும் இருக்கிறது

பரிசுத்த ஆவியானவர் நம்முள் இருக்கும்போது  கர்த்தருடைய நன்மை இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அத்துடன் அவருடைய கனிகளான இரக்கமும் நன்மையும் நம்மோடு இருக்கும்.

தாவீது ராஜாவினுடைய வார்த்தைகள் , அழுகையினால் போராடிக் கொண்டிருக்கும் நமக்கான வார்த்தைகள். “ நானோ   ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன்.சங்கீதம் 27 : 13

கிறிஸ்துவில் பாதுகாப்பு , நம்முடைய எதிர்காலத்தில் அவரது நன்மை , இந்த இரண்டும் நம்வாழ்நாள் முழுவதும் நித்தியத்திலும் இருக்க வேண்டும்.

சங்கீதம் 23 : 6 ” என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்  நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

ஆசீர்வாதத்தின் பயிற்சி

நாம் வீட்டிலோ, வேலை செய்யும் இடங்களிலோ அல்லது வேறு எந்த இடத்திலாவது உள்ள போராட்டங்கள் அல்லது அங்கே எதாவது பிரச்சனை நீண்ட நாட்களாக அல்லது சமீபத்தில் நடந்துஇருக்கலாம்.  அதற்காக நீங்கள் ஜெபிக்கும் நேரம் இது

ஆண்டவருடைய நன்மையையும் இரக்கத்தையும் பிரகடன படுத்துங்கள் அப்பொழுது எதிரியானவன் ஓடிப்போவதை பார்ப்பீர்கள். இழந்து போனதை மீட்டு கொடுத்ததற்கு நன்றி என்று சொல்லி தீர்க்கதரிசன வார்த்தை கூறி இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதியுங்கள்.

கர்த்தர் ஏராளமான ஆசீர்வாதங்களை இன்று உங்களுக்குத் தருகிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்.  அவருடைய விரிவான வெளிப்பாடுகளுடனும்   வாக்குறுதிகளுடனும்  நன்மையை வெளிப்படுத்துவார்.

Sol. Joan

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 25-10-2022


நீதியும் நியாயமும் உம்முடையது . சிங்காசனத்தின் ஆதாரம் , கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.

சங்கீதம் 89 : 14

நம் வாழ்வில் , அநீதி அல்லது தாமதப்படுத்தப்படும் நீதி என்பவை நடக்கும் நேரங்கள் உண்டு. மற்றவர்களின் வாழ்க்கையிலும் இதுபோன்ற நிகழ்வுகளைப்பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோம். இத்தகைய சூழ்நிலைகளில் , நம் கர்த்தர் நீதியின் தேவன் என்பதை நினைவில் கொள்வதன்மூலம் நாம் ஊக்குவிக்கப் படுகிறோம்.

நியாதிபதிகள் புத்தகத்தில் , யெப்தாவின் வாழ்வில் நடக்கும் ஒருசம்பவம் இதைக் காட்டுகிறது. யெப்தா, கீலேயாத் மற்றும் ஒரு பரஸ்திரீக்கும் உள்ள உறவின் மூவம் பிறந்தவன். கீலேயாத்தின் சட்டப்படியான சந்ததியினர் , யெப்தாவிடம் அவர் தங்களது தந்தையின் பரம்பரையாக இருக்க முடியாது என்று கூறுகின்றனர்.அவர் பழங்குடியினராகிய கீலேயாத்திடமிருந்து தப்பி ஓடுகிறார்.இது அநீதியானது. ஆனால் கீலேயாத்தின் மற்ற பிள்ளைகள் தங்கள் முன்னோருடன் சேர்ந்து கொண்டு இதைச் செய்தார்கள்.


யெப்தா ஒரு வீரமிக்க மனிதன். அவன் தன்னுடைய காயங்களையும் அவமானத்தையும் உணர்ந்திருக்க வேண்டும். அவர் மிக உயரத்தில் இருந்தார். யெப்தாவின் நல்ல குணம் என்னவென்றால் , மீண்டும் போராடுவதற்கு தன் சொந்த பலத்தை சார்ந்திருக்கவில்லை.தான் வெளியேற்றப்பட்டாலும் அவர் தன் தந்தையின் குலத்தை மீட்டெடுக்க ஏங்குகிறார். கர்த்தரின் நேரத்திற்காக காத்திருக்கும்போது , கர்த்தர் கருணையுடன் இரங்குகிறார். அவருடைய இரண்டாவது போற்றத்தக்க குணம் இது.

சில வருடங்களுக்குப் பிறகு இஸ்ரவேல் மக்கள் அம்மோனியர்களால் அச்சுறுத்தப்படும் போது , அங்குள்ள பெரியவர்கள் யெப்தாவின் உதவியையும் தலைமையையும் வேண்டி வருகிறார்கள். யெப்தா கர்த்தருடன் பேசுகிறார். இது அவருடைய மூன்றாவது போற்றத்தக்க தன்மை. அம்மோனியர்களுக்கு எதிரான வெற்றிக்குப்பிறகு, இஸ்ரவேலர்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர்.

நியாதிபதிகள் 7 : 12 ல் சொல்லப்பட்டபடி யெப்தா ஆறுஆண்டுகள் இஸ்ரவேலை நீதியுடன் அரசாண்டார்.

கர்த்தரின் பிள்ளைகளாக நம் குடும்பத்தினர்களும் நண்பர்களும் நமக்கு செய்த அநீதியை எவ்வாறு கையாள்வது? யெப்தாவிடமிருந்து நாம் இதை கற்றுக் கொள்ளலாம். கர்த்தர் மீதுள்ள நம்பிக்கை , அவரது பொறுமை, கர்த்தருடன் அவருக்குள்ள உறவு எல்லாம் பிரமிப்பூட்டுவதாக உள்ளது. அவரது வெற்றி மற்றும் மீட்பின் ரகசியங்கள் இவை. கர்த்தர் யெப்தாவுக்கு ஒரு மகளைக் கொடுத்து ஆசீர்வதித்தார். எபிரேயர் 11 : 32 ல் கிதியோன், பாராக் , சிம்சோன், தாவீது , சாமுவேல் இவர்களுடன் கூட யெப்தாவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கர்த்தாவே, அநீதியைக் கையாள உமது கிருபையையும் ஞானத்தையும் தாரும். நீதி எங்கள் வாழ்வில் எம் வாழ்வில் மீட்டெடுக்கப்படும் வரை ஜெபிக்க எங்களுக்கு உதவும்.

ஆமென்.

Sol. Angelian

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 24-10-2022

“ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் “

கலாத்தியர் 6 : 2

யாரெல்லாம் சுமையோடு இருக்கிறார்களோ , அவர்களை சென்றடைந்து அவர்கள் தனிமையில் இல்லை  என்பதை உணர்த்த வேண்டும். வேத வசனங்களை அவர்களிடம் எடுத்துக்கூறி  கர்த்தர் அவர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்று சொல்லி, நம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். எப்போது அவர்களுக்கு உதவி தேவையோ, அப்போது நாம் உதவ வேண்டும்.  பிரச்சனைகளோடும் , கஷ்டங்களோடும் இருக்கும்போது , வேதம் அவற்றை களைய எவ்வாறு உதவுகிறது என்பதை எடுத்துக்கூற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கர்த்தருடைய ஆழமான விருப்பம், கஷ்டங்களின் மத்தியிலும் நாம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கவேண்டும் என்பதே.

” ஆனபடியால் சமாதானத்துக்கு அடுத்தவைகளையும் , அந்நியோன்ய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக் கடவோம் “

ரோமர் 14 : 19

கர்த்தர் அமைதியை சமாதானத்தை அளிப்பவர் அல்ல , மற்றவர்களுக்கு நாம் உதவும்போது இன்னும் அதிகமான சமாதானத்தை தருகிறார். மற்றவர்களுக்கு  உதவி செய்வதைப் பற்றிய வேத வசனங்களை எடுத்துக்கூறும்போது, நாமும் இரக்கமும், தயவுள்ளவர்களாகவும் , எந்தவித அங்கீகாரத்தை எதிர்பார்க்காதவர்களாகவும் நம்மை மாற்றும். ஒவ்வொரு நாளும் மன அழுத்தங்கள் நம்மை  பிடித்துக் கொள்ளும் போது , எல்லா நேரங்களிலும் கர்த்தர் நல்லவர் என்று சொல்ல வேண்டும். இதுவே  கிறிஸ்துவத்தின் வழிகளை புரிந்து கொள்ளும் அர்த்தமாகும்.

” ஆவியின் கனியோ , அன்பு ,சந்தோஷம், சமாதானம் , நீடிய பொறுமை , தயவு , நற்குணம் , விசுவாசம்.”

கலாத்தியர் 5 : 22

நாம் வசிக்கும் இடங்களிலும், நம்மை அடுத்திருப்பவர்களிடமோ, உறவினர்களிடமோ அல்லது வேலை செய்யும் இடங்களிலோ உள்ள அனாதைகள், மற்றும் விதவைகளிடமும் இரக்கமும் அக்கறையும் காட்ட வேண்டும். ஒரு சிறிய சைகை கூட பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தும். மாறாக , நம்முடைய பணத்தையோ, நேரத்தையோ மற்றவர்களுக்கு கொடுக்க முடிவது இலகுவானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய நேர்மறையான சக்திகளை அவர்களுக்கு கொடுக்கலாம்.  மேலும் நம்மால் எந்த அளவுக்கு முடியுமோ , கர்த்தர் நமக்கு தந்தவற்றிலிருந்து உணவோ, உடையோ ,பணமோ , அல்லது மற்ற ஏதாவது உதவியோ அவர்களுக்கு கொடுக்கலாம்.

” கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து , உங்கள் மடியிலே போடுவார்கள், நீங்கள் எந்த அளவினால் அளக்கிறார்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

லூக்கா 6 : 38

இது ,கர்த்தர் தன்னை உண்மையாய் பின்பற்றுகிறவர்களுக்கு , கொடுக்கும் மிகப்பெரிய பரிசாகும். நீங்கள் அதிகமாக கொடுத்தால், உங்களுக்கு மிக அதிகமாக கொடுக்கப்படும் .

சாட்சி

கர்த்தருடைய கிருபையினால் எனது மகள் நல்ல ஒரு கம்பெனியில் பணி புரிந்தாள். அவளுடைய இருதயத்தில் தேவைப்படுவோருக்கு , குறிப்பாக விதவைகளுக்கு உதவ வேண்டும் என்ற இரக்கம் இருந்தது.  சுயநலமில்லாமல் தேவைப்படுவோருக்கு உதவியதால் கர்த்தர் அவளுக்கு இரட்டிப்பான நன்மையை தந்தார்  என்று சாட்சி சொல்லிக் கொண்டிருப்பாள். சில நாட்களுக்குப்பின்னால், என் மகளுக்கு கர்த்தர் பதவிஉயர்வு அளித்து ஆசீர்வதித்தார். அவளுடைய தொகுப்பூதியம் இரண்டு மடங்காகியது. எல்லா மகிமையையும் இயேசுகிறிஸ்து ஒருவருக்கே தருகிறோம்.

ஆகையால்  நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5 : 11

நாம் ஒருவர் மற்றவருக்கு உதவும்போது , எல்லாவற்றிலும் நமக்கு வெற்றி உண்டாகும். இயேசு நம்மை அசாதாரணமான, நம்பமுடியாத வழிகளில் அன்பு செய்கிறார்.

ஜெபம்

உமது எண்ணமுடியாத அதிசயங்களுக்காக நன்றி இயேசுவே. உம்முடைய உன்னதமான புரிதலுடன் ,எங்களுடைய இருதயத்தில் இரக்கத்தையும் , பொறுமையையும் கொண்டு, உம்முடைய பரலோக ராஜ்ஜியத்திற்கு வழிகாட்ட கிருபை புரியும்.  நொந்துபோன ,தேவைப்படுகின்ற அநேக மக்களுக்கு சுயநலமுள்ளவர்களாக இல்லாமல்,ஆசீர்வாதம் அளிப்பவர்களாக மாற உதவி புரியும்.

ஆமென்.

Sol. பூனம் பத்ரா AOJ

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-10-2022

விசுவாசத்தின் வளர்ச்சி

கடவுள் நம்பிக்கையின் விதையை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளார்.கடவுளின் வார்த்தையைக் கேட்பதன் மூலம் நம்பிக்கை வருகிறது. நம்முடைய தேவன் தம்முடைய வார்த்தையை கொண்டு நம்மிடம் பேசுவார்.

அந்த வார்த்தையைக் கேட்டு எப்படி அந்த விதையை நம் வாழ்வின் மண்ணில் விளைவிக்க முடியும்.

ரோமர் 10:17- “ ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” எனவே கடவுளின் வார்த்தையைக் கேட்பதனாலே விசுவாசம்  வருகிறது .

 கேட்பது என்பது ஒலிகளைக் கேட்கும் ஒரு செயலற்ற தன்மை  அல்ல, இதன் பொருள் கேட்கப்பட்டவற்றை  செயல்படுத்துவது.  கர்த்தர்  பேசும்போது அது ஒரு கட்டளை. நாம்  அதன்படி நடக்கிறோமா அல்லது கீழ்ப்படியாமலிருக்கிறோமா.  கீழ்ப்படியாமை விசுவாசத்தின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால்  சில நேரங்களில்  விசுவாசித்தும் அது ஏன் நடக்கவில்லை என்று ஆச்சரியப்படுவோம்.  கர்த்தர் கூறுகிறார் ”  என் வார்த்தையைக் கைக்கொள்கிறவன்,  என்னை நேசிக்கிறான் என்று. நாம் மகிமையிலிருந்து மகிமைக்கும் விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கும் வளரவேண்டும். வேறொருவரின் விசுவாசத்தை நாம் பிரதிபலிக்க முடியாது. கர்த்தருடைய வார்த்தை நமக்கு உண்டாகும் போது கீழ்ப்படிய வேண்டும். அப்பொழுது காரியம் நடக்கும்.

அன்பு– இது விசுவாசத்தின் வளற்சிக்கு முக்கியமானது. நம்மிடத்தில் அன்பு இருந்தால் விசுவாசம் அன்பின் மூலமாக கிரியை செய்யும்

கலாத்தியர் 5: 6 “ கிறிஸ்து இயேசுவினிடத்தில்  விருத்த சேதனமும் ,  விருத்தசேதனம் இல்லாமையும் ஒன்றுக்கும் உதவாது. அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். “

     கர்த்தர் எழுதப்பட்ட வார்த்தைகள் வழியாகவும் சொல்லப்பட்ட வார்த்தைகள் வழியாகவும் பேசுகிறார்.   மேல் சொன்ன இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றல் அப்பொழுது தான் கர்த்தருடைய வார்த்தையை கேட்கிறது என்றால் என்ன என்பதை அறிய முடியும்.    கர்த்தர் இன்றுவரை  தனது அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள், கனவுகள், தரிசனங்கள் மற்றும் உள் உணர்வுகள் அல்லது சூழ்நிலைகள் மூலம்  பேசுகிறார்.

அவருடைய எழுதப்பட்ட வார்த்தையின் படி மட்டும் நாம் வாழவில்லை, ஆனால்  கடவுளின் வாயிலிருந்து  புறப்படுகிற வார்த்தைகளினாலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.   வேதத்தில் எழுதப்பட்ட வார்த்தையைத் தவிர வேறு வழிகளிலும்  அவர் நம்முடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையை நாம் மறுக்க கூடாது.  அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று சிலர் கூறுகிறார்கள். எனவே அவர்கள் கர்த்தர்  சொன்னதன்படி மட்டும் வாழ்கிறார்கள். கர்த்தர் இப்போது சொல்லிக் கொண்டிருப்பதை கேட்க மறுக்கிறார்கள்.  எனவே தேவனின் அற்புதங்கள் அங்கே நிராகரிக்கப்படுகின்றன. ஜெபம் மற்றும் உபவாசமுமே உண்மையான  விசுவாசத்திற்குரிய சாவிகள். இது,  “விசுவாசத்தை சொல்லுதல்” அல்லது  “விசுவாசத்தை பேசுதல் ” என்று அழைக்கப்படுகிறது . இது   விசுவாசத்தை கேட்பதை விட உயர்ந்தது.

இயேசு சொன்னார்,  கடுகளவு விசுவாசம் இருந்தால் நீங்கள்  இந்த மலையை பார்த்து , இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போம் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொன்னார்.                         

   நீங்கள் கடவுளின் வார்த்தைகளைப் பெற்று அவற்றைச் சொன்னால், அவை உங்களுக்கு வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமாக மாறும். நீங்கள் அவருடைய வார்த்தையை மீண்டும் மீண்டுமாக சொல்லி பார்க்கிறவற்றினால் அல்ல விசுவாசத்தினால் நடக்கும் போது உங்கள் விசுவாசம் வளரும்.

 ரோமர் 4: 20,21-  ” “தேவனுடைய வாக்குத்தத்தத்தை  குறித்து அவன் அவிசுவாசமாய்  சந்தேகப் படாமல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை  நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று  முழு நிச்சயமாய் நம்பி , தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான். “

விசுவாசத்தில் நாம் நிலைத்திருந்து , நம் வாழ்க்கையில் அதை கடைபிடித்து , விசுவாசத்தை வளர்ப்போம்.

கேட்போம் ” ” கீழ்படிவோம் “

” அன்பு செய்வோம் ” ” பிறருக்கு சொல்வோம் “.

சாட்சி வேதத்தின் சத்தியங்களை சொல்லி எங்கெல்லாம் ,  எப்போதெல்லாம் மக்களுக்காக ஜெபிக்கிறேனோ ,  தேவனுடைய மகிமையால் அவர்கள் குணமடைவார்கள்.

ஜெபம்: தேவனே உம்முடைய  அன்புக்கும் உண்மைக்கும் சத்தியத்திற்கும் நன்றி ஏனென்றால்  என்னுடைய ஜெபத்தைக் கேட்டு நோய்களைக் குணமாக்குகிறீர்.

ஆமென்            

Sol.Noreen

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-10-2022

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். 1 கொரிந்தியர் 11:1

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

I பேதுரு 2:21

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். I யோவான் 2:6

மேல் உள்ள வசனம் நாம் கிறிஸ்துவின் மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து மக்களை தன்னை பின்பற்றும் படி அழைக்கிறார். அவர் தான் கிறிஸ்துவை எல்லாவிதத்திலும் பின்பற்றுகிறார்  என்பதில் உறுதியாய் இருந்தார்.

நாம் இயேசு காட்டிய முன்மாதிரியை பின்பற்றுகிறோமா?

மக்கள் நம்மை முன்னுதாரணமாகப் பின்பற்றுவதற்கு, நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு நாம் ஒரு முன்மாதிரியாக இருக்கிறோமா?

நாம் அனைவரும் கர்த்தருடைய பார்வையில் பரிசுத்தமான  வாழ்வு வாழ விரும்புகிறோம். ஆனால் அது உண்மையில் கர்த்தருடைய பார்வையில் பரிசுத்தமானதா? பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தில் நாம் தினமும் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும். அறை இருட்டாக இருக்கும்போது நாம் தூசியைப் பார்க்க மாட்டோம், ஆனால் ஜன்னலிலிருந்து ஒரு சிறிய வெளிச்சம் நுழையும் போது காற்றில் தூசி துகள்களைக் காண்கிறோம். பரிசுத்த ஆவியானவர் இருண்ட அறையில் ஊடுருவி தூசியைக் காட்டக்கூடிய ஒளி. பரிசுத்த ஆவியானவரின் ஒளியில் நம்மைப் பார்ப்பதன் மூலம் மட்டுமே நாம் நம்மைப் பரிசோதிக்க முடியும்.

சிறிய பொறாமை அல்லது கோபம் அல்லது புறம் பேசுதல் கூட பாவம் என்று பைபிள் கூறுகிறது. அலுவலகத்தில் நாம் செய்யும் சிறு புறம் கூறுதல் அல்லது நம் மேலாளரை பற்றி நாம் குறை கூறுவது அல்லது பயணத்தின் போது சாலை விதிகளின் சட்டத்தை மீறுவதும் எல்லாம்பாவம் தான். ஏன் என்றால் நாம் மக்களுக்கு அல்லது சமூகத்திற்கு ஒரு உதாரணமாக இருப்பதில்லை. இந்த சிறிய விஷயங்கள் கூட நம் அருகில் உள்ள ஆத்துமாக்களை நம்மிடம் வரச் செய்யவோ அல்லது நம்மிடம் இருந்து கற்றுக்கொள்ள செய்வதற்கு மாறாக ​​ சிதறடித்துவிடும்.

1 கொரிந்தியர் 8 & 10 அதிகாரத்தில்  அப்போஸ்தலன் பவுல் சாப்பிடுவதைப் பற்றி பேசுகிறார். நாம் விரும்புவதை உண்ணும் உரிமை நமக்கு இருந்தாலும், அது என் நண்பருக்கோ அல்லது மற்றொருவருக்கோ இடறலை ஏற்படுத்தினால் அது பாவம் என்று பைபிள் சொல்கிறது.

போஜனமானது நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை.
ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள்.

