தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-11-2022

விசுவாசிகளின் ஐக்கியம்:


” ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும் , அன்பினாலே யாதொரு தேறுதலும் , ஆவியின் யாதொரு ஐக்கியமும் , யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால் , நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்பும் உள்ளவர்களாக இருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து , என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.” பிலிப்பியர் 2…1- 2


இந்த வசனங்கள் ஆவிக்குரிய ஐக்கியம் என்பது என்ன என்பதை அழகாக விளக்குகிறது. அன்பு, இரக்கம், மற்றவர்களின் மீது அக்கறை போன்ற ஒரே மனநிலையோடு இருப்பதுதான் ஐக்கியத்தின் குணாதிசயங்கள். எல்லா விஷயத்திலும் ஒருவருக்கொருவரை ஏற்றுக் கொள்வது என்பது ஒரே மனநிலை ஆகாது. ஆனால் சகிப்புத் தன்மையுடன் மற்றவர்களின் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதுதான் ஒரே மனநிலை. இவையெல்லாம் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுவதற்கும், ஒருவர் மற்றவருடன் ஐக்கியமாக இருப்பதற்கும் நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தில் அத்தியாவசியமான குணங்கள். இயேசுகிறிஸ்துவை தங்கள் தெய்வமாக எஜமானனாக ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் வீடுகளிலும் பொது இடங்களிலும் கர்த்தரை ஆராதிப்பதற்கும் , கர்த்தருடைய வார்த்தைகளையும் , தங்களுடைய சாட்சிகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் கூடினார்கள். இதை ஐக்கியத்தின் தருணமாக எதிர்நோக்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2 : 42 ” அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோன்யத்திலும் , அப்பம் பிட்குதலிலும் , ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.


கிறிஸ்தவ விசுவாசிகளின் ஐக்கியம் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தவும் , கிறிஸ்தவ கோட்பாடுகளை அவர்களுக்கு நினைவுபடுத்தவும் செய்தது. அப்போது அவர்களுக்கு எழுதப்பட்ட எந்த புத்தகமும் இல்லை. அதனால் கர்த்தருடைய போதனைகளை நினைவுபடுத்த கூடுகை அவசியமாக இருந்தது. பின்னர் முதலாம் நூற்றாண்டில் சுவிசேஷங்களும், நிருபங்களும் எழுதப்பட்டன. ஆனால் கையால் எழுதப்பட்ட கடிதங்களும் பிரதிகளும் அப்போது எல்லாருக்கும் கிடைக்கவில்லை. காலங்கள் செல்லச் செல்ல, நிறைய தவறான போதனைகள் , விளக்கங்கள் , சட்டங்களும் சபைகளை சிதைத்தன. புதிய ஏற்பாட்டு புத்தகங்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை பிரகடனப்படுத்தும் கூடுகைகள் இன்றும் இருக்கின்றன. எபிரேயர் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் கூட கிறிஸ்தவர்களின் கூடுகையைப் பற்றி நினைவுபடுத்தியுள்ளார்.


எபிரேயர் 10…24 – 25 மேலும் , அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து , சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் , ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் புத்தி சொல்ல வேண்டும்.”


பின்னாளில் , அப்போஸ்தலனாகிய பவுலின் காலத்தில் சீடர்களின் இந்த ஐக்கியம் , அந்தியோக்கியாவில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டது.


1யோவான் 1: 7 ” அவர் ஒளியில் இருக்கிறதைப் போல நாமும் ஒளியிலே நடந்தால் , ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும். “


கிறிஸ்துவுக்குள் நமது ஐக்கியமும், அவருடைய இரத்தமும் நம்மை இரட்சிக்கும்.


சங்கீதம் 133 : 1 ” இதோ , சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?”


நம்முடைய சபையாகிய சரீரத்தில் கிறிஸ்து தலையாக இருக்கிறார். நம்முடைய பிரதான ஆசாரியரான கிறிஸ்துவின் தலையிலிருந்து அபிஷேக எண்ணெய் பாயும். இந்த அபிஷேகம் நமது உடலில் பாய்ந்து நாம் ஆசீர்வதிக்கப்படுகிறோம். நாம் ஒரே ஆவியினால் ஐக்கியப்பட்டு, ஆவியினால் வழிநடத்தப்படும் போது அங்கே அபரிமிதமான மகிழ்ச்சி இருக்கிறது. இதுதான் கிறிஸ்தவ ஐக்கியத்தின் அழகும் நன்மையும் ஆகும்.

சாட்சி


கொரோனா காலத்திற்கு முன் அணி சபை என்பது நல்ல ஒரு ஐக்கியமாக இருந்தது. அதை நாம் மகிழ்வுடன் அனுபவித்தோம். ஒருவருக்கொருவர் வெவ்வேறு வீடுகளில் சந்திப்பை மேற்கொண்டோம். நிகழ்வுகளில் ஆராதனை, கர்த்தருடைய வார்த்தைகளை பகிர்ந்து கொள்வது, சாட்சி சொல்வது , ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்பது போன்றவற்றை மகிழ்வுடன் அனுபவித்தோம்.


ஜெபம்


எங்கள் அன்புள்ள பரலோகத் தந்தையே நாங்கள் ஒருவர் ஒருவருடன் ஐக்கியமாக இருக்கும் சந்தோஷத்தை தாரும். அதன்மூலம் ஒருவரை ஒருவர் அன்பு செய்யவும் , உற்சாகப்படுத்தவும் உம்முடைய விலைமதிப்பில்லாத அன்பிலும் பாதுகாப்பிலும் பலப்படுத்தவும் வல்லமையான இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம்.

ஆமென்.


Sol. சலோமி குரியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *