தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 07-03-2023

எசாயா 40 : 9 - 11 கர்த்தர் மறைந்திருக்கிற காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்று   நம்பவைக்கப்படுகிறது.  சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு, எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு.

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார், அவர் தமது புயத்தினால் அரசாளுவார்;, இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது, அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.

 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”

2023 , பெப்ரவரி மாதம் 28

ம் தேதி நடந்த இயேசுவின் படையணி , தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் இந்த வார்த்தைகளை பெற்றுக் கொண்டேன். அங்கு தலைமை மேய்ப்பனாக இருப்பவர் புதிய பொறுப்புகளை ஏற்கும் இளைஞர்களுக்கு உதவுவேன் என்று கூறினார். மார்ச் 1 , 2023 அன்று நடைபெற்ற மாதாந்திர வழிபாட்டில் சகோ. ஆஞ்சலிக்கா மற்றும் அவரது தனிக்குழு கிரகித்த மாற்றங்களைக் குறித்து சாட்சியமளிக்க விரும்புகிறேன். அது எப்படி அடுத்த நிலைக்குச் சென்றது என்றும்  மேலும் எல்லா களங்களுக்கும் அப்படியே செல்லும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பாபிலோனிலிருந்து யூதர்கள் திரும்பியதைப்பற்றி ஒரு   தீர்க்கத்தரிசி குறிப்புகள் வைத்திருந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டில்  யோவான் ஸ்நானகர் இயேசுகிறிஸ்துவின் அணுகுமுறையை அறிவித்ததை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது ஒரு சிறிய நிகழ்வு.

கிழக்கு தேசங்களில் இளவரசர்கள் பாலைவன நாடுகளின் வழியாக பயணம் செய்கையில் அவர்கள் பாதைகள் செம்மைப்படுத்தப்பட்டு தடைகள் அகற்றப்படும். அதுபோலவே கர்த்தர் தமது வசனங்களை கற்பிப்பதாலும் , பரிசுத்த ஆவியின் மேலுள்ள நம்பிக்கையாலும் நம்முடைய இருதயங்களை செம்மைப்படுத்தி, நம்முடைய உயர்ந்த பெருமையான எண்ணங்களை விழத்தாட்டி , நல்ல விருப்பங்களை விதைத்து, வளைந்த முரட்டுத்தனமான    சுபாவங்களை நேரானதாகவும் மென்மையானதாகவும் மாற்றி எல்லா தடைகளையும் நீக்கி , பூமியில் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற நம்மை தயார்ப்படுத்தி பரலோக ராஜ்யத்திற்கு நம்மை செம்மையாக்குவார். வீழ்ந்த மனிதனுக்குச் சொந்தமானவை அல்லது அவன் செய்யும் அனைத்தும் புல் மற்றும் பூவைப் போன்றது. இறக்கக்கூடிய பாவியான மனிதனுக்குரிய எல்லாப் பட்டங்களும்  உடைமைகளும் அவனைத் தண்டனைக்கு உள்ளாக்கும்போது என்ன செய்யும். எல்லா மாமிசத்தாலும் செய்ய முடியாததை கர்த்தருடைய வசனம் நமக்காகச்  செய்யும். கிறிஸ்துவின் வருகையைப்பற்றிய செய்தி பூமியின் எல்லைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

சாத்தான் ஆயுதம் ஏந்திய பலசாலி. ஆனால் நம்முடைய கர்த்தராகிய இயேசு பலமானவர். மேலும் அவர் முன்னோக்கிச் செல்வார். கிறிஸ்து நல்ல மேய்ப்பர். இளவயதில் இரட்சிக்கப்பட்டவர்கள், பலவீனமான விசுவாசிகள் மற்றும் துக்கமான ஆவி உள்ளவர்களிடம் கனிவான அக்கறை காட்டுகிறார். அவருடைய வசனத்தினால்  வேறு பணிகள் செய்யத் தேவையில்லை. ஆனால்  அவருடைய பாதுகாப்பினால் அவர்களை பலப்படுத்துவதில் எந்த சிரத்தையும் அவருக்கு இல்லை. நாம் நம்முடைய மேய்ப்பனின் குரலைக் கேட்போம் .அவரைப் பின்பற்றுவோம் . அவருடைய ஆடுகளாக நம்மை நிரூபிப்போம்.

கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய நாமம் உயர்ந்தது, உம்முடைய நாமம் பெரியது, எல்லாவற்றிற்கும் மேலாக உமது நாமம் உயர்ந்து நிற்கிறது. எல்லா சிம்மாசனங்களுக்கும் , ஆட்சிகளுக்கும், அதிகாரங்களுக்கும் , பதவிகளுக்கும் மேலாக உமது நாமம் உயர்ந்து நிற்கிறது. ஆமென்.

Sol. ஜோன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 06-03-2023

பெருக்கத்தின் தேவன்

எபிரேயர் 6 : 16
” நிச்சயமாகவே நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னை பெருகவே பெருகப் பண்ணுவேன். “


நம்முடைய தேவன் பெருக்கத்தின் தேவன். அவர் நம்மை பெருகச் செய்கிற தேவன்.
ஆதியாகமம் 1 : 28 ல்
” நீங்கள் பலுகிப் பெருகி , பூமியை நிரப்பி , அதைக் கீழ்ப்படுத்தி , சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவைகளையும் , பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜந்துக்களையும் ஆண்டு கொள்ளுங்கள் என்று சொல்லி , தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் .”
ஆதாமையும் ஏவாளையும் ஆசீர்வதித்த கர்த்தர் ஜல பிரளயத்திற்குப் பிறகு நோவாவையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதித்ததை நாம் பார்க்கிறோம்.

ஆதியாகமம் 26 : 24 ல் கர்த்தர் ஈசாக்கைப் பார்த்து பயப்படாதே நான் உன்னோடே கூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து , உன் சந்ததியைப் பெருகப் பண்ணுவேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
1 பேதுரு 1 : 2 ல் அவர் கிருபையையும், சமாதானத்தையும், அன்பையும் ,தேவனை அறிகிற அறிவையும் பெருகச் செய்கிறார் என்பதையும் ,


சங்கீதம் 71 : 21ல் அவர் நம்முடைய மேன்மையை பெருகப்பண்ணுகிறார் என்பதையும் ,


நீதிமொழிகள் 10 : 27 ல் தேவன் நம்முடைய ஆயுசு நாட்களை பெருகப்பண்ணுகிறார் என்றும் வாசிக்கக் கேட்கிறோம்.

அருமையானவர்களே , கர்த்தர் நம்மை பெருகப் பண்ணுகிற தேவனாயிருக்கிறார். அவர் பெருகச் செய்ய வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய ஒரு சில காரியங்கள் உண்டு.
முதலாவதாக நாம் ஆதியாகமம் 22 ம் அதிகாரத்தில் கர்த்தர் ஆபிரகாமை மோரியா என்னும் மலைக்குப்போய் ஈசாக்கை பலியிடு என்று சொன்னதும் அதற்குக் கீழ்படிந்து ஆபிரகாமும் மோரியா மலைக்குச் சென்று ஈசாக்கை அவர் பலியிடுவதற்காக பீடத்தில் கிடத்தியபோது தேவதூதன் வந்து ஆபிரகாமைப் பார்த்து ஆபிரகாமே உன்னுடைய ஏக புதல்வன் என்றும் பாராமல் அவனை எனக்கு ஒப்புக் கொடுத்ததினால் நீ நிச்சயமாக தேவனுக்கு பயப்படுகிறவன் என்பதை அறிந்து கொண்டேன் என்று சொல்லி அவர் ஆசீர்வதிக்கிறார்.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும் பொழுது இவையெல்லாம் நமக்கு கூடக் கொடுக்கப்படும் என்று மத்தேயு 6 : 33 ல் சொல்லப்படுகிறது நம்முடைய முதலானவற்றை கர்த்தருக்கு கொடுக்கும்போது அவர் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுகிறார்.

நம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தபோது ஐந்து அப்பம் இரண்டு மீன்களை பலுகிப் பெருகச் செய்து அநேக ஜனங்களுக்கு உணவளித்ததைப் பார்க்கிறோம். நம்மிடம் இருக்கக்கூடியவற்றை கர்த்தரிடம் கொடுப்போம். அவர் அதை பலுகிப் பெருகச் செய்வார்.


தேவன் நம்மைக் கொண்டு ஒரு பெரிய பெருக்கத்தை இந்திய தேசத்திலே உருவாக்குவாராக. அவர் பெருக்கத்தின் தேவன். நம் மூலமாக அணி சபைகள் பெருகுவதாக. நம்மூலமாக வரங்களின் பள்ளிகள் பெருகுவதாக. நம்மூலமாக தேவ வசனங்கள் பெருகுவதாக. நம்மூலமாக கிருபைகள், அற்புதங்கள் ,ஆபிஷேகம் பெருகுவதாக.


எசாயா 54 : 3 ன் படி நீ வலதுபுறமும் இடதுபுறமும் இடங் கொண்டு பெருகுவாயாக என்ற வார்த்தையின்படி நம்மை இந்த தேசத்திலே பெருகப்பண்ணுவாராக . ஆமென்.

ஜெபம்


அன்பின் பரலோக பிதாவே, நாங்கள் ஒவ்வொரு நாளும் அபிஷேகத்திலும் ஆவியிலும் பெருக எங்களுக்கு உதவும். எங்களிடமிருக்கின்ற குறைகளை நீக்கி நிறைகளை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறோம். அவற்றைப் பெருக்க எங்களுக்கு உதவி செய்யும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.

Sol. Dr. பெட்ரீஷியா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 05-03-2023

உங்கள் சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றுங்கள்.


” அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி : ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து , தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புபவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதைக் கண்டடைவான். “

மத்தேயு 16 : 24 – 25

நாம் பொதுவாக ஆடம்பரமான ஆடைகள் , நல்ல சுவையான உணவுகள் போன்றவற்றை விட்டுவிடுவதை, தன்னைத்தானே வெறுப்பது என்பதுடன் தொடர்புபடுத்துவோம். ஆனால் இயேசுவுடைய தன்னை வெறுத்தல் என்பது இந்த மேலோட்டமான ஆசைகளைக் கடந்து அதற்குப் பதிலாக தம்மையே வெறுக்கும் ஆவிக்குரிய தியாகத்தை வலியுறுத்துகிறது. அவர் இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் நம்மை எப்படி வெறுத்து நம்முடைய சிலுவையை சுமக்க வேண்டும் என்று முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்.

பிதாவின் குமாரனாக, இயேசு மனித குலத்தை மீட்டெடுப்பதற்காக , தனது இடத்தையும், மகிமையையும் , மற்றும் எல்லாவற்றையும் , மனிதனாக மாற வேண்டி துறந்தார். எல்லாருடைய மீட்பிற்காகவும் பாடுபட்டு சிலுவையில் மரிக்க வேண்டும் என்ற உண்மையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். மனிதனாக மரணத்திற்குரிய வாழ்க்கை வாழந்தாலும் , அவர் பாவமற்றவராகவே வாழ்ந்தார். அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அனைத்தும் தகுதியற்றவை. ஆனால் அவர் ஒரு புகார் கூட சொல்லாமல் அல்லது எந்த வெறுப்பையும் தெரிவிக்காமல் அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.

எசாயா 53 : 7 ” அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் இருந்தார். ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும் அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். “

இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இரண்டு திருடர்களுக்கு இடையில் தொங்கினார். இது சாபத்தின் அடையாளமாக பலரால் பார்க்கப்பட்டது. ஆயினும் கூட இயேசு தன்னை கறைதிரையற்ற , நேர்த்தியான ஆட்டுக்குட்டியாக ஒப்புக் கொடுத்து மனிதகுலத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக தியாகம் செய்தார். இருப்பினும் அவர் மூன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்ததால் அவரது பாடுகளும் மரணமும் வீணாகவில்லை. தற்போது அவர் பிதாவாகிய கர்த்தரின் வலது பக்கத்தில் அமர்ந்து அனைத்து படைப்புகளையும் ஆட்சி செய்கிறார்.


எபிரேயர் 12 : 2 ” அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு , அவமானத்தை எண்ணாமல் , சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். “


தான் அநியாயமாக நடத்தப்பட்ட போதிலும் இயேசு தம் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. பிதா தமது வாழ்க்கையில் அனுமதித்த எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டார். எல்லாவற்றையும் ஏன் தன் வாழ்க்கையையும் கூட இழக்கத் தயாராக இருந்தார் . இந்த தியாகத்தின் மூலம் தான் இயேசு நித்திய ஜீவனைக் கண்டார்.


ஒரு வேளை இயேசுவைக் காட்டிலும் நாம் குறைவான அளவில் இருந்தாலும் , இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, மற்றவர்களால் நாம் அநீதியாக நடத்தப்படும் சூழ்நிலைகளில் நம்மை காணலாம். இருந்தபோதிலும் இயேசு தம்மைப் போலவே நம்முடைய அந்தஸ்து பதவியைப் பொருட்படுத்தாமல் , தாழ்மையுடன் நம்முடைய சிலுவையை சுமக்க அழைக்கிறார். ஒரு விசுவாசியாக நம்முடைய யுத்தம் மாமிசத்திற்கும் இரத்தத்திற்கும் எதிரானது அல்ல. மாறாக சாத்தானுடைய ராஜ்யத்திற்கு எதிரானது. நமக்கு தீங்கிழைப்பவர்களை நாம் மன்னிப்பதால் , குறையின்றி நம் துன்பங்களைத் தாங்கி அதை கர்த்தருக்குப் பலியாக செலுத்தினால் நம்முடைய பாடுகள் வீண்போகாது என்பது உறுதி. உண்மையில் அவை நமக்கு தீங்கிழைக்கும் ஆத்துமாக்களின் இரட்சிப்புக்கு வழிவகுக்கும்.


யோவான் 20 : 23
” எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். “


எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ஆத்துமாவை காப்பதற்காக , இயேசு செய்ததைப் போலவே சாத்தானின் மீது அவனுக்கு எதிராக அசாதாரண வல்லமைமையும் அதிகாரத்தையும் பெறுகிறோம் . நாம் நம்மை வெறுத்து , நம்முடைய சிலுவையை எடுத்துக் கொண்டு கிறிஸ்துவோடு மரிக்கும்போது நாமும் அவருடன் உயிர்த்தெழுந்து அவருடன் ஆட்சி செய்கிறோம்.


2 தீமோத்தேயு 2 : 21 – 12
” இந்த வார்த்தை உண்மையுள்ளது. என்னவெனில் நாம் அவரோடேகூட மரித்தோமானால்,அவரோடேகூட பிழைத்துமிருப்போம். அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால் , அவரும் நம்மை மறுதலிப்பார். ” .

ஜெபம்.


அன்பின் பரலோகத் தந்தையே, உமது மகன் இயேசுகிறிஸ்து செய்த இறுதித் தியாகத்திற்காக நாங்கள் எங்கள் இருதயங்களில் நன்றியுடன் முன் வருகிறோம். எங்களை
வெறுத்து தினம்தோறும் எங்களது சிலுவைகளை சுமக்க உம்மையே முன்மாதிரியாகக் கொண்டு, உம்மை பின்தொடர உம்மிடம் வேண்டுகிறோம். அநியாயமாக நடத்தப்பட்டாலும் நாங்கள் தாழ்மையுடன் இருக்கவும் உமது விருப்பத்தின்படி நடக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். எங்களுக்கு துன்பங்களைத் தாங்கும் வலிமையையும் தைரியத்தையும் தந்து அவற்றை உமக்குப் பலியாக சமர்ப்பிக்கவும் நீர் எங்களுக்கு அமைத்துள்ள பாதையை பகுத்தறிந்து அதில் உண்மையாக நடக்க உமது ஞானத்தயும் வழிகாட்டுதலையும் வேண்டுகிறோம். உமது அன்பிற்கும் இரக்கத்திற்கும் நன்றி.
ஆமென்.

Sol. எட்விற்றா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 04-03-2023

யோவான் 14 : 16 ” நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.”

நாம் இப்போது ” தேற்றரவாளன் ” என்பதில் கவனம் வைப்போம். இது பரிசுத்த ஆவியானவரைத் தவிர வேறு யாருமல்ல. யார் இந்த பரிசுத்த ஆவி? அவர் யாரென்று விவரிக்கும் ஞானம் யாருக்கு இருக்கிறது ? கர்த்தரின் கிருபையால் எனக்குத் தெரிந்ததைக் கொஞ்சம் எழுத வேண்டும் என்ற பரிசுத்த ஆவியின் உந்துதலால் எழுதுகிறேன். பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. அல்லது புறக்கணிக்கப்படுகிறது. அவர் புறாவோ , காற்றோ , தண்ணீரோ அல்ல. ஆனால் கர்த்தர் . கர்த்தரைப் போல அல்ல. ஆனால் பிதாவுக்கு இணையானவர். அவர் கர்த்தருக்கு இளையவர் அல்ல. ஆனால் அதே பயபக்தி, மரியாதை , நம்பிக்கைக்கு தகுதியானவர். கர்த்தருடைய கிருபையினால் பரிசுத்த ஆவியானவர் நமக்கு கொடுக்கப்படாவிட்டால் , நாம் அவரை அனுபவிக்க முடியாது. அவர் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
அப்போஸ்தலர் 2 : 38
” பேதுரு அவர்களை நோக்கி நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். “

ஆதியாகமம் 1 : 1 – 3 ல்
” ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. “


திரியேக தேவனின் இயல்பு இதில் காணப்பட்டது. ஆதியாகமம் 1 : 26 ம் வசனத்தில் ” நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக . அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் , மிருக ஜீவன்களையும் , பூமியனைத்தையும் , பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். “
ஆதாம் மீது ஊதப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தாமேஇவர்.செங்கடலை பிளந்தவரும் , எரிக்கோ மதிலை விழச்செய்தவரும் இவரே.

லூக்கா 1 : 35 ” பரிசுத்த ஆவி உன் மேல் வரும் , உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்.” கன்னிப்பிறப்பு மற்றும் ஆரோனின் கோலை துளிர்விடச் செய்தவரும், மோசேயின் கோலை பாம்பாக மாற்றியவரும் கழுதையை பேச வைத்தவரும் இவரே. உயிர்த்தெழுதலின் வல்லையால் இயேசுவை உயிர்த்தெழ வைத்தவரும் அவரே.
ரோமர் 6 : 10 – 11 ” அவர் மரித்தது , பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார், அவர் பிழைத்திருக்கிறது தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும் , நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்தவர்களாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். “

மதப் பயங்கரவாதியான சவுல் தமாஸ்கு செல்லும் வழியில் சந்திக்கப்பட்டு , தண்டனை பெற்று , அவரை கர்த்தரிடம் சரணடையச் செய்தார் என்பதையும் அவர் எவ்வாறு சிறந்த அப்போஸ்தலர் பவுலாக மாற்றப்பட்டார் என்பதையும் அறிவோம்.

பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே இயேசுவை மனிதனுக்கு வெளிப்படுத்த முடியும். அப்போஸ்தலர் 9 : 31
” அப்பொழுது நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும் , பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. “
யோவான் 6 : 44
” என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். கடைசி நாளில் அவனை எழுப்புவேன். “

எந்த மனித உதவியும் இல்லாமல் என்னுடைய முழு குடும்பத்தையும் சந்தித்து அதை மாற்றியமைத்தவர் பரிசுத்த ஆவியானவர்.


ஜெபிக்கும் இடத்தில் மட்டும்தான் நாம் பரிசுத்த ஆவியுடன் ஐக்கியப்பட முடியும். நாம் ஒரு அமைதியான இடத்தில் அவரை வரவேற்று அவருக்காக காத்திருக்க வேண்டும். ஜெபிக்கும் முறை அவராலே தீர்மானிக்கப்படுகிறது. அவரிடம் பேசுங்கள் , அவர் அமைதியாக சிறிய குரலில் பேசுவார். பரிசுத்த ஆவியைப் பெறுவது ஒரு கப் தண்ணீரை பிடித்துக் கொண்டு அதைக் குடிக்காமல் இருப்பது போன்றது. அது நமக்குப் பயனளிக்காது. பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய விழிப்புணர்வு மட்டும் போதுமானதாக இருக்காது. அவரைப் பற்றி கண்டிப்பாக நாம் தெரிந்திருக்க வேண்டும்.

அவரை நாம் அறிந்தால் , அவருடன் சேர்ந்து கொண்டு கர்த்தர் நமக்கு கொடுத்த விதியை நிறைவேற்றலாம். உங்களது வாழ்க்கை , சூழ்நிலைகள் மற்றும் சவால்களில் பயனுள்ள திசைகளை காட்ட உங்களுக்கு பரிசுத்த ஆவியானவர் தேவை. அவரில்லாவிட்டால் நாம் வல்லமையற்ற , உந்துசக்தி இல்லாத ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போம். பரிசுத்த ஆவியின் ஊழியத்தைப் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. அதற்கு இந்த செய்தி மட்டும் போதுமானதாக இருக்காது. பரிசுத்த ஆவியின் தலைமைக்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். அவருக்கு பொறுப்பைக் கொடுப்போம். அவரை வெளிப்படுத்தும்படி அவரிடம் கேட்போம். ஏனென்றால் அவர் நம் ஐக்கியத்தை விரும்புகிறார். ஆமென்.

Sol. லலிதா மேனன்

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 03-03-2023


” சகோதரரே , அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி “

பிலிப்பியர் 3 :13


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளே, ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்தான மாத்திரைகள் தேவைப்படும் என்பது விதி என்று நமக்குத் தெரியும். சில மாத்திரைகளே உடல்ரீதியான ஆரோக்கியத்தை அதிகரிப்பதைப் போலவே, விதியை நிரப்பக்கூடிய , ஆவிக்குரிய விதியை நிர்ணயிக்கக்கூடிய மாத்திரைகளும் தேவைப்படுவதுண்டு. இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் விதி நிறைவேறுவது உறுதி.


இப்போது , நாம் நம்முடைய கடந்த காலத்தை விடுவிப்பது இந்த விதி மாத்திரைகளில் ஒன்றாகும். நாம் நம்முடைய எதிர்மறையான கடந்தகாலத்தை விடுவிக்காவிட்டால் , நேர்மறையான எதிர்காலத்திற்குள் நுழைய முடியாது. முந்தைய நாளுக்குரியதை நாம் இன்று இழுத்துக்கொண்டு வந்தால் நாளய வரவை சாத்தியமற்றதாக மாற்றுகிறது. அதாவது குற்றங்களை, தவறுகளை, இழந்துவிட்ட சந்தர்ப்பங்களை, வலிகளை, கடந்தகால வேதனைகளை நாம் மறக்கவோ, மன்னிக்கவோ செய்யாவிட்டால் நாம் எதிர்காலத்தில் நுழைய முடியாது. நாம் கண்டிப்பாக கடந்தகாலத்தின் வாய்ப்புகள், தோல்விகள் இரண்டையும் நாம் இழக்க வேண்டிவரும் அல்லது கைவிட வேண்டி வரும். ஏனென்றால் ஒரே நேரத்தில் கடந்த காலத்தை பற்றிக்கொண்டு எதிர்காலத்தை கீழே விட முடியாது. நாளையை நோக்கி நாம் பின்னால் நடக்க முடியாது.

நாம் ஒவ்வொருமுறையும் தோல்வி அடைவதற்குக் காரணம் நம்மால் எழுந்து , திரும்ப தொடங்க முடியும் என்பதற்காகவே. நாம் ஒரு சந்தர்ப்பத்தைத் தவர விட்டிருக்கலாம் ஆனால் இன்னும் பல நல்ல சந்தர்ப்பங்கள் கண்டிப்பாக நமக்கு வரும். இது ஒரு நல்ல செய்தியாகும். சிலர் உங்களை நோகடித்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் கசப்பாக இருக்காதீர்கள். அந்த வலி உங்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றும்.

கடந்தகாலத்தை நாம் விட்டுவிட முடிவு செய்தால் மட்டுமே கர்த்தர் நமக்கு ஆதரவாகவும், சாத்தானுக்கு எதிராகவும் விஷயங்களை மாற்ற முடியும். கர்த்தருடைய இரக்கத்தை நாம் பெற வேண்டுமென்றால் , நாம் கடந்தவைகளை விட்டுவிட வேண்டும். எனவே நாம் எந்த இடத்தை அடைய வேண்டுமோ கர்த்தர் ,அந்த இடத்திற்கு இயேசுவின் பெயரால் நம்மை கொண்டு சேர்ப்பார்.

நாம் எல்லோரும் பின்வருவதை நினைவில் கொள்ள வேண்டும்:
நாம் நாளைக்காக பின்னோக்கி நடக்க முடியாது. நாம் பிறரை மன்னிக்கவும் நமது கடந்த காலத்தை மறக்கவும், அவற்றை விட்டுவிடவும், சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். பிறகு ஒரு திடமான பார்வையை உருவாக்க வேண்டும்.

ஜெபம்.


கர்த்தாவே, என்னுடைய எல்லா கடந்தகாலத்தையும் மறக்க கிருபை தாரும். இங்கே நான் இருக்கிறேன். எதிர்காலத்துக்குரிய ஒரு திடமான பார்வையைத் தர இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. ஃபியானா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 02-03-2023

எவ்வளவு காலம் ஆண்டவரே?

ஆபகூக் 1 : 13 – 17

 “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே. பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?

 அவர்களெல்லாரையும் தூண்டினால் இழுத்துக்கொள்கிறான். அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக் கொள்கிறான். அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன்தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்

இதற்காக அவன்தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோட வேண்டுமோ? “

நாமும் கர்த்தருக்காக காத்திருக்கிறோமா? எவ்வளவு காலம் ஆண்டவரே இந்த உலகத்தில் நீதி நிலவுவதற்கு முன்னால் என்று கேட்கிறோமா?

இதற்கு முன்னால் மனம் உடைந்த , நிராகரிக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் இல்லையா?

இதற்கு முன்னால் புற்றுநோய்க்கு மருந்து உண்டா?

இதற்கு முன்னால் சிறு குழந்தைகள் பசியோடு படுக்கைக்குச் செல்லவில்லையா?

ஆபகூக் தீர்க்கத்தரிசி மனித துயரங்களை நன்கு அறிந்தவர் , அவர் கர்த்தரை நோக்கி அழுகிறார். கர்த்தாவே நான் எவ்வளவு நேரம் உதவிக்கு அழைக்க வேண்டும் ? ஆனால் நீர்  கேட்கவில்லை. உம்மை  நோக்கி கதறுகிறேன். ஆனால் நீர் என்னைக் காப்பாற்றவில்லை. நீர்  ஏன் அநியாயத்தை பார்க்க வைக்கிறீர்கள்.?  நீர்  ஏன் தவறு செய்வதை பொறுத்துக் கொள்கிறீர்?  சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் அழிவு உள்ளது.எவ்வளவு காலம் வல்லமையுள்ள கர்த்தர் அநீதியை அனுமதிப்பார் என்று ஆபகூக்   நீண்ட நேரம் போராடி ஜெபித்தார்.  ஏன் கர்த்தர் ஒன்றுமே செய்யவில்லை. பூமியில் குடியிருப்பவர்கள் எல்லாருக்கும் , கர்த்தர் நமக்கு செவிசாய்க்கிறார், தினம்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிறார்   என்று கண்டிப்பாகத் தெரியும். நாம் நமது சுமைகளை கர்த்தர் மேல் சுமத்துகிறோம். அவர் அக்கறை எடுக்கிறார் , அவருடைய நேரத்தில் செய்கிறார். விரக்தி அடைய வேண்டாம். அவரிடம் கடைசியாக வார்த்தை இருக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மனிதகுலத்தை  காப்பதற்காக மிகப் பெரிய திட்டம் வைத்திருக்கிறார்.  ஆனால் ஆபகூக் அந்த நேரத்தில் அதை அறிந்திருக்கவில்லை. அவர் நம்மை மீட்டு ,  அவருடைய விலைமதிப்பில்லாத திரு இரத்தத்தால் நம்மை திருப்பி கொண்டு வந்தார். நாம் அவருக்கு மகிமையையும் துதியையும் செலுத்த வேண்டும்.

சாட்சி.

நான் திருமணம் செய்து கொண்டபோது எனக்கு உடனடியாக குழந்தை பிறக்கும் என்று நினைத்தேன். அடுத்த வருடமே அது நடந்தது. ஆனால் எங்களது நம்பிக்கை எல்லாம் சிதைந்துவிட்டன. எனக்கு ஒன்றன்பின் ஒன்றாக கருச்சிதைவு மூன்றுமுறை ஏற்பட்டது. எங்களது விலைமதிப்பற்ற குழந்தைகளை இழந்தது எங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.  நாங்கள் கர்த்தரிடம் எவ்வளவு காலம் ஆண்டவரே என்று அழுதோம். ஏன் நாங்கள் இதையெல்லாம் கடந்து செல்ல வேண்டும் ? கர்த்தருக்காக காத்திருந்தோம். ஜெபித்தோம். எங்களுக்கு அழகான ஆண்குழந்தை கிடைத்தது.  எங்களது குழந்தை எங்களை பெற்றோராக்கியதற்காக நாங்கள் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

ஜெபம்.

ஆண்டவரே, எங்களது அழுகைக்கும்  ஜெபத்திற்கும்  செவிமடுத்ததற்காக, உமது திட்டத்தின்படி , நோக்கத்தின்படி  எங்களுக்கு அற்புதமான ஒரு மகனைத் தந்தற்காகவும்  நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

Sol. நொரீன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 01-03-2023

இயேசு கிறிஸ்து உண்மையான , ஜீவனுள்ள, ஜெபத்திற்கு பதிலளிக்கின்ற தேவன்

2021 அக்டோபர் மாதம் 17 ம் தியதி இயேசு எனக்கு காண்பித்தது என்னவென்றால் , வானத்தில் மழையும் வெயிலும் இல்லாத நேரத்தில் வானவில் தோன்றியது.

2021 ஜனவரி மாதத்தில் இயேசுகிறிஸ்து , ஒரு சகோதரியிடம் நான் மேற்கு வங்காளத்தில் ஒரு அணி சபை தொடங்க வேண்டும் என்று  கூறினார். நான் குர்கான் என்ற இடத்தில் தங்கியிருந்தபோது,  அந்த சகோதரி

இயேசுவிரும்பியதைப் போல நீ அதை செய்ய  வேண்டும்  என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால் நான் இதைப்பற்றி எதுவும் தெரியாததால் முற்றிலும் பூஜ்யமான நபராக இருந்தேன். எனக்குத் தெரிந்த மக்களை நான் தொடர்பு கொண்டு இதில் கலந்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர்கள் அதிகாலையில் தங்களால் எழுந்து கலந்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்கள்.

நான் பிலிப்பியர் 4 : 6 ல் சொல்லப்பட்டது போல ஜெபித்தேன்.

பிலிப்பியர் 4 : 6 " நீங்கள் ஒன்றுக்குங் கவலைப் படாமல் எல்லாவற்றையுங் குறித்து  உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். "

2021 அக்டோபர் 17 ம் தியதி காலை 4.00 முதல் 5.30 வரையுள்ள  கூடுகைக்குப் பின் மொட்டைமாடிக்குச் சென்று இயேசுவைத் துதித்து பாடிக் கொண்டிருந்தேன்.  வானத்தில் மேகமூட்டமாக இருந்தது . திடீரென்று வானவில்லைப் பார்த்தேன்.

நான் மிகவும் ஆச்சரியமடைந்து இயேசுகிறிஸ்துவிடம் , நீர் என்ன விரும்புகிறீரோ அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்று கேட்டேன். இந்தக் கூடுகை அவருக்குரியது என்றும் மேற்கு வங்காள மக்களும் மற்றவர்களும் இதில் கலந்து கொண்டு குணமளிக்கும் ஆசீர்வாதத்தைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

நான் இதைப்பற்றி கவலைப்பட தேவையிருக்கவில்லை.

அதன்பிறகு , எங்கள் கூடுகையிலுள்ள அபிஷேகம் பண்ணப்பட்ட மற்ற உறுப்பினர்களுடன் நான் இதை பகிர்ந்து கொண்டேன்.  அவர்களும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் இதற்கு விளக்கம் அளித்தனர்.

ஒரு சகோரி , வானவில் என்பதன் அர்த்தம் தெளிவாக உள்ளது என்றும் இயேசு கிறிஸ்து இந்த அடையாளத்தின் மூலம் உங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார் என்றும் கூறினார். அறிவியலின்படி  தெளிவான வானத்தில் வானவில் காணப்படுகிறது என்றும் வானவில் உருவாவதற்கு சூரியனும் வெளிச்சமும் தேவைப்படுகிறது என்றும் கூறினார்.

ஆனால் இயேசுகிறிஸ்து மேகமுட்டமான வானத்தில் இந்த வானவில்லைக் காட்டினார். உண்மையில் அவர் அதிசயங்களின் கர்த்தர் , உண்மையாக உயிரோடுள்ள தேவன்.

சில நாட்களுக்குப் பிறகு , இயேசு கிறிஸ்து திரும்பவும் இந்தக் காட்சியை கூடுகையில் பகிர்ந்து கொள்ளச் சொன்னார். நான் பகிர்ந்தேன். அதன்பிறகு பரிசுத்த ஆவியானவர் ஒரு சகோதரி மூலமாக 14,  பெப்ரவரி மாதம் 2023 ல் கீழ்கண்ட வசனங்களின் வழியாகப் பேசினார்.

எசேக்கியல் 1 : 25 : 28

” அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில் , அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின் மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. அவைகளின் தலைகளுக்கு மீலுள்ள மண்டலத்தின் மீதில் நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும் , அந்த சிங்காசனத்தின் சாயலின் மேல்  மனுஷசாயலுக்குத் ஒத்த ஒரு சாயலும் இருந்தது. அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுபோல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும் , அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக் கண்டேன். மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படி கிணப்படுகிறதோ , அப்படியே சுற்றிலுமுள்ள இந்தப் பிரகாசம் காணப்பட்டது. இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது. அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன் , அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன். “

இப்போது நான் மேற்கு வங்க மக்களுடனும்,  உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வங்காளத்தில்  வேரூன்றியவர்களுடனான காலை ஆராதனையைப் பார்க்கும் போது  வியப்படைகிறேன்.

இயேசுகிறிஸ்து மாலை நேரத்திலும் கூடுகை நடத்த வழிகாட்டினார். தினம்தோறும் விசுவாசிகள் வல்லமையான ஆச்சரியமிக்க சாட்சிகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

உண்மையில் இயேசு உயிருள்ள கர்த்தர். சாத்தியமற்றவைகளுக்கெல்லாம் அவர் கர்த்தர்.

லூக்கா 1 : 37

” தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.”

தீர்க்கத்தரிசனம் நிறைவேறியது.

2012 ல் ஒரு சகோதரர் நான் டெல்லியிலிருந்து வங்காளத்திற்குச் சென்று ஊழியம் செய்வேன் என்று தீர்க்கத் தரிசனம் சொன்னார். ஆம் அந்த நேரத்தில் நான் கொல்கத்தாவில் தங்கியிருந்தேன். ஒரு அமைச்சகத்தின் ஒரு ஜெபவீரராக இருந்தேன். எல்லா மகிமையும் துதியும் இரட்சகராகிய இயேசுகிறிஸ்து ஒருவருக்கே.

ஜெபம்.

அன்பின் பரலோகத் தந்தையே,உம்முடைய கிருபையின் சிங்காசனத்தின் முன்பாக தாழ்ந்து பணிகிறேன். இந்த செய்தியை படிக்கின்ற ஒவ்வொரு மனிதரிடமும் நீர் பேசவும்  உம்முடைய ராஜ்யம் விரிவடைவதற்காக அவர்களைப் பயன்படுத்தவும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. சுஷ்மிதா ராகா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 28-02-2023

கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுத்தல்.

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 29 ” ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் “
கர்த்தர் இந்த வசனங்களைக் குறித்து என்னை எச்சரித்தார்.

கர்த்தர் சபைகளுக்கும் அதன் குமாரர் குமாரத்திகளுக்கும் கூட இதைச் சொன்னார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2 : 2 – 3 ” உன் கிரியைகளையும் , உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும் , அபாபோஸ்தரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் , நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும் , பொறுமையாயிருக்கிறதையும் , என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். “


கர்த்தர் அவருடைய ராஜ்யத்திற்காக நாம் நிறைய செய்திருப்பதையும் கடந்தகாலத்தில் செய்தவைக்காக நம்மை பாராட்டியதையும் இங்கே குறிப்பிடுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 2 : 4 – 5
” ஆனாலும் , நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாயென்று உன் பேரில் எனக்கு குறையுண்டு. ஆகையால் , நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து , மனந்திரும்பி , ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து , நீ மனந்திரும்பாத பட்சத்தில் , உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன்.”

வெளிப்படுத்தின விசேஷம் 2 : 29 ல் கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்கிறார்.


நம்முடைய வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.
ஒரு குடும்பமாக, கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நிறைய அடிகளை எடுத்து வைத்துள்ளோம். அணி சபைகள் நடத்துகிறோம், சென்னையைப் போலவே, இந்தியாவிலும் நிறைய ஆராதனை பள்ளிகளை நடத்துகிறோம். ஆராதனைப் பள்ளிகளை நடத்த நிறைய இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நிறைய நேரங்களைச் செலவிட்டிருக்கிறோம்.
கர்த்தருடைய ராஜ்யத்திற்காக நாம் சுறுசுறுப்புடன் பங்கெடுத்ததால் அவர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார்.


எனினும் , நமது ஆதி அன்பு குறைந்துவிட்டது. பரிசுத்த ஆவியானவர் அந்த அன்பை இழந்ததற்காக விளக்குத் தண்டை எடுத்துப் போடுவேன் என்று எச்சரிக்கிறார்.


விளக்குத் தண்டு – நமது சந்தோஷம், நல்ல ஆரோக்கியம், வளமை, மற்றும் உயர்வைக் குறிக்கிறது. விளக்கு அணைக்கப்படும் போது இருளில் அடியெடுத்து வைப்பீர்கள். ஆதி அன்பை இழக்கக்கூடாது என்று கர்த்தர் என்னிடம் பேசியவுடன், நான் உடனடியாக என்னுடைய சகாக்களுடன் ஒரு அணிசபையைத் தொடங்கினேன். என்னுடைய பணியிடத்தில் மிக உயர்ந்த வெற்றி , சந்தோஷம் , மகிழ்ச்சி எல்லாவற்றையும் திரும்ப பெற்றேன். கர்த்தருக்கே மகிமை. கர்த்தர் நம்முடன் பேசும்போது நாம் அனைவரும் அவருடைய சத்தத்திற்கு செவி கொடுக்க வேண்டும்.

