தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-11-2022

விசுவாசிகளின் ஐக்கியம்:


” ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும் , அன்பினாலே யாதொரு தேறுதலும் , ஆவியின் யாதொரு ஐக்கியமும் , யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால் , நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து , என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.” பிலிப்பியர் 2…1- 2


இந்த வசனங்கள் ஆவிக்குரிய ஐக்கியம் என்பது என்ன என்பதை அழகாக விளக்குகிறது. அன்பு, இரக்கம், மற்றவர்களின் மீது அக்கறை போன்ற ஒரே மனநிலையோடு இருப்பதுதான் ஐக்கியத்தின் குணாதிசயங்கள். எல்லா விஷயத்திலும் ஒருவருக்கொருவரை ஏற்றுக் கொள்வது என்பது ஒரே மனநிலை ஆகாது. ஆனால் சகிப்புத் தன்மையுடன் மற்றவர்களின் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதுதான் ஒரே மனநிலை. இவையெல்லாம் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுவதற்கும், ஒருவர் மற்றவருடன் ஐக்கியமாக இருப்பதற்கும் நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் அத்தியாவசியமான குணங்கள். இயேசுகிறிஸ்துவை தங்கள் தெய்வமாக எஜமானனாக ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் கர்த்தரை ஆராதிப்பதற்கும் , கர்த்தருடைய வார்த்தைகளையும் , தங்களுடைய சாட்சிகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் கூடினார்கள். இதை ஐக்கியத்தின் தருணமாக எதிர்நோக்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2 : 42 ” அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோன்யத்திலும் , அப்பம் பிட்குதலிலும் , ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.


கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியம் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் , கிறிஸ்தவ கோட்பாடுகளை அவர்களுக்கு நினைவுபடுத்தவும் செய்தது. அப்போது அவர்களுக்கு எழுதப்பட்ட எந்த புத்தகமும் இல்லை. அதனால் கர்த்தருடைய போதனைகளை நினைவுபடுத்த கூடுகை அவசியமாக இருந்தது. பின்னர் முதலாம் நூற்றாண்டில் சுவிசேஷங்களும், நிருபங்களும் எழுதப்பட்டன. ஆனால் கையால் எழுதப்பட்ட கடிதங்களும் பிரதிகளும் அப்போது எல்லாருக்கும் கிடைக்கவில்லை. காலங்கள் செல்லச் செல்ல, நிறைய தவறான போதனைகள் , விளக்கங்கள் , சட்டங்களும் சபைகளை சிதைத்தன. புதிய ஏற்பாட்டு புத்தகங்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை பிரகடனப்படுத்தும் கூடுகைகள் இன்றும் இருக்கின்றன. எபிரேயர் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூட கிறிஸ்தவர்களின் கூடுகையைப் பற்றி நினைவுபடுத்தியுள்ளார்.


எபிரேயர் 10…24 – 25 மேலும் , அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து , சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் , ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் புத்தி சொல்ல வேண்டும்.”


பின்னாளில் , அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்தில் சீடர்களின் இந்த ஐக்கியம் , அந்தியோக்கியாவில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டது.


1யோவான் 1: 7 ” அவர் ஒளியில் இருக்கிறதைப் போல நாமும் ஒளியிலே நடந்தால் , ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். “


கிறிஸ்துவுக்குள் நமது ஐக்கியமும், அவருடைய இரத்தமும் நம்மை இரட்சிக்கும்.


சங்கீதம் 133 : 1 ” இதோ , சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?”


நம்முடைய சபையாகிய சரீரத்தில் கிறிஸ்து தலையாக இருக்கிறார். நம்முடைய பிரதான ஆசாரியரான கிறிஸ்துவின் தலையிலிருந்து அபிஷேக எண்ணெய் பாயும். இந்த அபிஷேகம் நமது உடலில் பாய்ந்து நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். நாம் ஒரே ஆவியினால் ஐக்கியப்பட்டு, ஆவியினால் வழிநடத்தப்படும் போது அங்கே அபரிமிதமான மகிழ்ச்சி இருக்கிறது. இதுதான் கிறிஸ்தவ ஐக்கியத்தின் அழகும் நன்மையும் ஆகும்.

சாட்சி


கொரோனா காலத்திற்கு முன் அணி சபை என்பது நல்ல ஒரு ஐக்கியமாக இருந்தது. அதை நாம் மகிழ்வுடன் அனுபவித்தோம். ஒருவருக்கொருவர் வெவ்வேறு வீடுகளில் சந்திப்பை மேற்கொண்டோம். நிகழ்வுகளில் ஆராதனை, கர்த்தருடைய வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது, சாட்சி சொல்வது , ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது போன்றவற்றை மகிழ்வுடன் அனுபவித்தோம்.


ஜெபம்


எங்கள் அன்புள்ள பரலோகத் தந்தையே நாங்கள் ஒருவர் ஒருவருடன் ஐக்கியமாக இருக்கும் சந்தோஷத்தை தாரும். அதன்மூலம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் , உற்சாகப்படுத்தவும் உம்முடைய விலைமதிப்பில்லாத அன்பிலும் பாதுகாப்பிலும் பலப்படுத்தவும் வல்லமையான இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம்.

ஆமென்.


Sol. சலோமி குரியன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 05-11-2022

எசாயா 49 : 24 ” பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப் பொருளை பறிக்கக் கூடுமோ? அல்லது நீதியாய் சிறைப் பட்டுப் போனவர்களை விடுவிக்கக் கூடுமோ?”

 அன்பான சகோதர சகோதரிகளே, மேற்கூறிய வசனத்தில் வலிமையானவனிடமிருந்து கொள்ளைப் பொருளை எடுக்க முடியுமா என்று எழுதப்பட்டிருக்கிறது. நான் உங்களிடம் இந்த கேள்வியைக் கேட்கிறேன். உங்களுடைய பதில் என்ன?  ஆம் என்பதே இதற்குப் பதில்.  சர்வவல்லவர் இந்த உலகத்தை ஆளுகை செய்வதற்கான அதிகாரத்தை நம்மிடம் கொடுத்திருக்கிறார். நம்முடைய வழிகள் கர்த்தருடைய வழிகளாக இருந்தால் நாம் திகிலடையத் தேவையில்லை.

இதற்கு பழைய ஏற்பாட்டில் இருந்து மூன்று உதாரணங்களை நாம் கானலாம்

1 . ஆபிரகாமின் வெற்றி

ஆதியாகமம் 14 : 16  ” சகல பொருட்களையும் திருப்பி கொண்டு வந்தான். தன் சகோதரனாகிய லோத்தையும் அவனுடைய பொருட்களையும், ஸ்திரீகளையும் ஜனங்களையும் திருப்பி கொண்டுவந்தான்.”

 இந்த 14 ம் அதிகாரத்திற்குள் சென்றோமேயானால் சித்திம் பள்ளத்தாக்கில்  ராஜாக்களுக்கிடையில் போர் நடந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் தப்பியோடினார்கள். அவர்களுடைய எதிரிகள் எல்லோரையும் சிறைபிடித்து எல்லா பொருட்களையும் கொண்டு சென்றார்கள். அவர்கள் ஆபிரகாமின் சகோதரர் லோத்தையும் அவனுடைய பொருட்களையும் கொண்டு சென்றார்கள். என்ன ஒரு கடினமான சூழ்நிலை? ஆபிரகாம் இதைப்பற்றி கேள்விப்பட்ட போது , அந்த ராஜாக்களை முறியடித்து அவர்களால் பிடிக்கப்பட்ட அத்தனை பொருட்களையும் திருப்பிக் கொண்டுவந்தார். அவர் தன்னுடைய 318  ஆட்களையும் கொண்டு எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டுவந்தார். போர் முடிந்து திரும்பிய பிறகு மெல்கிசதேக்கிடமிருந்து பரலோக ஆசீர்வாதங்களைப் பெற்றார். என்ன ஒரு அதிசயமான கடவுள் நமக்கு இருக்கிறார். சர்வவல்லமையுள்ள கர்த்தர் நமக்காக போராடுவார். அவர் நமக்கு சூழ்நிலைகளை கடந்து வெற்றியையும் பரலோக ஆசீர்வாதங்களையும் தருவார்.

2 . தாவீதும் கோலியாத்தும்

1 சாமுவேல் 17 : 51 ” ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று , அவன் பட்டயத்தை எடுத்து , அதை அவன் உறையிலிருந்து உருவி , அவனைக் கொன்று , அதினாலே அவன் தலையை வெட்டிப் போட்டான். அபாபொழுது தங்கள் வீரன் செத்துப் போனான் என்று பெலிஸ்தர் கண்டு ஓடிப்போனார்கள். ”

இந்த பகுதியில் பெலிஸ்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஏலா பள்ளத்தாக்கில் நடந்த யுத்தத்தை பற்றி கூறியுள்ளது.பெலிஸ்தியர்கள் சார்பாக நின்ற கோலியாத் மிகவும் பலசாலி.  அவன்  இஸ்ரவேலர்களின் நம்பிக்கையை அழிக்கும்படியாக அவதூறான வார்த்தைகளை பேசினான். கடைசியில் தாவீது அந்த பள்ளத்தாக்கை அடைந்த போது , கோலியாத் உச்சரித்த வார்த்தைகளை கேட்டான். தேவ மனிதனாக அபிஷேகம் பண்ணப்பட்டவனாக,  தன்னைத்தானே பலப்படுத்திக் கொண்டு, இஸ்ரவேலருக்காக போரிட்டு வெற்றியும் பெற்றான்.

3. சிக்லாகில் தாவீது

1 சாமுவேல் 30: 18,19  ” அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல், எல்லாவற்றையும் தாவீது திருப்பிகொண்டான்.

 இங்கு அமலேக்கியர்கள் சிக்லாக்பள்ளத்தாக்கை அழித்து எல்லா மனிதர்களையும் அவர்களுக்குள்ள பொருட்களையும் சிறைபிடித்தார்கள். தாவீது மற்றொரு போருக்கு சென்றிருந்தார். தாவீது திரும்பிய போது தான் மிகவும் நெருக்கடியில் இருப்பதை அறிந்து கொண்டார்.  அவர் தன்னைத்தானே கர்த்தருக்குள் திடப்படுத்திக் கொண்டு கர்த்தரிடம் கேட்டான். கர்த்தரிடமிருந்து வந்த தெளிவான வழிநடத்துதலின் பேரில் , எதிரிகளை தோற்கடித்து தன்னிடமிருந்து களவு செய்யப்பட்ட எல்லாவற்றையும் திரும்பக் கொண்டுவந்தார். தன் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சகோதர, சகோதரிகளே பிரச்சனைகளிலிருந்து , நம்மை பாதுகாக்கின்ற வல்லமையான கர்த்தரை நாம் சேவிக்கின்றோம். நம்மிடமிருந்து திருடப்பட்ட எல்லாவற்றையும் நாம் திரும்ப பெறும் பொருட்டு , நம்மை நாமே பலப்படுத்திக்கொண்டு போருக்கு செல்ல வேண்டும்.  இதைத்தான் கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். சாத்தான்   நம்முடைய ஆராதனை நேரத்தை, வேத வாசிப்பு நேரத்தை,  தியானிக்கும் நேரத்தை திருடலாம். நமக்கு பயத்தையும் ,அவநம்பிக்கையையும் தரலாம்.

எச்சரிக்கையாயிருக்க வேண்டும். கர்த்தருக்குள் நாம் நம்மை பலப்படுத்த வேண்டும். ஒரு நாளும் இதை கைவிடக்கூடாது. மேலும் யுத்தத்திற்கு செல்ல கர்த்தரிடமிருந்து வார்த்தையை பெற வேண்டும். நிறைய  நேரங்களில் நாம் தோற்கடிக்கப்படுகிறோம். காரணம், குறிப்பிட்ட சூழ்நிலையில் கர்த்தருக்கு முன்பாக நேரம் செலவழிப்பதில்லை.

பரலோகத் தந்தையே , உமக்கு முன்பாக வருகிறோம் . எங்களால் முடியாது என்ற எண்ணங்களுக்காக எங்களை மன்னிக்க வேண்டுகிறோம். மேற்கூறியவற்றிலிருந்து  , நீர் எங்களோடு இருந்தால் எல்லாம் முடியும் என்று புரிந்து கொள்கிறோம். எங்களுடைய சூழ்நிலைகளை  களையவும், அவைகளை கடந்து செல்லவும் , எங்களை பலப்படுத்துவதற்கு இந்த நாளில் புதிய அபிஷேகத்தால் நிரப்பும். எங்களுடைய  எதிர்மறையான சிந்தனைகளையும், தவறான நம்பிக்கைகளையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே கண்டிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வழியாக எங்கள் சூழ்நிலைகளின் மீது நாங்கள் வெற்றி பெறவும், நீர் எங்களுக்காக செய்த எல்லாவற்றையும் உம்முடைய நாமத்தின் பெயரால் ஏற்றுக் கொள்கிறோம். 
ஆமென்.

 Sol. Dr. கமலின் விஜி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-11-2022

அப்போஸ்தலர் 2 : 38  ” பேதுரு அவர்களை நோக்கி , நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.”

2 கொரிந்தியர் 3 : 17   “கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுண்டு. “

அப்போஸ்தலர் 5 : 32  “இந்த சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்கு கீழ்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.”

நாம் நமது பாவங்களுக்காக வருந்தி , கர்த்தரிடம் அவைகளுக்காக மன்னிப்பு கேட்டு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். பிறகு கர்த்தர் நம் பாவங்களை எல்லாம் மன்னித்து பரிசுத்த ஆவியானவர் வழியாக நம்மை ஆசீர்வதிப்பார்.

யாரெல்லாம் கர்த்தருக்கு கீழ்படிந்து அவருடைய  வார்த்தையின்படி வாழ்கிறார்களோ அவர்களுக்கே பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவார்.

கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட்ட  பரிசுத்த ஆவியானவர் நமது நண்பர் , துணையானவர், நமக்காக வாதாடுபவர். அவர் நமக்கு உதவி செய்வார். நம்மோடு இருப்பார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவார், எல்லாவற்றையும் நமக்கு கற்றுக் கொடுப்பார். ஒவ்வொன்றையும் நமக்கு நினைவூட்டுவார்.

நாம் , நம்மை முழுவதுமாக பிரிசுத்த ஆவியானவருக்கு  அர்ப்பணித்து , அவர் நம்மை பற்றிக் கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும்.

நாம் அவருடன் நல்ல வலுவான உறவை ஏற்படுத்திக் கொண்டால் , நாம் என்ன செய்யவேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் , என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதைப்பற்றி சொல்லிக் கொடுப்பார்.

சங்கீதம் 143 : 10  ” உமக்கு பிரியமானதைச் செய்ய எனக்கு போதித்தருளும் , நீரே என் தேவன்,உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையிலே வழி நடத்துவாராக. “

பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையை பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது , அன்பு, சந்தோஷம், பொறுமை, இரக்கம், நற்குணம், விசுவாசம் , சாந்தம் , இச்சையடக்கம்  போன்ற நற்கனிகளை நம் வாழ்க்கையில் நமக்கு தருவார்.

நாம் கர்த்தராகிய ஆவியானவரிடம் நம்மை அர்ப்பணிக்கும் போது , கர்த்தருடைய விருப்பத்தினை  நிறைவேற்ற வேண்டும்  என்று ஜெபிக்க வேண்டும். அப்போது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் பாதையை செம்மைப்படுத்தி, நம்முடைய இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

பரிசுத்த ஆவியானவர் நம்மை  வழிநடத்துவதனால்,நாம் கர்த்தருக்கு உண்மையும் விசுவாசம் உள்ளவர்களாகவும் இருந்து  , நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்காக,  அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருப்போம்.

ஜெபம்:

பரலோகத் தந்தையே, இந்த செய்தியை வாசிக்கின்ற யாராக இருந்தாலும்,  அவர்கள் தங்களையும்,  தங்களுடைய விருப்பத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்து   வாழ , அவர்களோடு இருந்து அவர்களுக்கு உதவி செய்யும்படியாக ஜெபிக்கிறேன். இதன்மூலம் அவர்களை வல்லமையாக பயன்படுத்தி , ஏராளமாக ஆசீர்வதிக்கும்படி
இயேசுவின்  நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.
ஆமென்

Sol.Dr.Himakshi

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-11-2022

யோவான் 14 : 21  ” என் கற்பனைகளை பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்கிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான். என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான். நானும் அவனில் அன்பாயிருந்து , அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”  என்று கூறுகிறது. 

இந்த வசனங்கள் , இயேசு, தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பினால்,  அவரைப் பின்பற்றி அவரது வார்த்தைகளுக்கு நாம் கீழ்படிய வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது. இப்போது நாம்,கர்த்தர்  தம்முடைய வார்த்தைகளின் வழியாக என்ன கட்டளைகளை கொடுத்திருக்கிறார் என்பதைக் காணலாம். முதல் கட்டளை நமக்குத் தெரியும்  மாற்கு 12… 29 – 32 வசனங்களில், ” இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன்முழு ஆத்துமாவோடும்   முழு இருதயத்தோடும் அன்பு கூறுவாயாக “. என்று கூறப்பட்டுள்ளது. 

வேதத்தில் , இயேசுகிறிஸ்து தம்மையே முழுமையாக பிதாவாகிய கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவருக்கு கீழ்படிந்தார். அதன் பலனாக  கர்த்தர், தங்கள் கடைசி மூச்சுவரை  கீழ்படிந்திருக்கிற 12 சீடர்களை அவருக்கு கொடுத்து ஆசீர்வதித்தார். இயேசு தன்னுடைய வாழ்க்கையை பிதாவாகிய கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்ததைப் போலவே, அதே வழியில் அவருடைய சீடர்களும் இயேசுவுக்காக எதையும் செய்யும் தைரியத்தைப் பெற முடிந்தது.

இயேசு மக்களிடம் பரலோக ராஜ்ஜியம் பற்றி ,   கர்த்தருடைய வார்த்தைகள்  வழியாகப் பேசும் போதும் அறிவை உணர்த்தும் வசந்தின் வழிகாய பேசி தன்னை முழுவதுமாக தாழ்த்தியதை நாம் வேதத்தில் காண்கிறோம். அவர் எப்பொழுதும் பரிசேயர்களிடமும் அறிஞர்களிடமும் கர்த்தரின் வார்த்தைகள் வழியாகவே பேசினார். அவர் நிகழ்த்திக் கொண்டிருந்த அற்புதங்களையும் அதிசயங்களயும் , அவர் தானே செய்வதாக பெருமை பேசுவதை ஒருபோதும் காணவில்லை.

அவர் எப்பொழுதும் ,  கர்த்தருடைய வார்த்தைகளுக்கு  கீழ்படிய வேண்டும், கர்த்தருடைய வழிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் , நம்முடைய சொந்த வழிகளை அல்ல என்று நம்மை வலியுறுத்தினார். இயேசு எப்போதுமே , தன்னுடைய ஆற்றலை  கீழ்படிதலிலும் கர்த்தர் மீதுள்ள பக்தியிலுமே காட்டினார். அவருடைய பக்தியையும் அர்ப்பணிப்பையும் தன்னுடைய ஒரே பிதாவின்  மேலேயே வைத்திருந்தார். அவர்கள் ஒருவராகவே இருந்தனர். இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர்.  அவருடைய அந்த கீழ்படிதலும் அர்ப்பணிப்பும் அவர் மூலமாக அவருடைய சீடர்களிடமும் இருந்ததால் கர்த்தருக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

யோவான் 14 : 12  ” என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வான். என்று சொல்கிறது.

யோவான்  14 : 23  ” இயேசு அவனுக்கு பிரதியுத்திரமாக , ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் , அவன் என் வசனத்தைக் கைக் கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார், நாங்கள் அவனிடத்தில் வந்து வாசம் பண்ணுவோம்.” என்று சொல்கிறது.

நமது வாழ்க்கை, நமது நம்பிக்கை , நமது அமைதி, நமது சந்தோஷம் எல்லாம் கிறிஸ்துவுக்கு  கீழ்படிந்து  நடந்தால் மட்டுமே, புகழப்படும். நமது  சுயபுத்தியினால் நடந்தால்  அல்ல.

 பிதாவே, என் கர்த்தாவே உமது வல்லமை மிக்க கரங்களில் என்னை ஒப்படைக்கிறேன். உமக்கு உகந்த வழிகளில் நடக்கவும்  என்னுடைய வாழ்க்கையின் முடிவுகளை என் சுய புத்தியினால் எடுக்காமல்   உம்மையும் பரிசுத்த ஆவியானவரையும் சார்ந்து எடுக்கவும் உதவி செய்யும்.
ஆமென்.

Sol. குஷி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-11-2022


லூக்கா 14 : 26, 27
” யாதொருவன் என்னிடத்தில் வந்து , தன் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்.
தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான். “


கர்த்தர் இந்த வசனங்களின் வழியாக பேசும்பொழுது , ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் அவர் சுமந்த பெரிய சிலுவையை எனக்கு காண்பித்தார். எல்லா மனித உறவுகளும் இந்த பூமியில் இருக்கும்வரை மட்டுமே. சிலுவையின் உண்மையான ஆழத்தை புரிந்து கொள்ள எனக்கு சில ஆண்டுகள் ஆனது. என்னுடைய இதயத்தின் ஆலயத்தில் உள்ள கர்த்தரின் பாதத்தில் இதை நான் முணுமுணுத்தபோது அவருடைய காலடியில் ஒரு தூசியாக என் இருதயம் இருந்தது. அந்த உண்மையான வெளிப்பாடு என்மீது பலமாக தோன்றியது.

நான் என்னுடைய சுய த்தை(” நான்” ) சிலுவையில் ஆணி அடித்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு சுவாசத்திலும் நன்றியுடனும் பணிவுடனும் நம்மை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.
(ரோமர் 12. 1) ” .
என் சிலுவையை மத்தேயு 11 : 28 – 30 சொல்லப்பட்டபடி செய்யமால் என் சிலுவையை சுமக்க முடியாது. 24X7 கர்த்தருடைய இளைப்பாறுதலில் நிலைத்திருக்க என்னுடைய பாரத்தையும்(அப்பாவை, அம்மாவை, மகனை மகளை, என் பெருமையை, என் சுய நீதியை, விக்ரகங்களாய் நம் வாழ்வில் இருக்கிற மனிதர்களை அல்லது அபிஷேகம் பெற்ற தேவ ஊழியர்கள்(ரோமர் 1 : 22, 23) , நம் பொறாமை, மன்னியாமை, நம்முடைய பணம் அல்லது பதவி) எல்லாவற்றையும் அவரிடத்தில்ஒப்புக்கொடுக்க அல்லது சரணடைய வேண்டும்.

யாத்ராகமம் 20 : 4,5
மேலே வானத்திலும் , கீழே பூமியிலும் பூமியின்கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்.
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து என்னை பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கறவனாயிருக்கிறேன்.”


கலாத்தியர் 5 : 1 ஆனபடியினாலே நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்கு உட்படாமல் , கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையில் நிலை கொண்டிருங்கள்.


கலாத்தியர் 5 : 24 “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாமிசத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.”

அவரது விருப்பத்தை மட்டுமே தேடவும் கண்டுபிடிக்கவும் கீழ்படியவும் செய்யவேண்டும்.


2022 அக்டோபர் மாதம் 19ம் தேதி கர்த்தர் ஒரு வெளிப்பாட்டைத் தந்தார். காலை ஆராதனை தேவ செய்தியின் போது Sol. அமரஜித் கவுர் மூலமாக என்னோடு பேசினார். கர்த்தர் அதை தன் சிலுவையோடு ஒப்பிட்டு எல்லா ஆத்துமாக்களுக்காக அவர் கொண்ட பாரமும் அன்பும் அவர் இந்த உலகத்திற்கு வருவதற்கான நோக்கமாக இருந்தது.

நன்றி ஆண்டவரே காணாமல் போன ஆடுகளை நீர் தேடி வந்ததற்காக.உமக்கே எல்லா துதியும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

Sol.Jasmine James

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-11-2022

நமது விசுவாசம் மலைகளை பெயர்க்கும்.

நாம் அனைவரும் நமது வாழ்க்கையில் ஏமாற்றம் அளிக்கக்கூடிய, மன அழுத்தம் ஏற்படக்கூடிய பல சூழ்நிலைகளை அனுபவித்திருப்போம்.அவை, வேலை இழப்பாக இருக்கலாம், நாம் நேசித்த ஒருவர் இறந்திருக்கலாம், நம் வாழ்க்கை எங்கே செல்கிறது என்ற குழப்பம் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் உத்வேகம் அளிக்கக்கூடிய வேத வசனங்கள வாசிப்பது, நம்மை கடினமான நிலைகளிலும் ஆவிக்குரிய வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு மிகச் சிறந்த வழியாகும். கர்த்தரின் வார்த்தைகள் அதனை வாசிப்பவர்களுக்கு பலமும் ,  கொந்தளிப்பான சூழ்நிலைகளின் மத்தியில் தைரியம் உள்ளவர்களாகவும் இருக்க , ஆழமாக உற்சாகப்படுத்தும் வழிகளையும் கொண்டுள்ளது. இந்த உத்வேகம் தரும் மேற்கோள்கள் நமது காலை நேர ஜெபங்களுக்கு தொடக்கப்புள்ளியாகவும் நமது உரையாடல்களுக்கு நம்பிக்கை  அளிப்பதாகவும் இருக்கிறது.