. 1 கொரிந்தியர்8- 8,9

பீகாரில் உள்ள ஒரு மிஷனரி அவர்கள் தங்கள் பணித் தலத்தில் மாட்டு இறைச்சியை உண்பதில்லை என்று சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அங்கு பணிபுரியும் மிஷனரிகள் யாரும் மாட்டு இறைச்சியை உண்ணக்கூடாது என்று கடுமையான விதிகள் உள்ளன. இது அந்த மாநிலத்தில் உள்ள விசுவாசிகள் அல்லாதவர்கள் பின்பற்றும் ஒரு பாரம்பரியம், ஆனால் விசுவாசிகள் அல்லாதவர்கள் தங்களிடம் வருவதற்கு இடறலாகவோ அல்லது இவர்கள்அவர்களை அணுகுவதற்கு இடறலாகவோ இருக்க விரும்பாததால் மிஷனரிகள் சாப்பிடுவதில்லை. அவர்களை அந்த மக்கள் முதலாவது ஏற்றுக்கொள்ளாவிட்டால் சுவிசேசத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் . 1 கொரிந்தியர் 8:12 ன் படி இது ஒரு பாவம். ஒரு உணவு கூட நமக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதற்கும், மக்களை கிறிஸ்துவிடமிருந்து விலக்குவதற்கும் இடறலாக இருக்கும் என்பதை அப்போஸ்தலன் பவுல் கவனமாக விளக்குகிறார்.

இன்று மக்கள் நாம் வேலை செய்யும் இடங்களிலும், கூடுகைகளிலும், சபைகளிலும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மைக் வெளிப்படுத்துவதில் கவனமாக இருந்து நம்முடைய முன்மாதிரியாக கிறிஸ்துவை காண்பித்து பாவமற்ற வாழ்க்கை மூலமாக ஆத்துமாக்கள் நம்மை பின்பற்றும் படி செய்வோம். தொளைந்த ஆத்துமாக்களை நம்மிடமாக கூட்டி சேர்ப்போம்.

ஜெபம்

எங்கள் கிருபையுள்ள பரலோகத் பிதாவே நாங்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக இருக்க உமது குமாரனாகிய எங்கள் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவைக் கொடுத்ததற்காக தேவனே உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரே, உமது பார்வையில் குற்றமற்றவர்களாகவும் உமக்கு பிரியமாகவும் வாழவும் யாருக்கும் இடறல் அற்றவராக இருக்கவும் எங்களுக்கு கிருபையைத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.ஆமென்

Sol.Leo

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 21-10-2022

இயேசு அவனுக்குப் பிரதியுத்ரமாக, நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.

யோவான் 13:7

நம்முடைய வாழ்க்கையில் என்ன தவறு இருக்கிறது, நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை நாம் இப்பொழுது  அறியோம்.ஆனால் இந்த வசனம் ஆண்டவரை  நம்பும்படி நமக்கு நினைப்பூட்டுகிறது. இப்பொழுது நாம் கடந்து போகிற காரியங்களை அறியாமல் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் அதை அறிவோம். நம் ஆண்டவரே எல்லாவற்றையும் அறிந்தவர்  

அவர் நம்முடைய நித்திய தேவனும், நம்முடைய இரட்சகரும், நம்முடைய பிதாவுமாயிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் நம் ஆண்டவர்  மீது நாம் வைத்துள்ள  நம்பிக்கையும் விசுவாசமும்தான்.

நாம் அவரையும் அவரது திட்டத்தையும் நம்பினால், நமது வாழ்க்கைக்காக,  நாம் கனவு கண்ட அனைத்தையும் அதற்கு மேலாகவும் நமக்குத் தருவார்.அதற்கு நம்பிக்கையும், பொறுமையும் தேவை.காத்திருக்கும் நேரத்தில் அவரை ஆராதித்து வரப்போகும் ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மனத்தாழ்மையுள்ள ஊழியக்காரன் போல் மற்றவர்களின் பாதங்களைக் கழுவும் வேலையை இயேசு செய்தார்.இந்த வேலை பின்னால் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று இயேசு எல்லாருக்கும் உறுதியளிக்கிறார்.

சீடர்கள் அதிகாரத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் லூக்கா 9:54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது , ஆண்டவரே , எலியா செய்ததுபோல , வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 

மாற்கு 9 :34 ல் அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆண்டவர் எருசலேமுக்கு ராஜாவாக வருவதை கண்டு உற்சாகப்பட்டார்கள் யோவான் 12 : 12, 13ல்

ஆனால் இயேசு தன்னை அவர்களுடைய பாதங்களை கழுவி எவ்வளவாய் தாழ்த்தினார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்

என்னுடைய முப்பது முதல் ஐம்பது வயதில் என்னுடைய வாழ்க்கையில், எனக்கு ஐந்து அறுவை சிகிச்சைகள், என்னுடைய கணவருக்கு ஒரு இதய அறுவை சிகிச்சை என்று ஒன்றன் பின் ஒன்றாக ஏன் இவ்வளவு துன்பங்கள் வந்தன என்று நான் அடிக்கடி யோசித்தேன். ஆனால், சகித்து நிலைத்திருப்பதற்கும் நம்பிக்கையோடு  இருப்பதற்கும் கடவுள் எனக்கு பொறுமையைக் கொடுத்தார்.

 கடவுள் என்னை தெரிந்தெடுத்து (எரேமியா 30:21) அவரிடம் நெருங்கிவர என்னை செதுக்கினார் என்பதை என் அறுபதுகளின் பிற்பகுதியில் நான் அறிந்து கொண்டேன்.

ஆம் ,ஆண்டவருடைய பிரசன்னம் எல்லாவற்றையும் கனியுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது அவருடைய பிரசன்னம் இல்லாதது எல்லாவற்றையும்- நமது அறிவு, சந்தோஷம்,  பொருள், வலிமை போன்றவற்றை பயனற்றதாக மாற்றிவிடுகிறது-,

அவருடைய பிரசன்னத்தில் நாம் நேரத்தை செலவிடும் போது அதனுடைய முக்கியத்துவத்தை இப்போது நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு கால அளவில் நாம் அதை புரிந்து கொள்வோம் அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம். நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் அவர் நம் வாழ்வில் ஆறுதல், அர்த்தம், முக்கியத்துவம் மற்றும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக மாற்றுவார்.

தினமும் ஜெபம் செய்வதிலும், அவருடைய வார்த்தையை தியானிப்பதிலும் உள்ள நேரம் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தை நாம் மிகவும் பொக்கிஷமாகக் கருத வேண்டும், ஏனெனில்  அது நம் வாழ்வில் பெரும் பலத்தையும் ஆறுதலையும் தருகிறது.

ஜெபம்

எங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்க அனுமதித்ததற்காக அப்பா உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம், எப்போதும் எல்லாவற்றிலும் உம்மீது நம்பிக்கை வைக்க உதவி செய்யும். என் விருப்பம் அல்ல உம விருப்பம் நிறைவேற என ஜெபிக்க கிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்

Sol. Gigi Jacob.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-10-2022

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.

மத்தேயு 28:6

இதுவே இயேசுவின் உயிர்த்தெழுதலின் மிக அற்புதமான நிகழ்வு. கல்லறைக்கு வெளியே உள்ள நாடகத்தில்தான் என் கவனம். இயேசுவின் உடல் கிடத்தப்பட்டது, கல் மீண்டும் உருட்டப்பட்டு ரோமானிய ஆளுநரின் அதிகாரப்பூர்வ முத்திரையால் மூடப்பட்டுள்ளது. பிரதான ஆசாரியருடைய காவலர் ஆயுதம் ஏந்திய, நன்கு பயிற்சி பெற்ற, நவீன கால கமாண்டோ பூனைகள் 24 மணி நேரமும் கல்லறையை யாரும் கிட்ட வரமுடியாத படி நன்கு

பாதுகாத்து வந்தார்கள்.ஊடகங்களும், பத்திரிக்கையாளர்களும் சுற்றி இருந்தனர். விடியற்காலையில் இருட்டாக இருந்தபோது மகதலேனா மரியாள் கல்லறை காலியாக இருப்பதைக் கண்டாள். சேனைகளின் கர்த்தர் உள்ளே இருப்பதை இராணுவம் அறிந்திருக்கவில்லை.

வானத்தையும் பூமியையும் படைத்த அவரை மரணமோ, கல்லறையோ அல்லது பிராதன ஆசாராயரின் காவலரோ பிடிக்க முடியவில்லை ஏனென்றால், அவர் உயிர்த்தெழுவார் என்று சொன்னார், அவர் செய்தார், உயர்ந்த பிதாவின் வலது பாரிசத்தில் அவருடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் (எபிரெயர் 7:25.)

நான் கல்லறைக்குச் சென்றேன், கடவுளுக்கும் எனது முதல் மகன் பிரகாஷுக்கும் நன்றி, என் வாழ்க்கையின் சிறந்த பரிசாக இஸ்ரவேலுக்கு சென்றேன். அது உண்மையில் காலியாக இருந்தது. நான் உங்களை 1 சாமுவேல் 4 க்கு அழைத்துச் செல்கிறேன், சாமுவேலின் தலைமையில், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களுக்கு எதிராக பேரழிவுகரமான முடிவுகளுடன் போரிட்டனர், ஓப்னியும்  மற்றும் பினெகாசும்  உட்பட முப்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். போர்க்களத்தில் இருந்த கடவுளின் பேழையை பெலிஸ்தியர்கள் கைப்பற்றி அஸ்தோதிற்கு எடுத்துச் சென்றனர், இஸ்ரவேலர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியே கொண்டு வந்த இஸ்ரவேலின் கடவுளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள், ஆனால் இப்போது தாகோனைப் போன்ற கடவுள் இல்லை என்று உறுதியாக நம்பினர். பேழை தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள் அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது

தாகோன், ஒரு கல் ஒரு பயங்கரமான இரவைக் கழித்திருக்க வேண்டும் என்றாலும், இரண்டு காலை வேளைகளிலும் அது பேழைக்கு முன் சாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தது. பெலிஸ்தியர்கள் இப்போது பயந்தார்கள், கடவுளின் பேழைக்கு மனித உதவி தேவையில்லை, அந்த 7 மாதங்களில் பேழை நகர்த்தப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். கடவுளின் பேழையை இஸ்ரவேலரிடம் திருப்பிக் கொடுக்க அவர்கள் தீவிரமாக விரும்பினர். அதை ஒரு புத்தம் புதிய வண்டியில் திருப்பி அனுப்பப்பட்டது, இதுவரை நுகம் கட்டப்படாத சிறந்த கறவை மாடுகளுடன், வண்டியில் அடைத்து, இழப்பீடு அல்லது அத்துமீறல் காணிக்கையாக தங்கம் ஏற்றப்பட்டது. பசுக்கள் கர்த்தருடைய பெட்டியுடன் நேராக இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமான பாதையில் சென்றன

உயிருள்ள கடவுளின் தெய்வீக பிரசன்னம் அதில் இருந்ததால் பெலிஸ்தியர்களால் கர்த்தருடைய பேழையைத் திரும்பப் பிடிக்க முடியவில்லை. அப்போஸ்தலர் 16:25-28 குறிசொல்ல ஏவுகிற ஆவியை

 வெளியேற்றியதற்காக பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஆடைகளை கழற்றி, அடித்து உதைத்து, கால்களைக் கட்டியவாறு உள் அறைக்குள் வைத்தனர். அவர்கள் ஆண்டவரை சிறைச்சாலையில் ஆராதித்துக்கொண்டு இருந்தார்கள். ஏன் என்றால் ஆண்டவரை எழுப்பினவருடைய உயிர்தெழுததலின் வல்லமை தங்கள் மேல் வீற்றிருந்ததை அறிந்தார்கள். நள்ளிரவில் ஒரு நிலநடுக்கம் சிறைக் கதவுகளை உடைத்து அவர்களை விடுவித்தது.

ரிசுத்த ஆவியின் வல்லமை உங்களில் இருந்தால், நீங்கள் கர்த்தராகிய இயேசுவைச் சேர்ந்தவராக இருந்தால், பாதாளத்தின் எந்த பிசாசும் உங்களைத் தடுக்க முடியாது, எந்த தடையும் உங்களைத் தடுக்க முடியாது, எந்த சூழ்நிலையும் உங்களை பாதிக்காது, நம் கடவுள் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவரை ஆராதிக்க வேண்டும்

ஜெபம்

அன்புள்ள பரலோகத் தகப்பனே, நாங்கள் உம்மை எங்களுக்கு முன்பாகவும் எங்கள் வலது பாரிசத்திலும் நிறுத்தி, நீர் ஒருவரே அற்புதங்களைச் செய்கிறீர் என்பதை நாங்கள் அறிந்திருப்பதால் அசைக்கப்படாமல் இருப்போம்,

ஆமென்!    

Sol.Lalitha Menon

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-10-2022

நீங்கள் உலகத்திக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.”

மத்தேயு 5 : 14

இயேசு கிறிஸ்து நம்மை உலகிற்கு ஒளியாய் இருக்க  அழைக்கிறார். எவ்வாறு நாம் ஒளியாக மாற முடியும்? அதற்கான உன்னதமான வழி இயேசு ஒருவரே. அவர் இந்த உலகிற்கு வந்தபோது , அவரிடமிருந்து ஒளியை பெற்றுக்கொண்டு அதை நாம் பிரதிபலித்தோம்.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை

1 யோவான் 4 : 5

தன் வாயின் வார்த்தைகளினால் ஒளியை உண்டாக்குவதற்கு முன்பாகவே தேவன் ஒளியாக இருந்தார். இந்த உலகத்திற்கு  வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் வெளிச்சத்தை தரக்கூடிய உண்மையான ஒளி இயேசுகிறிஸ்துவே.

மிகச் சிறந்த ஒளியாகிய இயேசுவை நாம் பிரதிபலிக்கும் விதமாக , நாம் இந்த உலகத்திற்கு ஒளியாக மாறவேண்டும். இயேசு , மாற்கு 4 : 21, 22 ல் விளக்கை தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி , மரக்காலின் கீழாகிலும் வைக்கிறதற்கு கொண்டு வருவார்களா? வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்குவராத மறைபொருளுமில்லை” என்று சொல்கிறார்.

இந்த வசனங்களின் அர்த்தம் என்ன? யாரெல்லாம் இருளில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு வெளிச்சத்தை கொடுப்பது நமது கடமை. நாம் சிறந்த திட்டத்தோடு மக்களுடைய வாழ்வை வெளிச்சத்துக்குள் நடத்த வேண்டும்.

இயேசு விளக்கின் உவமையை சொல்லி  மக்களை உற்சாகப்படுத்தி அவருடைய சீடர்களை, பிரகாசிக்கிற ஒளியாக ஒளிந்துகொள்ளாமல் இருக்க சொல்லியிருக்கிறார்.

இந்த பிரசங்கம் இயேசுவின் சீடர்களை,அவரைப் பின்பற்றுவதற்கும் , அவருக்காக பாடுகள் அனுபவிப்பதற்கும் சவாலாகவே இருந்தது. இப்போதும் கூட, இந்த மதசார்பற்ற உலகத்தில் தேவனுடைய வார்த்தைகளை பொதுவிடத்தில் கொண்டு செல்வது  கடினமாகவே உள்ளது.தனிமனித சுதந்திரம் அதிகமாக உள்ள நாடுகளில் கூட  நம்முடைய கருத்துக்களை அழுத்தமாக சொல்ல முடியாது. எங்கெல்லாம் முடியுமோ , நாம் இந்த வெளிச்சத்தை, இரட்சிப்பின் சுவிசேஷத்தை, நியாயத்தை , மீட்பை மக்களிடம் பரப்ப வேண்டும். தேவன் சொல்லித்தந்த உதாரணங்களையும் ,படிப்பினைகளையும் ,நம் வாழ்க்கையில் கடைபிடித்து நாமே மக்களுக்கு ஒளியாக மாற வேண்டும். பரிசுத்த ஆவியானவர் என்ற எண்ணையினாலும் பரலோகவாசிகளின் அனுதின உணவான வேத வசனங்களை அடிக்கடி  உட்கொண்டும்  நம் விளக்கை எரியச் செய்ய வேண்டும்.

1பேதுரு 2 : 9  ” நீங்களோ , உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு  வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் , பரிசுத்த ஜாதியாயும் , அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

முற்காலத்தில், நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள். வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்து கொள்ளுங்கள். ஆவியின்கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்  கர்த்தருக்கு பிரியமானது இன்னதென்று சோதித்துப் பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல் , அவைகளைக் கடிந்து கொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.

எபேசியர் 5 : 8 -12

அப்போஸ்தலராகிய பவுல் மேலும் சொல்லும்போது , தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயந்து, சீர்கேடான விஷயங்களால் அல்ல , இயேசுவின் விலைமதிப்பற்ற  இரத்தத்தாலே நாம் மீட்கப்பட்டோம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்கிறார்.

” நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு , ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள் கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும் ,தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு , எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிபில்லாமலும் செய்யுங்கள்.”

பிலிப்பியர் 2 : 14 – 16

நாம் எல்லோரும் உலகிற்கு ஒளியாயிருந்து , தேவனுடைய மகிமையால் நமது விளக்கு எப்போதும்  எரியும்படி காத்துக் கொள்வோம் .

ஆமென்.

Sol.Salomi kurian

தானியேல் –II – தேவ செய்தி

நாள் 18-10-2022

  ” பின்பு அவர் ஒரு மலையின்மேல்  ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார். அவர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.” மாற்கு 3 : 13

இந்த ஒரு நிகழ்வில் , இயேசு மலையின் மேல் ஏறி உட்கார்ந்து, தமக்கு விருப்பமானவர்களை அழைத்தார் என்று அறிகிறோம். ஆனால் நமக்குத் தெரியும் நம் ஒவ்வொருவரையும் இயேசு நேசிக்கிறார் என்பது. அவர் பாரபட்சமற்றவர். நம் ஒவ்வொருவரையும் தேவன் அழைத்தது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். மேலும் அந்த வசனத்தில் மக்கள் அவரிடத்தில் வந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்று நம் தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். நம்முன்னே இப்போது இருப்பது, நாம் அவரை நேசிக்கிறோமா அல்லது அவரை விட்டு விலகி இருக்கிறோமா?

நாம் வேதாகமத்தின் மூலம்,  இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு பெரிய மக்கள் கூட்டம்  அவரை பின்தொடர்ந்தார்கள் என்று அறிகிறோம். இயேசு அடிக்கடி மலையின் மேல் ஏறி, அங்கு உட்கார்ந்து தேவனுடைய வார்த்தைகளை போதித்தார். இயேசுவை பின்பற்றியவர்கள் எல்லோரும் அவருடனே மலைமேல் ஏறி அமர்ந்தார்கள். அவருடன் செல்ல சில மக்கள் தயங்கினார்கள். ஆனால் நிறைய மக்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, தன் கவலைகளின் பொருட்டு சில அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நினைத்து காத்திருந்து திரும்பினார்கள். ஆனால் சில மக்கள் அவருடன் நடந்து ,அவருடன் உட்கார்ந்து ,அவர் செல்லும் இடங்களில் அவருடைய பிரசங்கத்தை கேட்டார்கள் . மேலும் அவருடைய அற்புதங்களையும் கண்டார்கள். இவர்கள்தான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட சீடர்கள்.

நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், வெளிப்பாடுகளையும்  பெற வேண்டுமென்றால் அவருடனே இருந்து அவரை பின்பற்றி , களைப்படையாமல் அவர்மீதுள்ள விசுவாசத்தையும் இழக்காமல்  இருக்க வேண்டும். நாம் அவருடன் அமர்ந்து அவர் பேசுவதை கேட்பது அவசியம். நாம் தேவனின் வார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து, எந்தவித சோம்பலும் களைப்பும் இல்லாமல், அவருக்கு கீழ்படிந்து  அவரைச் சார்ந்து அவருடனே வாழும்போது, அவருடைய வேலையை நம் வழியாக நிறைவேற்றுவார்.நாம் பிரசங்கிக்க தொடங்கி, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உணரும்போது தேவன் வாக்குரைத்தபடியே அற்புதங்கள் நடக்கும்.

 மாற்கு 16 : 20 ல்  ” அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள் . கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து , அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.”

  மேலும் மாற்கு 3 : 15 ல் ” வியாதிகளை குணமாக்கி பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும் , அவர்களை ஏற்படுத்தினார்”. என்ற வசனத்தின்மூலம் அறிய முடியும். தேவன், பிசாசுகளைத் துரத்தும் வல்லமையைத் தந்தார். நாம் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு தேவனின் வார்த்தைகளை பிரசங்கிக்கும்போது, இயல்பாகவே அற்புதங்கள் நடக்கும், சாத்தானை துரத்தலாம்.

எனவே நாம் இயேசுவின் சீடராக மாற விரும்பினால் , பிரசங்கிக்கவும், அற்புதங்கள் நடக்கவும், சாத்தானை துரத்தவும் , தேவனோடு நாம் அதிகநேரம் செலவளிப்பது அவசியமாகிறது.

மாற்கு 3 : 14 ல் “அப்பொழுது அவர் பன்னிரெண்டு பேரைத் தெரிந்து கொண்டு , அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் ,பிரசங்கம் பண்ணும்படியாத் தாம் அவர்களை அனுப்பவும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 அப்பா பிதாவே, இந்த உலகத்திற்காக மரித்து, உமக்காகவே வாழ நீர் எங்களுக்கு உதவியதற்காக நன்றி. கிறிஸ்துவின் ஆவிக்குள் நிலைத்திருக்கவும்  , எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் சீடருக்குரிய தகுதியோடு வாழ கிருபை புரியும்.

ஆமென்.

Sol.Richa Jain