அதனால் நம் ஒளி – விளக்குத் தண்டு நம்மிடமிருந்து அகற்றப்படாது.

ஜெபம்


பரலோகத் தந்தையே , நாங்கள் இடப்புறமோ வலப்புறமோ செல்லும்போது , எங்களை சரியான பாதையில் வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துகிறோம். உங்கள் குரலை நாங்கள் கேட்கும் போதெல்லாம் அதனை கேட்டு சரியான பாதைக்கு வர எங்கள் அனைவருக்கும் உதவுங்கள். ஆமென்.

Sol.தியோடர் மொகந்தி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-02-2023

நம்முடைய கவனத்தையும் நோக்கத்தையும் எப்போது இழக்கிறோம் ?

ஆதியாகமம் 9 : 20 – 21
” நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சை ரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். “

நோவா ஒரு நீதிமானாகவும், கர்த்தரின் பார்வைக்கு தயவுள்ளவனாகவும், நீதியையும் கர்த்தருடைய கோபத்தைப் பிரசங்கிப்பவனாகவும், இருந்தான். கர்த்தருடைய வார்த்தைகளைக் கவனித்து அவருக்கு முழுமையாக கீழ்படிதலுள்ள ஒரு மனிதனாக இருந்தான். கர்த்தருடைய நோக்கத்திற்காக விற்கப்பட்ட மனிதன். கர்த்தருடைய வழிகளில் தன் குடும்பத்தை கொண்டு வருபவராக இருந்தார்.

இந்த மனிதனாகிய நோவா தன் வாழ்க்கையில் சில தவறுகளைச் செய்ததால் அதன் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றது.

1 . மது அருந்தினார்.

மத்தேயு 24 : 38
” எப்படியெனில் ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும் , ஜனங்கள் புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பெண் கொடுத்தும் “
ஜலப்பிரளயத்திற்கு முன் உள்ள தீய வாழ்க்கைமுறைகளில் குடிப்பழக்கமும் ஒன்று. நோவா குடிப்பதனால் உண்டான தீமைகளையும் கண்டார். கர்த்தரிடமிருந்து மக்களை விலக்குகின்ற அந்தப் பழக்கத்தையும் செய்ய ஆரம்பித்தார். கர்த்தருடைய காரியங்களில் வைராக்கியத்தையும் ஆர்வத்தையும் இழந்து இவ்வுலக இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

ஒருவன் தெய்வீக நோக்கங்களுக்காக வாழாதபோது மெதுவாக இலக்கற்ற நாட்டத்தில் ஈடுபட முனைவான். இது பெரும்பாலும் அடிக்கடி அழிவிலும் மன அழுத்தத்திலும் முடியும்.

2 . தன்னுடைய பிள்ளைகளை சபித்தார்.

காம் , தன் தந்தை கூடாரத்தில் குடிபோதையில் நிர்வாணமாக கிடப்பதைக் கண்டான். குடிபோதையில் இருந்ததற்காக மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக , தன் மகனை சபிப்பதற்கு தன்னுடைய ஆவிக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். நிறைய நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் தவறுகளை ஒருபோதும் ஒத்துக் கொண்டதுமில்லை. தங்கள் வழிகளை மாற்றிக் கொண்டதுமில்லை. மாறாக தங்கள் குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கும் தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்கிறார்கள்.
காம் கானானுக்கு முற்பிதாவாக இருந்தார். பல நூற்றாண்டுகளாக கானானில் வசிக்கக்கூடிய மக்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிரிகளாகவே இருந்தார்கள்.

3 . கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருக்குக் கீழ்படியவும் நோவா தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவில்லை.
நோவாவின் மூன்று பிள்ளைகளுக்கும், அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கர்த்தருடைய வழிகளைக் கற்பித்திருந்தால் அது எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

நோவா தன்னுடைய பிள்ளைகளுக்கு கர்த்தருக்கு செவிசாய்க்கவும் கீழ்படியவும் கற்றுக் கொடுத்திருந்தால் , அது எவ்வளவு ஆசீர்வாதமாக இருந்திருக்கும். நோவாவின் தோல்வி நீண்ட கால விளைவைக் கொடுத்தது.

பெற்றோர்களாகிய, தலைவர்களாகிய , நாமும் கூட நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க , வழி நடத்த, வழிகாட்டத் தவறினால் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும். ஆனால் நம் பிள்ளைகளை கர்த்தரின் வழிகளில் பயிற்றுவித்தால் வரும் தலைமுறைகள் கூட அந்த வழிகளைப் பின்பற்றும்.

உபாகமம் 24 : 14 ” உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புவிக்கவும் , உன் பாளயத்துக்குள்ளே உலாவிக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு உன்னைவிட்டுப் போகாதபடிக்கு உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. “கர்த்தருக்கே மகிமை.

Sol. அருண்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 26-02-2023

மற்றவர்களைவிட கர்த்தரை நாம் அதிகமாக நேசிக்கின்றோமா?

நாம் கர்த்தரை அன்பு செய்கிறோமா? ஏன் ? எவ்வளவு?

இயேசு பேதுருவை நோக்கி
” இவைகளைவிட என்னை அதிகமாக அன்பு செய்கிறாயா? என்று கேட்டார். இயேசு இதே கேள்வியை பேதுருவை நோக்கி மூன்று முறை கேட்டார். இயேசு , பேதுரு தம்மை அன்புசெய்கிறார் என்ற பதிலை அவரிடமிருந்து பெறுதற்காகவே இதனைக் கேட்டார். மிகவும் உணர்வுபூர்வமான சூழ்நிலை. யோனாவின் குமாரனாகிய சீமோனே என்று பேதுருவை அழைத்தார். இயேசு ஒருவேளை , அவருடைய சோதனையின் போது ஒரு பாறையாக அவருடன் உறுதியாக நிற்கும் வேளையில் பேதுருவின் பலவீனத்தை நினைவுபடுத்த , அவ்வாறு அழைத்திருக்கலாம்.

இயேசு சோதிக்கப்படும் போது பேதுரு அவரை மூன்றுமுறை மறுதலித்தார். மேலும் இயேசு , தம்மை மதிப்பிற்குரிய தலைவராகக் கொண்ட சீடரால் நண்பரால் மறுக்கப்படுவது எவ்வளவு வேதனைக்குரியது என்று சொல்ல இயேசு அவரைப் பார்த்தார். அவர் மறுதலித்தபோது இயேசுவின் கண்கள் தம்மை குத்தப்பட்டதைப் போல பார்க்கும்போது பேதுரு கசப்புடன் அழுதார். இயேசு உயிர்த்தெழுந்தபிறகு அவரை சந்தித்தபோது அவருடன் பேசினார். இருப்பினும் பேதுருவை இயேசுவுடனான தமது முந்தைய உறவுக்கு கொண்டு வருவது அவசியமாக இருந்தது. பேதுரு எப்படி இயேசுவின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்பதை நினைவுபடுத்துங்கள்.

மத்தேயு 26 : 33


” பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக : உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும் , நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றார். ”

இயேசுவின்மீது அவர் கொண்ட அன்பைப்பற்றி இயேசு அறிய விரும்பினார். அதை பகிரங்கமாக அறிவிக்க விரும்பினார். பேதுரு தன்மீது கொண்டிருந்த அன்பை இயேசு அறிந்திருந்தார். அதை அவர் மீண்டும் கேட்க விரும்பினார். அவருடைய சீடர்கள் நண்பர்கள் எல்லாரும் அவரைவிட்டு பயந்து சிதறி ஓடினார்கள். யோவான் மட்டுமே சிலுவையினருகில் அவருடன் இருந்தார்.

பேதுரு தன்னை எல்லாருக்கும் முதன்மையானவராய் கருதியிருக்கலாம் , எல்வாரையும் வழி நடத்தும் திறமை பெற்றிருக்கலாம். ஆனால் தன்னுடைய சுய மரியாதையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இயேசுவின் ராஜ்யத்திற்குள்ள பொறுப்புகளை ஒப்படைப்பதற்குமுன் அவரது மீட்பை இயேசு விரும்பினார். அவர் இயேசுவை மறுத்தது பெரும் குற்றமாகும். அவர் இயேசுவுடன் சமரசப்பட வேண்டியிருந்ததது. பேதுரு மற்றவர்களைவிட அதிகமாக பாவம் செய்தார், மேலும் அவர் மற்றவர்களைவிட அதிகமாக நேசிக்கிறாரா என்று கேட்டு அவரை மன்னிக்க இயேசு முயற்சி எடுத்தார். கர்த்தர் தன் அன்பைப் பற்றி திரும்பத் திரும்ப கேட்ட கேள்விகள் அவரது பலவீனத்தைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வந்தன. மன்னிப்பு அதிகமாக இருக்குமிடத்தில் அன்பு அதிகமாக இருக்கும் என்பதை இயேசு அறிவார். மூன்று முறை மறுதலித்ததால், மூன்றுமுறை அவரை நேசித்தேன் என்று இயேசு சொல்ல வைத்தார்.

லூக்கா 7 ம் அதிகாரத்திலும் இதே சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. இயேசு , இந்தக் கதையைச் சொன்னார். ஒருமனிதன் இருவருக்கு கடன் கொடுத்தான் . ஒருவனுக்கு 500 வெள்ளியும், மற்றவனுக்கு 50 வெள்ளியும் . ஆனால் இருவரும் அதை திருப்பிச் செலுத்தவில்லை. இருவரையும் இரக்கப்பட்டு மன்னித்து கடனை ரத்து செய்தார். இருவரில் யார் அதிகமாக நேசித்தார்கள் என்று இயேசு கேட்க, சீமோன் , பெரிய கடன் யாருக்கு ரத்து செய்யப்பட்டதோ அவர் தான் என்று பதிலளித்தார். அதுதான் சரி என்று இயேசு கூறினார். லூக்கா 7 : 41 – 43.

பவுல் எல்லா பாவிகளிலும் தான் முதன்மையானவன் என்று ஒப்புக் கொண்டார். கர்த்தர் அவரை மன்னித்தார். பேதுருவின் இந்த உணர்தல் அவரை பிரகடனப்படுத்தியது.

ரோமர் 8 : 37 – 39 ” இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும் , ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் , நிகழ் காரியங்களானாலும்,
வருங்காரியங்களானாலும், உயர்வானாலும் , தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்காதென்று நிச்சயித்திருக்கிறேன். “
இயேசு நம்மை மீட்டெடுக்க விரும்புகிறார், அவருடனான உறவை மீட்டெடுக்க விரும்புகிறார். நம் சொந்த வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் இயேசுவை மறுதலித்த பல காரணங்களை நாம் காணலாம். நம்முடைய உறவுமுறை, நம் நடத்தை, நம் பேச்சு, நம் ஆடை அணியும் முறை, நம் பொழுதுபோக்குகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க வேண்டும். அவர் பரிசுத்தமானவராக இருப்பதால் அவரை பின்பற்றுபவர்களும் பரிசுத்தமாக இருப்பது அவசியம். நம்முடைய பாவங்கள் அனைத்தும் இயேசுவின் மேல் சுமத்தப்பட்டு நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார்.

கர்த்தரிடம் சென்று , நம் தவறுகள், பாவங்களை ஒப்புக் கொண்டு , மன்னிப்பு கேட்டு, இயேசுவின் மூலம் நம் பிதாவாகிய தந்தையிடம் சமரசம் ஆக வேண்டும். இயேசுவின் விலை மதிப்பற்ற இரத்தத்தால் நம்மைக் கழுவ வேண்டும். அவரை நம்ப வேண்டும். அவரை விசுவசிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவின் சிலுவையைத் தவிர நமக்கு பெருமை கொள்ள ஏதுமில்லை. அவர் நம்முடைய எல்லா அநீதிகளையும் மன்னித்து சரீரம் மற்றும் ஆவிக்குரிய எல்லா நோய்களையும் சுகமாக்குகிறார். அவர் நேசிக்கப்படவும், மதிக்கப்படவும், போற்றப்படவும் தகுதியானவர். நாம் பாவிகளாக இருக்கும் போதே அவர் நம்மை நேசித்தார், நம்முடைய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஜெபம்


எங்களை நேசித்ததற்கும் , எங்கள் பாவங்களை மன்னித்ததற்கும் நன்றி கர்த்தரே. உமக்கு உண்மையாக இருக்க எங்களுக்கு உதவும். மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட அன்பு மற்றும் அமைதியால் எங்களை நிரப்பும். கர்த்தராகிய இயேசுவின் வழியாக நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

Sol. சலோமி குரியன்.