ரோமர் 8 : 38,39

மரணமானாலும் , ஜீவனானாலும்,தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும்,உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டுப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

2 கொரிந்தியர் 4 : 16 – 18

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை.எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனிதனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு , அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் , மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது.ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள் , காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

எபேசியர் 3 : 20

” நாம் வேண்டிக் கொள்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்கிற வல்லவராகிய அவருக்கு,பயம் வேண்டாம் ,

இந்த வல்லமையான வேத வசனங்கள் , நம்முடைய பயங்களை விலக்கவும், பலமாகவும் தைரியமாகவும் இருக்க நமக்கு தேவை. கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கை , நாம் பயனுள்ளவர்களாகவும், பிறருக்காக தியாகம் செய்வதற்கும் தூண்டுகிறது. அன்பு பயத்திலிருந்து நம்மை காத்து பலமிக்கவர்களாக மாற்றுகிறது. இந்த வேத வசனங்களை , நம் காலை ஜெபத்திலும் , நாம் படுக்கைக்கு செல்லும் முன்பும் , சென்ற பின்பும் நமது கடினமான நாளிலும் உபயோகிக்க வேண்டும்.

எல்லாமே சாத்தியம்

நாம் சோர்வாகவோ , நம்பிக்கையின்மையாகவோ உணரும்போது கர்த்தருடன் தொடர்பு கொள்வது நம்மை உற்சாகப்படுத்தும். மாற்கும் மத்தேயுவும் நாம் கர்த்தருடன் இருந்தால் எதுவும் சாத்தியமே  என்று அறிவித்தார்கள். நாம் என்ன செய்தாலும் கர்த்தர் பலத்தை தருகிறார்.

மாற்கு 10 : 27

இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான் , தேவனால் இது கூடாததல்ல, தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

மத்தேயு 19 : 26

” இயேசு, அவர்களைப் பார்த்து, மனுஷரால் இது கூடாததுதான் , தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

பிலிப்பியர் 4 : 13

” என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பலனுண்டு.

மேற்கூறிய இந்த வசனங்கள் எல்லாம் நம்முடைய விசுவாசம் மலைகளை பெயர்க்கும் என்று கூறுகிறது.  அதாவது எந்த சூழ்நிலை என்றாலும் , எந்த வித பிரச்சனைகளை சந்தித்தாலும் , நாம் வேத வசனங்களை விசுவசித்தால் அல்லது வேதத்தை வாசித்தால் அல்லது கர்த்தருடைய வார்த்தைகளை தியானித்தால் , எல்லாமே கர்த்தரால் சாத்தியமாகும்.  விசுவாசத்தோடு நம் தேவைகளுக்காக  ஜெபித்தால் நமக்காக  எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியும்.

முடிவுரை

விசுவாத்தின் முக்கியம்

அப்போஸ்தலராகிய பவுல்  1 பேதுரு 1 : 7 ல் விசுவாசத்தைப்பற்றி குறிப்படும்போது “ பொன்னைப் பார்க்கிலும் உங்கள் விசுவாசம் அதிக விலையேறப்பெற்றதாக இருக்கிறது ” என்று சொல்கிறார்.  நமது வாழ்க்கையில் நாம் எதைப் பெறுவோம் என்று நம்பினாலும், கர்த்தர்மேல் வைத்துள்ள விசுவாசத்தைவிட எதுவுமே முக்கியம் அல்ல.நாம் விசுவாசத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நினைவுகூறும் போது கீழ்கண்ட வேதவசனங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

எபிரேயர் 11 : 6 விசுவாசம் தேவனை பிரியப்படுத்துகிறது

ரோமர் 5 : 1 விசுவாசம் நம்மை நீதிமான்களாக ஆக்குகிறது.

கலாத்தியர் 3 : 26 விசுவாசம் நம்மை கர்த்தருடைய புத்திரர்களாக்குகிறது.

எபேசியர் 3 : 17 விசுவாசம் கர்த்தர் நம்முடைய இருதயங்களில் வாசமாயிருக்கச் செய்கிறது.

எபிரேயர் 11 : 3 விசுவாசம் நமக்கு புரிதலை தருகிறது.

2  கொரிந்தியர் 5 : 7 விசுவாசம்  நம் வாழ்க்கைத் தரமாக இருக்கிறது.

கொலோசியர் 2 : 7 விசுவாசம் உறுதியை நமக்கு தருகிறது.

எபேசியர் 6 : 16 விசுவாசம் நம்மை பாதுகாக்கும் கேடகமாகிறது.

1 யோவான் 5 : 4 விசுவாசம் நம்மை இந்த உலகத்தை ஜெயிக்க வைக்கிறது.

1 பேதுரு 1 : 9 விசுவாசம் நம்மை பாதுகாக்கிறது.

முடிவாக, இந்த உலகத்தில் நமது முடிவு காலம் நெருங்கி வருகையில் , அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 4 : 7 ல் சொன்னதைப்போல ” நல்ல போராட்டத்தை போராடினேன் , ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன் ” என்று சொன்ன அதே  வாக்குறுதியை  நம்மால் சொல்ல முடியுமா? நாம் விசுவாசத்தை காத்துக் கொண்டால் 2 தீமோத்தேயு 4 : 8 ல் சொன்னபடி நீதியின் கிரீடத்தை பரிசாக பெற முடியும். 

வெளிப்படுத்துதல் 2 : 10 ல் சொன்னபடி  மரணபரியந்தம் வரை உண்மையாக இருந்தால் ஜீவகிரீடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.  எனவே கர்த்தர் தரும் இந்த பரிசினை ஒருநாளும் தவறவிடக் கூடாது.

Sol. திருமதி. சர்கம்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 31-10-2022

மீட்பு, கர்த்தரின் கிருபை.

மீட்பு என்பது கர்த்தருடைய கிருபையின் வெளிப்பாடு. எனவே இதற்காக நாம் எப்போதும் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கொலோசெயர் 1..12 – 14   ” ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு , நம்மை தகுதியுள்ளவனாக்கினவரும் , இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி , தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம்.

அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே , பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

கர்த்தர் மனிதனுடைய உதவிக்காகவே வந்தார்.ஏனென்றால் மனிதனால் இதை தனியாக செய்ய முடியாது . எனவே மனிதனுடைய ஸ்தானத்திலிருந்து மரித்தார். சட்டத்தை உடைத்ததற்கான தண்டனையை  செலுத்தினார்.இப்போது மனிதன் பரிசுத்த தேவனுக்கு முன்பாக நின்று தன்னுடைய பாவங்களுக்காக மன்னிப்பு பெறவும் , அவரிடமிருந்து கிருபையை பெறவும் அவனுக்கு உரிமை இருக்கிறது. நாம் நமது குற்ற உணர்விலிருந்து விடுதலை பெறலாம் காரணம், இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்.

ரோமர் 5 : 8நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததனாலே , தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

அவர் நம்முடைய பாவங்களுக்காக , விலைமதிப்பில்லாத கிரயத்தை செலுத்தி, நம்மை அவருடைய தெய்வீக குடும்பத்திற்குள் திரும்பவும் கொண்டுவந்து சேர்த்தார். இயேசு மொத்த உலகத்திற்காகவும் இந்த பூமியில் மனிதனாகப் பிறந்து மனிதனுடைய பாவங்களுக்காக மரித்தார்.

கர்த்தர் மனிதனுடைய பாவத்தை அறியாமல் இருக்கவில்லை. மனிதனை படைப்பதற்கு முன்பே , தம்முடைய குமாரனை நமக்கு பரிசாகத் தந்து கடைசி நாட்களில் அதை வெளிப்படுத்தினார்.  மனிதனுடைய வீழ்ச்சிக்குப் பிறகு கர்த்தருடைய நோக்கம் இந்த உலகத்தை தம்முடைய பிள்ளைகளால் நிரப்பி அவர்களிடம் கர்த்தரின் சுபாவத்தின் அழகை பிரதிபலிக்கச் செய்ததாக இருந்தது. இவ்வாறாக, ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு , உடனடியாக மீட்பை செயல்படத் தொடங்குவது கர்த்தரின் திட்டமாக இருந்தது.

ஆதியாகமம்  3…14,15 ல் கர்த்தர் சாத்தானை முன்னிட்டு இரண்டுவாக்குத்தத்தங்களை கொடுத்தார்

1 . சாத்தான்,; நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். . இது இயேசுவைக் குறித்த தீர்க்கத்தரிசனம்.

2 . அவர் சாத்தானுடைய தலையை நசுக்குவார்.

குதிங்காலை நசுக்குவாய்  என்பது இயேசுவினுடைய சிலுவை மரணத்தையும் சாவிலிருந்து உயிர்த்ததையும் குறிக்கும்.

தலையை நசுக்குவது என்பது, இயேசு  “தலைமையை ” நசுக்குவது . அதாவது சாத்தானுடைய ஆட்சி, அதிகாரம் , சக்தி  எல்லாவற்றையும் நசுக்கினார். மேலும் தன்னுடைய சிலுவை மரணத்தின் வழியாக சாத்தானின் கிரீடத்தையும் பறித்தார். மனித குலம் மீட்டெடுக்கப்பட்டது.பரலோகத்தின் அரசாட்சி பூமியின் மேல் வரும். காரணம்,

இயேசு இப்போதும் எப்போதும் வெற்றிபெற்றவர். உண்மையான மீட்பு கர்த்தருடைய கிருபையின் மிகப் பெரிய அதிசயம். மேலும்  பாவ இயல்புக்குட்பட்ட மனிதனுக்காக பிதா மற்றும் மீட்பராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக கிடைத்த அன்பு மற்றும் கிருபை.

கர்த்தருடைய பரிசை ஏற்றுக் கொள்ளுதல்.

நாம் கண்டிப்பாக  நம்முடைய மீட்பராகிய இயேசு வழியாக கர்த்தரின் கிருபையை ஏற்றுக்கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் வேண்டும்.  அவரால் மட்டுமே பிரிவினையிலிருந்தும்  கண்டனத்திலிருந்தும் நம்மை காப்பாற்றமுடியும். நாம் கர்த்தருடைய அன்பை தவறவிட்டால் நம் பரலோக வாழ்க்கை முழுவதையும் இழந்துவிடுவோம்.

யோவான் 1 : 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

இரட்சிப்பின் இரண்டு பக்கங்கள்

1 .  நம் பாவங்களுக்காக கர்த்தர் நம்மை உணர்த்துவார். பாவத்தின் சம்பளம் மரணம். பிதாவினுடைய கிருபை , பயங்கரமான சிலுவை மரணத்தினால் இறந்த தம்முடைய குமாரன் இயேசுவின் மூலமாக வரும்.

2 . எனவே நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு நமக்கு மீட்பு தேவை என்பதை உணர்ந்து,   இரட்சகராக நம் இருதயத்திற்குள் வர வேண்டும் என்று இயேசுவிடம் கேட்பதன் மூலம் கர்த்தரின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். நம்முடைய மரண வழியிலிருந்து நித்திய ஜீவனை அடைவதற்கு அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் பெற வேண்டும். அதற்கு முக்கிய தேவை இரட்சிப்பு. எனவே நாம் பரிசுத்த ஆவியை பெறுவதற்கு, கர்த்தரோடு ஒன்றிணைய மீட்டெடுக்கப்பட வேண்டும்.  ஆமென்.

சாட்சி

என்னுடைய தாத்தாவும் பாட்டியும் இரட்சிக்கப்பட்டு கர்த்தரை ஏற்றுக்கொண்ட பின் போதகர்களாக மாறினார்கள்.  அவர்களுக்கு பிந்தைய ஐந்து தலைமுறையினரும் கர்த்தரை விசுவசித்து ஏற்றுக்கொண்டு பாதுகாக்கப்பட்டனர்.

ஜெபம்

பிதாவே  சிலுவையில் எங்களுக்காக சாதித்ததற்கும் ,எங்களை உமது பிள்ளைகளாக தெரிந்தெடுத்ததற்காகவும் எப்பொழுதும் உண்மையுள்ளவர்களாகவும் நன்றி உள்ளவர்களாகவும் இருக்கிறோம். நாங்கள் உமது கோபத்திற்காக அல்ல, உமது கிருபைக்காகவும் இரட்சிப்பிற்காகவுமே இருக்கிறோம். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு உமது இறப்பின் மூலம் விலை கொடுத்துள்ளீர். ஆமென்.

Sol. நொரீன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 30-10-2022

ஒரு சாதாரண மனிதன் தனது வாழ்க்கையில் சவால்களை சந்திக்கும்போது , பலமுறை தன் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள தவறிவிடுகிறார். ஆனால் இயேசுகிறிஸ்து நம்முடைய கடினமான நேரங்களில் நமக்காக கவனம் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் அதைத் தாங்கக்கூடிய பலத்தையும் தருவதனால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்.

எபிரேயர் 2 : 18 ல் ” ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதனாலே அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். ” என்று எழுதப்பட்டிருக்கிறது .


நமக்குத் தெரியும் இயேசு இந்த உலகத்தில் இருக்கும்போது நம்முடைய நிமித்தம் அவர் எவ்வளவு துன்பப்பட்டார் என்று. தனக்கு கடினமானதாக இருந்த போதிலும் நமக்காக இந்த பாத்திரத்தை குடித்தார். அவ்வாரே தம்முடைய பிள்ளைகளும் இந்த பூமியில் இருக்கும்போது என்ன எதிர்கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார். அவர்கள் என்ன சோதனைக்குட்படுவார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறார். நாம் என்ன எதிர்கொள்கிறோமோ அதைப்பற்றி ஒரு நாளும் கவலை கொள்ள வேண்டியதில்லை. ஆனால் நாம் தனியாக இல்லை வல்லமைமிக்க கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்று விசுவசிக்க வேண்டும். அவர் எப்போதும் நம்மை கவனித்துக் கொண்டும் , நமக்காகவும் நின்றுகொண்டிருக்கிறார். நம்முடைய குழந்தைகள் பிரச்சனைகளில் இருக்கும்போது நாம் அவர்களை தனியாக விடுவதில்லை. அதுபோலவே கர்த்தரும் நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை. நமது கடினமான நேரங்களில் நாம் அவரை நோக்கி ஜெபிக்க வேண்டுமே தவிர கவலைப்படக்கூடாது.


என்னுடைய சொந்த அனுபவத்தை கூறுகிறேன். ஒருமுறை என் வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டேன். ஆனால் எனக்கு நடந்த எல்லாவற்றையும் பற்றி தொடர்ந்து கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன். என்னைப் பலப்படுத்துகிறவரும், எனக்கு தைரியம் கொடுப்பவரும் , என்னை பின்னாலிருந்து பார்த்துக் கொள்பவரும் அவர் ஒருவரே.


சங்கீதம் 20 : 1,2 ” ஆபத்து நாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக,
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசை அனுப்பி , சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக ” என்று சொல்கிறது.


கர்த்தர் நம்முடைய இருதயத்தை நன்றாக அறிந்திருக்கிறார். அவரை நாம் அழைக்கும் போது நமக்கு பதில் தருகிறார். அவர் வாக்குத் தத்தத்தை ஒருபோதும் உடைப்பதில்லை.அவரது வாக்குத்தத்தம் என்றென்றும் உள்ளவை. நம் வாழ்க்கையில் என்ன நிலைமை வந்தாலும் நாம் கவலைப்படக்கூடாது. ஆனால் எப்போதும் அவரது வார்த்தைகளை பற்றிக் கொள்ள வேண்டும். நாம் ஒருபோதும் , கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதை மறக்கக் கூடாது. நாம் தனிமையில் இல்லை.


கர்த்தருடைய வார்த்தையின்படி, அனைவருடைய வாழ்க்கையிலும் சவால்கள் என்பவை ஒரு முக்கியத்துவத்தை கொண்டுள்ளன. கர்த்தர் அவற்றை நம்முடைய வாழ்க்கையில் , பரிசுத்த ஆவியின் கனிகளை வளர்த்துக் கொள்ளவும் , கர்த்தருடைய வார்த்தையில் வளரவும் , ஆவியில் அதிகமாக முதிர்ச்சி அடையவும் அனுமதிக்கிறார். கடினமான சூழ்நிலைகள் நம்மை ஆவியில் பலப்படுத்துகின்றன. அவை கர்த்தருடனான நெருக்கத்தை தருகின்றன.

ஜெபம்


பிதாவே, என்னை முழுவதுமாக உம்முடைய திருக் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னுடைய பிரச்சனைகளின் போது என்னுடன் கூட இருப்பதற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே உம்முடைய தெய்வீக வழிகாட்டுதலுக்கு நன்றி.

ஆமென்.


Sol. ரேணு சோலங்கி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 29-10-2022

“எங்கள் கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் கடன்களை மன்னியும் “. மத்தேயு 6:12

இந்த வார்த்தைகள் நமக்குச் சொல்வது, மன்னித்தல் என்பது கிறிஸ்தவ மற்றும் ஒரு உண்மையான விசுவாசியினுடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது என்பதாகும். நமது வாழ்க்கையில் மக்களை மன்னிக்காவிட்டால், ஒரு விசுவாசியாக கிறிஸ்துவில் வளர்வதும் அவருடன்
நடப்பதும் முடியாத காரியம்.


மன்னித்தல் என்பது நமக்கு ஏற்பட்ட தீமையை மறத்தலும் அல்லது நமக்கு தீமை ஏற்பட காரணமானவர்களை மன்னிப்பதும் ஆகும். மன்னித்தல் என்பது விருப்பம் அல்ல, மாறாக யாரெல்லாம் பரலோகத்தில் கர்த்தருடன் இருக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு கர்த்தரிடமிருந்து வரும் கட்டளை. மற்றவர்களுக்கு எதிரான அவர்களின் தப்பிதங்களை நாம் மறந்துவிட்டால் , கர்த்தர் நாம் மற்றவர்களுக்கு எதிராக செய்கின்ற தப்பிதங்களை மன்னிப்பார் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

நாம் கர்த்தரிடமிருந்து ஆசீர்வாதங்களை பெற விரும்பினால், ஒவ்வொரு மனிதனையும் மன்னிப்பது மிக முக்கியம். அவ்வாறு நாம் மன்னிக்கத் தவறினால் ஆசீர்வாதங்கள் தடைபடும். மற்றவர்களை மன்னிக்கத் தவறும் போது, நம்வாழ்க்கையில் சாத்தான் நுழைய சட்டபூர்வமான உரிமை அளிக்கிறோம். மேலும் வேறு வழிகளிலும் நம் வாழ்க்கையை தொந்தரவு செய்கிறோம். மக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் அல்லது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஜெபம் செய்த பிறகும் , பல நாட்கள் உபவாசம் செய்தபிறகும் பிரச்சனைகள் ஏன் தீரவில்லை என்று குழப்பமடைகிறாராகள்.

கர்த்தரின் வார்த்தைகளை நன்கு அறிந்த சில விசுவாசிகள் கூட , பல வருடங்களுக்கு முன் தமக்கு தீமைசெய்தவர்களை மன்னிக்காமல் பிடிவாதமாக இருப்பதை கண்டிருக்கிறேன். இவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் தோல்விகளை சந்திக்க இதுவே காரணம்.

இவர்கள் எந்தவிதத்திலும் மற்றவர்களை மன்னிக்க தயாராக இருப்பதில்லை. முடிவு, சாத்தானுக்கு அவர்களை தொந்தரவு செய்வதற்கும் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை திருடுவதற்கும் சட்டப்படியான உரிமை கொடுக்கப்படுகிறது.. இவை அனைத்தையும் AOJ யின் ” சாத்தானின் ஏழு வழிகள் ” என்ற வகுப்பிலும் நாம் கற்றுக் கொண்டோம். நம் வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ சாத்தானுக்கு கதவுகளை திறக்கிறோம். இதனால் சாத்தானுக்கு நம் வாழ்க்கையை தொந்தரவு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

மன்னியாமை , நான் பிதாவாகிய தேவனோடு கொள்ள போகிற பரலோக ஐக்கியத்தை இல்லாமல் செய்துவிடும். இயேசுகிறிஸ்துகூட தான் சிலுவையில் அறையப்படுவதற்கு யாரெல்லாம் காரணமோ அவர்களை மன்னித்து, பிதாவிடமும் அவர்களை மன்னிக்க வேண்டினார்.


லூக்கா 23 : 34 ” அப்பொழுது இயேசு : பிதாவே இவர்களை மன்னியும் , தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே எனாறார்”.

ஏனென்றால் அவருக்குத் தெரியும்,அவர்களை மன்னிக்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் அடிமைத்தனத்தில் இருப்பார்கள் என்று. அனைவரையும் மன்னிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார்.

ஜெபம்

பரலோகத் தந்தையே, தெரிந்தோ தெரியாமலோ எங்களுக்கு தீமை செய்த அனைவரையும் மன்னிக்க உங்க கிருபையை வேண்டுகிறோம். உமது சிலுவையை சுமக்கவும் , நீங்கள் எங்களுக்கு காட்டிய குறுகலான வழியில் நடக்கவும் எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவும்

ஆமென்.


Sol. Richa Jain

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 28-10-2022

உக்கிராணத்துவம்

இந்த உலகத்தில் நாம் ஒவ்வொருவரும் , நாம் செய்யும் வேலையினாலும் , நாம் எவ்வளவு வெற்றி அடைந்திருக்கிறோம் என்பதாலும் எவ்வளவு அறியப்படுகிறோம் என்பதாலுமே நாம் அடையாளப்படுத்தப்படுகிறோம். இதுதான் உலகப்பூர்வமான மக்களின் மதிப்பு. கர்த்தரின் பிள்ளைகளை நாம் எதனால்  மதிப்பிட வேண்டும்.

கொலோசியர் 1 : 13 சொல்கிறது ” இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம். “

கர்த்தர் தம்முடைய விலைமதிப்பில்லாத பரிசுத்த இரத்தத்தால் நம்மை மாற்றுவதற்கு, நாம் இருளின் உலகத்தில் மதிப்பு மிக்கவர்களாக வாழ்வதை அல்லது ஒளியின் உலகத்தில் மதிப்புமிக்கவர்களாக வாழ்வதை தெரிந்தெடுக்க  நம்மிடம்  ஒரு வாய்ப்பு இருக்கிறது.

கர்த்தர் நம்மீது வைத்திருக்கின்ற முழு மதிப்பீடு இது.

ரோமர் 6 : 18, 22   பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமையானீர்கள். இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதால் , பரிசுத்தமாக்குதல் உங்களுக்கு கிடைக்கும் பலன். முடிவோ நித்திய ஜீவன்.

நாம் இப்போது மோசேயுடைய வாழ்க்கையை பார்ப்போம். எபிரேயர் 11ம் அதிகாரம்  23 முதல் 27 வரையுள்ள வசனங்களில், மோசே எகிப்தை விட்டு வர எப்படி முடிந்தது,?  எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் , கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று எண்ணினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தன்னுடைய எண்ணங்கள் எல்லாம் கர்த்தர் மேல் உள்ள விசுவாசத்தையே சார்ந்திருந்தது. அதையே அவனுடைய பெற்றோர்களும் சொல்லிக் கொடுத்திருந்தனர். கர்த்தரின் பிள்ளைகள் அடிமைகளாக கஷ்டப்படுவதை பார்த்து , தன்னுடைய ஆடம்பரமான  அரணமனை வாழ்க்கையை மறுத்தார். மோசே இந்த முடிவை தேர்ந்தெடுத்ததால் கர்த்தருக்கு அவர்மேல்  நல் எண்ணம் இருந்தது. நாமும் மிகச் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தால் , அது நல்ல முடிவுகளைத் தரும்.

ஒவுவொரு விசுவாசிக்கும் ஒரு வேலை உள்ளது. பணியாளராகவோ அதிகாரியாகவோ கர்த்தர் நம்மிடம் ஒப்படைத்த வளங்களை கவனித்துக்கொள்வதில்

மத்தேயு  25 ம் அதிகாரம் 14 முதல் 30 வரையுள்ள வசனங்களில்  தூர தேசத்திற்கு பயணம் செய்யும் ஒருவன் தன் பொருட்களை வேலையாட்களிடம் ஒப்படைத்துச் செல்வதை காண்கிறோம். அதுபோலவே, நம் வாழ்விலுள்ள எல்லாவற்றிற்கும் சொந்தக்காரர் கர்த்தர். ஆனால் அவருடைய வளங்களை  கவனித்துக் கொள்வதை அவர் நம்மிடம் ஒப்படைத்துள்ளார். நம்மிடம் உள்ள அனைத்தும் கர்த்தருக்குச் சொந்தமானது . அவர் நம்மீதுள்ள நம்பிக்கையின் பேரில் தந்துள்ளார் என்று ஒப்புக் கொள்வது அவசியம்

கொலோசியர் 3 : 23  ல் நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவை சேவிக்கிறதுனாலே, சுதந்திரமாகிய பலனைக் கர்த்தரால் பெறுவீர்கள் என்று அறிந்து ,என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கலாத்தியர்  1 : 10 ல் இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா , யாரை நாடிப்போகிறேன் ? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன். நான் இன்னும் மனுஷனைப் பிரியப்படுத்துகிறவனாய் இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ரோமர் 14 : 12 ” ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து தேவனுக்கு கணக்கு ஒப்புவிப்பான்.

நான் தொழில் ரீதியாக மருத்துவராக இருந்தாலும், நிறைய ஆண்டுகள் இல்லத்தரசி செலவிட்டேன். என்னிடம் உள்ள அனைத்தும் , எனது குழந்தைகள், எனது குடும்பம் , பட்டங்கள் ,வேலை அனைத்தும் கர்த்தர் எனக்கு கொடுத்த வளங்கள் , என்னுடையது அல்ல என்பதை கர்த்தர் எனக்கு உணர்த்தினார். என்னுடைய குழந்தைகள் கர்த்தரின் குழந்தைகள், அவர்களை கவனிக்கவும் , குடும்பத்தில் பலவிதமான உறவுமுறைகளைச் சார்ந்து வாழவும் என் அணுகுமுறையை மாற்றிக் கொண்டேன்.

 Sol. Dr. Deepthi Jones