தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-11-2022

சீடத்துவம்

” மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.”

மத்தேயு 16 : 18

யோவான் 1 ம் அதிகாரம் 40 முதல் 42 வரையுள்ள வசனங்களில் சீமோனுடைய சகோதரன் ஒரு இரவு இயேசுவோடு தங்கியிருந்த பின் அவர் சீமோனைப் பார்த்து ” நான் மெசியாவை கண்டேன் ” என்று சொன்னார். அடுத்த நாள் அவர் சீமோனை இயேசுவினிடத்தில் கூட்டி வந்தார். அப்போது இயேசு அவரைப் பார்த்து, “உன்னுடைய பெயர் சீமோன். ஆனால் நீ கேபா அல்லது பேதுரு என்று அழைக்கப்படுவாய் ” என்று சொன்னார். பேதுரு என்பதற்கு பாறை என்று அர்த்தம். என எழுதப்பட்டிருப்பதை காண்கிறோம்.

மத்தேயு 16 ம் அதிகாரம் 12 முதல் 20 வரையுள்ள வசனங்களில் , இயேசு தன் சீடர்களைப் பார்த்து , மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.அதற்கு பேதுரு ” நீர் மெசியா, உயிருள்ள தேவனுடைய குமாரன் மகன் என்று சொன்னார். இயேசு அவனை நோக்கி ” இந்த உண்மை மனிதர்களிடமிருந்து உனக்கு வரவில்லை. பரலோகத்திலுள்ள என் தந்தையால் உனக்கு வெளிப்படுத்தப்பட்டது ” என்றார். மேலும் ” நீ பாறை , இந்த பாறையின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. உனக்கு பரலோக ராஜ்யத்தின் திறவுகோலைத் தருவேன். பூலோகத்தில் நீ எதைக் கட்டுகிறாயோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும். பூலோகத்தில் நீ எதை கட்டவிழ்ப்பாயோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்.” என்று சொல்லப்பட்டிருப்பதை காண்கிறோம்.

இயேசுவினுடைய சீடர்களில் மூத்தவரான பேதுருவின் இந்த விசுவாச வார்த்தைகள் , அவருடைய ராஜ்யம், அவருக்குப் பின் தொடர்ந்து கட்டமைக்கப்படும் என்ற நம்பிக்கையை இயேசுவுக்கு கொடுத்தன. இயேசு என்ற பாறை மீது விசுவாசிகளால் அமைக்கப்பட்ட அடித்தளம் கர்த்தரின் சபையாக வளரும். நிறுவப்படவிருக்கின்ற அவருடைய ராஜ்யத்திற்கு இயேசுவே தலைக்கல்லாக இருக்கிறார்.


பேதுருவின் ஆவிக்குரிய பதில் இயேசுவை மகிழ்ச்சியாக்கிற்று. இயேசுவே பாறை. மெசியா மீதுள்ள விசுவாசத்தால் பேதுரு , கர்த்தரின் ராஜ்யத்தை கட்டி எழுப்ப உதவுகின்ற அடித்தளத்தை அமைத்தார்.
இயேசு பரலோகத்திற்கு எழுந்தருளிய பிறகு, பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, நற்செய்தியை பிரசங்கித்து , மிகுந்த வல்லமையோடு நோய்களை குணமாக்கினார். ஆயிரக்கணக்கான மக்களை இயேசுவை பின்பற்ற செய்து , அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
இயேசு பரலோகம் செல்வதற்கு முன்னால் , ” உலகம் முழுவதும் சென்று எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள். யாரெல்லாம் விசுவசிக்கிறார்களோ அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள், அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். எல்லா விசுவாசிகளுக்கும் அதே வல்லமை கொடுக்கப்படும். என்னுடைய நாமத்தின் பெயரால் பேய்களை ஓட்டுவார்கள். பலவிதமான பாஷைகளை பேசுவார்கள். நோயாளிகள் மீது கை வைத்தால் குணமடைவார்கள்” என்று சொன்னார்.


யோவான் 14 : 12 ” என்னை விசுவசிக்கிறவன் , நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான் , இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் ஏனென்றால் நான் பரலோகம் செல்கிறேன்.” என்று கூறுகிறது.

அவருடைய விசுவாசிகள் ஒவ்வொருவரும் அவருடைய பணியை செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவருடைய கிருபையினால் கர்த்தர் நமக்குத் தந்த திறமைகளுடன் நாம் இந்த பணியை செய்ய வேண்டும். நம்முடைய முழு பெலத்தோடும் ஆற்றலோடும் நாம் எல்லோரும் இதைச் செய்வோம். இதனால் கர்த்தரின் நாமம் மகிமைப்படுவதாக.
ஆமென்.

Sol.பாபு செபாஸ்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *