தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 27-02-2023

நம்முடைய கவனத்தையும் நோக்கத்தையும் எப்போது இழக்கிறோம் ?

ஆதியாகமம் 9 : 20 – 21
” நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத் தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சை ரசத்தைக் குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். “

நோவா ஒரு நீதிமானாகவும், கர்த்தரின் பார்வைக்கு தயவுள்ளவனாகவும், நீதியையும் கர்த்தருடைய கோபத்தைப் பிரசங்கிப்பவனாகவும், இருந்தான். கர்த்தருடைய வார்த்தைகளைக் கவனித்து அவருக்கு முழுமையாக கீழ்படிதலுள்ள ஒரு மனிதனாக இருந்தான். கர்த்தருடைய நோக்கத்திற்காக விற்கப்பட்ட மனிதன். கர்த்தருடைய வழிகளில் தன் குடும்பத்தை கொண்டு வருபவராக இருந்தார்.

இந்த மனிதனாகிய நோவா தன் வாழ்க்கையில் சில தவறுகளைச் செய்ததால் அதன் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றது.

1 . மது அருந்தினார்.

மத்தேயு 24 : 38
” எப்படியெனில் ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும் , ஜனங்கள் புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பெண் கொடுத்தும் “
ஜலப்பிரளயத்திற்கு முன் உள்ள தீய வாழ்க்கைமுறைகளில் குடிப்பழக்கமும் ஒன்று. நோவா குடிப்பதனால் உண்டான தீமைகளையும் கண்டார். கர்த்தரிடமிருந்து மக்களை விலக்குகின்ற அந்தப் பழக்கத்தையும் செய்ய ஆரம்பித்தார். கர்த்தருடைய காரியங்களில் வைராக்கியத்தையும் ஆர்வத்தையும் இழந்து இவ்வுலக இன்பங்களைத் தேடிக் கொண்டிருந்தார்.

ஒருவன் தெய்வீக நோக்கங்களுக்காக வாழாதபோது மெதுவாக இலக்கற்ற நாட்டத்தில் ஈடுபட முனைவான். இது பெரும்பாலும் அடிக்கடி அழிவிலும் மன அழுத்தத்திலும் முடியும்.

2 . தன்னுடைய பிள்ளைகளை சபித்தார்.

காம் , தன் தந்தை கூடாரத்தில் குடிபோதையில் நிர்வாணமாக கிடப்பதைக் கண்டான். குடிபோதையில் இருந்ததற்காக மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக , தன் மகனை சபிப்பதற்கு தன்னுடைய ஆவிக்குரிய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். நிறைய நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் தவறுகளை ஒருபோதும் ஒத்துக் கொண்டதுமில்லை. தங்கள் வழிகளை மாற்றிக் கொண்டதுமில்லை. மாறாக தங்கள் குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கும் தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவோ அல்லது மறைக்கவோ முயற்சிக்கிறார்கள்.
காம் கானானுக்கு முற்பிதாவாக இருந்தார். பல நூற்றாண்டுகளாக கானானில் வசிக்கக்கூடிய மக்கள் இஸ்ரவேலர்களுக்கு எதிரிகளாகவே இருந்தார்கள்.

3 . கர்த்தருடைய சத்தத்தைக் கேட்கவும், அவருக்குக் கீழ்படியவும் நோவா தன் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவில்லை.
நோவாவின் மூன்று பிள்ளைகளுக்கும், அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் கர்த்தருடைய வழிகளைக் கற்பித்திருந்தால் அது எவ்வளவு அழகாக இருந்திருக்கும்.

நோவா தன்னுடைய பிள்ளைகளுக்கு கர்த்தருக்கு செவிசாய்க்கவும் கீழ்படியவும் கற்றுக் கொடுத்திருந்தால் , அது எவ்வளவு ஆசீர்வாதமாக இருந்திருக்கும். நோவாவின் தோல்வி நீண்ட கால விளைவைக் கொடுத்தது.

பெற்றோர்களாகிய, தலைவர்களாகிய , நாமும் கூட நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க , வழி நடத்த, வழிகாட்டத் தவறினால் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும். ஆனால் நம் பிள்ளைகளை கர்த்தரின் வழிகளில் பயிற்றுவித்தால் வரும் தலைமுறைகள் கூட அந்த வழிகளைப் பின்பற்றும்.

உபாகமம் 24 : 14 ” உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புவிக்கவும் , உன் பாளயத்துக்குள்ளே உலாவிக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு உன்னைவிட்டுப் போகாதபடிக்கு உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. “கர்த்தருக்கே மகிமை.

Sol. அருண்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 26-02-2023

மற்றவர்களைவிட கர்த்தரை நாம் அதிகமாக நேசிக்கின்றோமா?

நாம் கர்த்தரை அன்பு செய்கிறோமா? ஏன் ? எவ்வளவு?

இயேசு பேதுருவை நோக்கி
” இவைகளைவிட என்னை அதிகமாக அன்பு செய்கிறாயா? என்று கேட்டார். இயேசு இதே கேள்வியை பேதுருவை நோக்கி மூன்று முறை கேட்டார். இயேசு , பேதுரு தம்மை அன்புசெய்கிறார் என்ற பதிலை அவரிடமிருந்து பெறுதற்காகவே இதனைக் கேட்டார். மிகவும் உணர்வுபூர்வமான சூழ்நிலை. யோனாவின் குமாரனாகிய சீமோனே என்று பேதுருவை அழைத்தார். இயேசு ஒருவேளை , அவருடைய சோதனையின் போது ஒரு பாறையாக அவருடன் உறுதியாக நிற்கும் வேளையில் பேதுருவின் பலவீனத்தை நினைவுபடுத்த , அவ்வாறு அழைத்திருக்கலாம்.

இயேசு சோதிக்கப்படும் போது பேதுரு அவரை மூன்றுமுறை மறுதலித்தார். மேலும் இயேசு , தம்மை மதிப்பிற்குரிய தலைவராகக் கொண்ட சீடரால் நண்பரால் மறுக்கப்படுவது எவ்வளவு வேதனைக்குரியது என்று சொல்ல இயேசு அவரைப் பார்த்தார். அவர் மறுதலித்தபோது இயேசுவின் கண்கள் தம்மை குத்தப்பட்டதைப் போல பார்க்கும்போது பேதுரு கசப்புடன் அழுதார். இயேசு உயிர்த்தெழுந்தபிறகு அவரை சந்தித்தபோது அவருடன் பேசினார். இருப்பினும் பேதுருவை இயேசுவுடனான தமது முந்தைய உறவுக்கு கொண்டு வருவது அவசியமாக இருந்தது. பேதுரு எப்படி இயேசுவின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்பதை நினைவுபடுத்துங்கள்.

மத்தேயு 26 : 33


” பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக : உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும் , நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றார். ”

இயேசுவின்மீது அவர் கொண்ட அன்பைப்பற்றி இயேசு அறிய விரும்பினார். அதை பகிரங்கமாக அறிவிக்க விரும்பினார். பேதுரு தன்மீது கொண்டிருந்த அன்பை இயேசு அறிந்திருந்தார். அதை அவர் மீண்டும் கேட்க விரும்பினார். அவருடைய சீடர்கள் நண்பர்கள் எல்லாரும் அவரைவிட்டு பயந்து சிதறி ஓடினார்கள். யோவான் மட்டுமே சிலுவையினருகில் அவருடன் இருந்தார்.

பேதுரு தன்னை எல்லாருக்கும் முதன்மையானவராய் கருதியிருக்கலாம் , எல்வாரையும் வழி நடத்தும் திறமை பெற்றிருக்கலாம். ஆனால் தன்னுடைய சுய மரியாதையிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இயேசுவின் ராஜ்யத்திற்குள்ள பொறுப்புகளை ஒப்படைப்பதற்குமுன் அவரது மீட்பை இயேசு விரும்பினார். அவர் இயேசுவை மறுத்தது பெரும் குற்றமாகும். அவர் இயேசுவுடன் சமரசப்பட வேண்டியிருந்ததது. பேதுரு மற்றவர்களைவிட அதிகமாக பாவம் செய்தார், மேலும் அவர் மற்றவர்களைவிட அதிகமாக நேசிக்கிறாரா என்று கேட்டு அவரை மன்னிக்க இயேசு முயற்சி எடுத்தார். கர்த்தர் தன் அன்பைப் பற்றி திரும்பத் திரும்ப கேட்ட கேள்விகள் அவரது பலவீனத்தைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வந்தன. மன்னிப்பு அதிகமாக இருக்குமிடத்தில் அன்பு அதிகமாக இருக்கும் என்பதை இயேசு அறிவார். மூன்று முறை மறுதலித்ததால், மூன்றுமுறை அவரை நேசித்தேன் என்று இயேசு சொல்ல வைத்தார்.

லூக்கா 7 ம் அதிகாரத்திலும் இதே சம்பவம் சொல்லப்பட்டுள்ளது. இயேசு , இந்தக் கதையைச் சொன்னார். ஒருமனிதன் இருவருக்கு கடன் கொடுத்தான் . ஒருவனுக்கு 500 வெள்ளியும், மற்றவனுக்கு 50 வெள்ளியும் . ஆனால் இருவரும் அதை திருப்பிச் செலுத்தவில்லை. இருவரையும் இரக்கப்பட்டு மன்னித்து கடனை ரத்து செய்தார். இருவரில் யார் அதிகமாக நேசித்தார்கள் என்று இயேசு கேட்க, சீமோன் , பெரிய கடன் யாருக்கு ரத்து செய்யப்பட்டதோ அவர் தான் என்று பதிலளித்தார். அதுதான் சரி என்று இயேசு கூறினார். லூக்கா 7 : 41 – 43.

பவுல் எல்லா பாவிகளிலும் தான் முதன்மையானவன் என்று ஒப்புக் கொண்டார். கர்த்தர் அவரை மன்னித்தார். பேதுருவின் இந்த உணர்தல் அவரை பிரகடனப்படுத்தியது.

ரோமர் 8 : 37 – 39 ” இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும் , ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் , நிகழ் காரியங்களானாலும்,
வருங்காரியங்களானாலும், உயர்வானாலும் , தாழ்வானாலும், வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்காதென்று நிச்சயித்திருக்கிறேன். “
இயேசு நம்மை மீட்டெடுக்க விரும்புகிறார், அவருடனான உறவை மீட்டெடுக்க விரும்புகிறார். நம் சொந்த வாழ்க்கையை நாம் திரும்பிப் பார்த்தால் இயேசுவை மறுதலித்த பல காரணங்களை நாம் காணலாம். நம்முடைய உறவுமுறை, நம் நடத்தை, நம் பேச்சு, நம் ஆடை அணியும் முறை, நம் பொழுதுபோக்குகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க வேண்டும். அவர் பரிசுத்தமானவராக இருப்பதால் அவரை பின்பற்றுபவர்களும் பரிசுத்தமாக இருப்பது அவசியம். நம்முடைய பாவங்கள் அனைத்தும் இயேசுவின் மேல் சுமத்தப்பட்டு நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார்.

கர்த்தரிடம் சென்று , நம் தவறுகள், பாவங்களை ஒப்புக் கொண்டு , மன்னிப்பு கேட்டு, இயேசுவின் மூலம் நம் பிதாவாகிய தந்தையிடம் சமரசம் ஆக வேண்டும். இயேசுவின் விலை மதிப்பற்ற இரத்தத்தால் நம்மைக் கழுவ வேண்டும். அவரை நம்ப வேண்டும். அவரை விசுவசிக்க வேண்டும். கிறிஸ்து இயேசுவின் சிலுவையைத் தவிர நமக்கு பெருமை கொள்ள ஏதுமில்லை. அவர் நம்முடைய எல்லா அநீதிகளையும் மன்னித்து சரீரம் மற்றும் ஆவிக்குரிய எல்லா நோய்களையும் சுகமாக்குகிறார். அவர் நேசிக்கப்படவும், மதிக்கப்படவும், போற்றப்படவும் தகுதியானவர். நாம் பாவிகளாக இருக்கும் போதே அவர் நம்மை நேசித்தார், நம்முடைய தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஜெபம்


எங்களை நேசித்ததற்கும் , எங்கள் பாவங்களை மன்னித்ததற்கும் நன்றி கர்த்தரே. உமக்கு உண்மையாக இருக்க எங்களுக்கு உதவும். மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட அன்பு மற்றும் அமைதியால் எங்களை நிரப்பும். கர்த்தராகிய இயேசுவின் வழியாக நன்றி செலுத்துகிறோம். ஆமென்.

Sol. சலோமி குரியன்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 25-02-2023

வயது வெறும் ஒரு எண் மட்டுமே

ஆதியாகமம் 17 : 1- 2


” ஆபிரகாம் தொண்ணூற்றொன்பது வயதானபோது , கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்வமையுள்ள தேவன் . நீ எனக்கு முன்பாக நடந்து உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய் பெருகப் பண்ணுவேன் என்றார்.”
நம் கர்த்தர் இரக்கத்தின், ஒற்றுமையின் ,உடன்படிக்கையின் தேவன்.

மக்களால் , குழந்தைகளால் , முதியவர்களால் புறக்கணிக்கப்பட்ட , அலட்சியப்படுத்தப்பட்ட இரண்டு வகையான குழுக்கள் உள்ளன. நாம் கலந்துரையாடும் போது அவர்களது கருத்துக்களை கேட்பதோ முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும்போதும் அவர்களை சேர்க்கவோ, அவர்களது செயல்களை கவனிக்கவோ செய்வதில்லை.

இன்று முதியவர்கள் அவர்களுடைய முதிர் வயதில் காப்பகங்களிலோ அல்லது தனிமையில் கைவிடப்பட்டோ தான் இருக்கிறார்கள்.
பேரூந்து நிலையங்களிலும் , ரயில் நிலையங்களிலும், கோயில்களில்களிலும் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான பெற்றோர்களின் பல கதைகள் தொடர்ந்து செய்திகளில் வருவது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

இன்றைய உலகில் நமது வீட்டில் 99 வயது முதியவர் இருந்தால் , அவர்களுக்காகவோ, அவர்களது எதிர்காலத்திற்காகவோ எந்தத் திட்டத்தையும் நாம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கர்த்தர் ஆபிரகாமுடன் இன்னும் அதைச் செய்து முடிக்கவில்லை. 99 வயது முதிர்ந்தவருக்கும் 90 வயது முதிர்ந்த அவரது மனைவிக்கும் கர்த்தர் திட்டமிட்டார்.


வயது ஒரு பொருட்டேயல்ல. நீங்கள் இளைஞராகவோ, வயது முதிர்ந்தவராகவோ அல்லது அதற்கு இடைப்பட்டவராகவோ இருக்கலாம். கர்த்தர் உங்கள்மீது ஆர்வமுடையவராக இருந்து உங்களுக்கான திட்டங்களை அவர் கைவிடவில்லை. அவர் உங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் வாழ்க்கையில் அவருடைய பெரிய திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறார்.

உங்கள் சொந்தம் உங்களை கைவிட்டிருக்கலாம் , உங்கள் உடல்நிலை நம்பிக்கையூட்ட முடியாத பலவீனமாக இருக்கலாம். ஆனாலும் கர்த்தர் உங்களைக் கைவிடவில்லை. அவர் திட்டமிட்டு உங்களில் தொடங்கிய நல்ல காரியத்தை நிறைவேற்றுவார்.கர்த்தர் உங்களை நேசிக்கிறார். ஆமென்.

Sol. அருண்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 24-02-2023

மாற்கு 9 : 50 " உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப் போனால் , அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள் ?  உங்களுக்குள்ளே உப்பையுடையவர்களாயிருங்கள், ஒருவரோடு ஒருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார் "

வேதாகமத்தில் உப்பின் பங்கு பழைய ஏற்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டு காலங்களில் எபிரேய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானதாகும். உப்பு என்பது வாழ்க்கைக்கு  அவசியமான ஒரு கனிமமாகும். இது பழங்காலத்திலிருந்தே பல கலாச்சாரங்களில் சுவையூட்டியாகவும் , பாதுகாக்கும் பொருளாகவும் , கிருமிநாசினியாகவும் , சடங்கு சம்பிரதாயங்களின் ஒரு அங்கமாகவும் பரிமாற்றத்தின் அலகாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதாகமத்தில் உப்பு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. பல்வேறு சூழல்களில் நிரந்தரம், விசுவாசம், ஆயுள், நம்பகத்தன்மை, பயன், மதிப்பு,மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றைக் குறிக்க உருவகமாக பயன்படுத்தப்படுகிறது.

உப்பு நிச்சயமாக அதன் உப்புத்தன்மையை இழக்க முடியாது. ஆனால் உப்பின் தூய்மை வேறுபடும். குறிப்பாக சவக்கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பு அசுத்தங்களால் அதிக அளவில் பாதிப்படைகிறது. உப்பில் பல தாதுக்கள் கலந்தால் அதன் சுவை  நீர்த்துப் போகும். அது பயனற்றதாகிவிடும்.அதுபோலவே சீடர்களும் இதே வழியில் உலகின் மதிப்புகளான அதிகாரம், வல்லமை, பதவி போன்றவைகளை அனுமதிக்கும் போது , கர்த்தரின் விருப்பத்திற்கேற்ப அவைகளை அடக்கி சுத்திகரிக்கப்பட்ட உப்பாக மாறுகிற சவாலை மேற்கொள்கின்றனர்.

மற்றொரு வழியில் பார்த்தோமென்றால்

” உப்புத் தன்மை” என்பது

உப்பின் நோக்கமாகும். அது அந்த கனிமத்தினை வரையறுக்கும் பண்புகளாகும். இது  மிக முக்கியமானதென்றால்  எப்போதாவது  பழைய நிலைக்கு மீட்டெடுக்கப்படுமா? கர்த்தரின் ராஜ்யத்தில் இயேசுவின் படையணியின் தேவையை முக்கியமானதாகக் கருத வேண்டும். இரண்டாம் நிலையாகக் கருதக்கூடாது.

இதேபோல் இயேசு நம் அனைவரையும் இந்த உலகத்தின் உப்பாக மாற அழைக்கிறார்.

மத்தேயு 5 : 13” உப்பு நல்லது, ஆனால் உப்பு அதன் சாரமற்றுப் போனால் , எதனால் சாரமாக்கப்படும் ? வெளியே கொட்டப்படுவதற்கும் , மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.” நமது சமுதாயம், நமது நாடு, நமது கிராமம், நமது தொகுதிகள் மற்றும் பலவற்றை தூய்மைப்படுத்துவதில் நாம் அவருடைய முகவர்களாக இருக்க வேண்டும். உப்பைப்போல , நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மிகச் சிறந்த இயல்பை வெளிக் கொண்டு வர வேண்டும். இதன் முடிவு இயல்பாகவே மற்றவருடன் சமாதானமாக இருக்கச் செய்யும். இந்த உணர்வு பண்டைய காலத்தில் உப்பைப் பற்றிய ஒரு சபதத்தை நான் நினைக்க வைத்தது.  இருவர் உப்பை பகிர்ந்து  கொண்டால், அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் , ஒருவரையொருவர் பாதுகாக்கவும் , ஆதரவளிக்கவும் வேண்டும். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் இதேபோன்று உறுதிமொழியைக் கடைபிடிக்க வேண்டும்.

மாற்கு 9 : 33 – 35 இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து” நீங்கள் எதைக் குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினீர்கள் என்று கேட்டார். அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணியதாக கூறினர்.  அப்பொழுது இயேசு ” எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லோருக்கும் கடையானவனும் , எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக் கடவன் என்று சொன்னார். “

மாற்கு 9 : 36 , 37 ,39 ,40 ல் சிறுபிள்ளையை அவர்கள் நடுவிலே நிறுத்தி, சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினால் ஏற்றுக் கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்கிறான் என்றார்.

அப்போஸ்தலர்கள் இயேசுவின் ராஜ்யத்தில்  தங்களுடைய நிலையைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் , அவர் ஆலயத்திற்கு புதிய விசுவாசிகள் வருவதைக் குறிப்பிடுகிறார். மேலும் அவர்கள் கீழ்படிவதற்கு தனிப்பட்ட முறையில் தியாகங்கள் செய்ய வேண்டும் என்கிறார்.

மத்தேயுவும், லூக்காவும் உப்பில்லாதவர்கள் தூக்கி எறியப்பட்டு மிதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள்.

மாற்கு 9 : 38  யோவான் இயேசுவைப் பார்த்து போதகரே நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம். அவன் நம்மைப் பின்பற்றாததால் அவனைத் தடுத்தோம் என்றான்.  இயேசு அதற்கு அவனைத் தடுக்க வேண்டாம் என்று கூறுகிறார். அதிகாரமும் அவர்களது  நிலையும் அவரை எவ்வளவு தூரம் பின்பற்றுகிறார்கள் என்பதைக் குறிக்கும் அடையாளம் அல்ல என்று விளக்குகிறார். மற்றவர்களிடமிருந்து மிகச் சிறந்த ஒன்றை வெளிக்கொணர்வதும் அமைதியைக் கொண்டுவருவதும் ஒரு சிறந்த பரிசோதனை.

ஜெபம்.

பரலோகத் தந்தையே, நாங்கள் உப்பைப் போல இருப்பதன்மூலம் எங்களைச் சுற்றி இருப்பவர்களிடமுள்ள மிகச் சிறந்ததை வெளிக்கொண்டு வர முடியும். பதவி, அதிகாரம் எங்கிருந்தாலும் ஆசைப்படாமலிருக்க கர்த்தரே உதவி செய்வீராக. எங்கள் வாழ்க்கைப் பாதையில் உம்மை நெருக்கமாகப் பின்பற்றவும் உமக்கு கீழ்படிந்து நடக்கவும் உதவுவீராக. உமது திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும் சுத்த கருவியாக எங்களை ஆக்கும். உமது வழிகாட்டியாகவும் எஜமானராகவும் இருக்க  ஜெபிக்கிறோம் . ஆமென்.

Sol. Dr. மோகன் பர்மர்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-02-2023

லூக்கா 6 : 46 – 49

”  என்னை ஆண்டவரே ! ஆண்டவரே ! என்று நீங்கள் சொல்லியும் நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற் போனதென்ன?  என்னிடத்தில் வந்து என் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறான் என்று உங்களுக்குக் காண்பிப்பேன். ஆழமாய்த் தோண்டி கற்பாறையின் மேல் அஸ்திபாரம் போட்டு வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான். பெருவெள்ளம் வந்து , நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்கக்கூடாமற் போயிற்று, ஏனென்றால் அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான், நீரோட்டம் அதன்மேல் மோதினவுடனே அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். “

மேலே சொன்ன வசனங்களில் இயேசு இரண்டு விதமான மனிதர்களைப் பற்றி பேசுகிறார்.

1 ) அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவர்.

 2 ) அவருடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்காதவர்.

நாம் இதில் எந்த வகை என்பதைப் பார்க்கலாம்.

நாம் தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கிறோம். இவை நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிய பயமாகவோ, கோபமாகவோ, பெருமையாகவோ, திருமணப் பிரச்சனைகளாகவோ,  குழந்தைகளைக் குறித்த கவலைகளாகவோ, வேலை தொடர்பான பிரச்சனைகளாகவோ, உறவுமுறை சார்ந்த பிரச்சனைகளாகவோ, நோய், வறுமை போன்றவைகளாகவோ இருக்கலாம். இந்த பிரச்சனைகளைக் கையாள நாம் போராடுவோம், ஆனால் நிறைய நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது. புயலின் நடுவிலோ, நம்மைச் சுற்றிலும் வெள்ளம் இருப்பதாகவோ அடிக்கடி உணர்கிறோம். புயலின் மத்தியில் நாம் தீர்வுக்காக  உலகம் சார்ந்த வழிகளைத் தேடுகிறோமா அல்லது கர்த்தருடைய வசனங்களைத் தேடுகிறோமா? கர்த்தருடைய வசனங்களை கேட்கவும் வாசிக்கவும் செய்து கொண்டிருக்கிறோம் .

குறிப்பாக  நாம் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும் போது அவற்றை செயல்படுத்துகிறோமா?

இதை ஒரு நிஜ வாழ்க்கைச் சூழலுடன்  அலசுவோம். உங்கள் மாமியார் அல்லது உங்கள் சக ஊழியர் உங்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் , தினமும் கடினமாக நேரத்தைக் கொடுக்கிறார்கள். ஒவ்வொன்றையும்  உங்கள் இடத்திலிருந்தும்  உங்கள் கண்ணோட்டத்திலிருந்தும் நிரூபிக்க திருப்பி போராடுகிறீர்கள். இந்த உலகம் உங்களுக்கு கற்றுத் தந்ததன் அடிப்படையில் நீங்கள் இதைச் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் அமைதியை இழப்பதைத்தான் பெறுவீர்கள்.

கலாத்தியர் 5 : 19 – 21

” மாமிசத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன : விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லையென்று, முன்னே நான் உங்களுக்குச்  சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். ”  இதில் உள்ளதைப் போல உங்கள் மாமிச இயல்பை நீங்கள் கவனித்தால் வெடித்திருக்கும் . நாம் கர்த்தருடைய வசனங்களைக் கேட்டிருந்தாலும் படித்திருந்தாலும் அதன்படி நாம் வாழ முடியாது. வெள்ளம் வந்தது , நம்முடைய மாமிச இயல்பு மட்டுமே அதிகரித்தது , நாம் பரலோகத்திலுள்ள தந்தையை மகிமைப்படுத்தவில்லை.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க கர்த்தரின் தீர்வு என்ன என்பதை அறிய கர்த்தருடைய வசனத்தைப் பார்ப்போம்.

லூக்கா 6 : 27 "  உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." கர்த்தரின் பிள்ளைகளாக நம்முடைய பிதா, எதிரிகளை சிநேகிக்கவும் , நம்மை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யவும் , நம்மை சபிப்பவர்களை ஆசீர்வதிக்கவும், நம்மை துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிக்கவும் சொல்கிறார். அவருடைய அன்பை வெளிப்படுத்தும் ஒரே வழி அவருடைய கட்டளைகளை பின்பற்றுவதாகும். முதலில் அவற்றை பின்பற்றுவதும் கடைபிடிப்பதும் கடினமாக இருந்தாலும் அவற்றை நாம் செய்யும் போது ஆவியின் கனிகளை நாம் அதிகரிக்கிறோம். நாம் அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதன் மூலம் நாம் அவரை பிரியப்படுத்தும் போது  அவர் நம் இருதயங்களையும் எண்ணங்களையும் அமைதியில் நிரப்புகிறார்.

பிலிப்பியர் 4 : 7 ” அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக  காத்துக் கொள்ளும். ” 

கலாத்தியர் 5 : 22 – 23

" ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம் , சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் , சாந்தம், இச்சையடக்கம், இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

உங்கள் வாழ்க்கையில் உறவுகளுக்கிடையிலான பிரச்சனையின் வடிவத்தில் வெள்ளம் வந்தால் , உலக ரீதியில் அதற்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக , கர்த்தருடைய வசனங்களில் தீர்வு காண்பதை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் செயலுக்கான பரிசு கர்த்தருடனான நெருக்கத்தை அதிகரிக்கும். நீங்கள் பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டைப் போல எந்தவித சேதமும் வராமல்  உறுதியாய் நிற்பீர்கள். அதுமட்டுமல்ல உங்களுடைய செயல்களுக்கான பரிசுகள் வந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு நம்மை  வெறுத்தவர்களுக்காக ஜெபித்தால் நாம் அன்பு செய்யப்படுவோம்  ஆசீர்வதிக்கப்படுவோம், மீட்பராகிய கர்த்தர் உங்களுடைய மாமியார் மற்றும் சக ஊழியர்களுடனான உறவை மீட்டெடுப்பார்.

நாம் இயேசுவில் வேரூன்றியிருக்கும் போது பழங்களைத் தருவதற்கான அனைத்து ஊட்டச் சத்துகளையும் அவரிடமிருந்து பெறுவோம். உலகில் எந்த வளத்தையும் நாம் தேட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நமக்குத் தேவையான அனைத்தும் இயேசுவிடமிருந்து வருகிறது. அவருடைய வழிகளில் நாம் நடக்கும் போது வாழ்க்கை மிகவும் எளிதாக இருக்கும். நம் வாழ்க்கை எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் பிரச்சனையில்லாமலும் இருக்கும் என்று நான் கூறவில்லை. நாம் பிரச்சனைகளை எதிர்கொள்வோம், ஆனால் கர்த்தருடைய வசனங்கள் நம் இதயங்களில் இருக்கும் போது  பரிசுத்த ஆவியின் கனிகளால் எல்லா நேரங்களிலும்  நிரப்பப்படுவோம்.  நம்முடைய சூழ்நிலையை பொருட்படுத்தாமல் , நாம் மகிழ்ச்சியாகவும் , திருப்தியாகவும், கர்த்தருக்குள்  சமாதானமாகவும் இருக்க முடியும்.

Sol. எட்விற்றா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-02-2023

ரோமர் 10 : 10 வசனம்  சொல்கிறது ,

” நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.  அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்   வெட்கப்படுவதில்லை . ”

அல்லேலூயா. கர்த்தருக்கே மகிமை.

மேற்கூறிய வசனங்கள் , கர்த்தரை இருதயத்திலிருந்து விசுவாசிப்பவர்கள் ஒருபோதும் வெட்கப்படுதில்லை என்று சொல்கிறது. இதனை நாம் வேதாகமத்தின் சில வசனங்களின் வழியாக நிரூபிக்கலாம்.

நாம் யோசுவா புத்தகத்தை படிக்கும் போது இரண்டு இஸ்ரவேலர்கள் எரிக்கோ நகரத்திற்கு வேவு பார்க்க செல்கிறார்கள். விபசாரத் தொழில் புரியும் ராகாப் என்ற பெண் அவர்கள் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்தாள். இந்த இஸ்ரவேலர்கள் அவளுடைய வீட்டில் தங்குகிறார்கள்.

யோசுவா 2 : 9 – 11

” கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்  உங்களைப் பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும் , உங்களைக் குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்து போனார்களென்றும் அறிவேன். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது , கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணினதையும் நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததைப்பற்றி கேள்விப்பட்டோம் . கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்து போயிற்று. உங்கள் தேவனாகிய கர்த்தரே, உயரே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். ” 

இதில் இந்தப் பெண் ராகாப் , யெகோவா கர்த்தர் மேலுள்ள விசுவாசத்தை தன் இருதயத்தினால்  வெளிப்படுத்தி வாயினால்  அறிக்கையிடுகிறாள். கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்கு கொடுத்தார்  என்று உறுதியாக நம்புவதாக அவள் சொல்லத் தொடங்கினாள். எரிக்கோவில் குடியிருக்கக்கூடிய மக்கள் அனைவரும் பயந்தார்கள். ஏனென்றால் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வரும்போது கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக  செங்கடலின் தண்ணீரை வற்ற வைத்தார் என்று கேள்விப்பட்டிருந்தார்கள். மேலும் யோர்தான் ஆற்றினருகில்  வாழ்ந்த இரண்டு எமோரிய ராஜாக்களை வீழ்த்தியதையும் அறிந்து எங்கள் இருதயம் உருகிற்று . உங்கள் தேவனாகிய கர்த்தர் உயர்ந்தவர் என்று அறிக்கையிடுகிறாள் . அவளுடைய இந்த அறிக்கையினால் கர்த்தர் இந்த சகோதரிக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட திருமண  வாழ்க்கையை  அளித்தார். அவர் ராகாப் மூலம் போவாஸைப் பெற்ற சாலமோனின் மனைவியாவார். மேலும் கர்த்தர் அவளை இயேசுகிறிஸ்துவின் வம்சத்தில் இணைத்தார். இந்த வழியில் கர்த்தர் அவளுடைய அவமானத்தை அழித்து அந்தப் பெண்ணுடைய பெற்றோர் , சகோதர , சகோதரிகள் எல்லாரையும் காப்பாற்றினார்.

இதுபோலவே , ரூத்தின் வாழ்க்கையிலும் அறிக்கையிடுதல்  என்ற வார்த்தையைப் பார்க்கிறோம்.

ரூத் 1 : 16 நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து , என்னோடே பேச வேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” 

அவளுடைய  விசுவாசம் மற்றும் அறிக்கையினால் மட்டுமே அவள் ஆசீர்வாதத்தைப் பெற்றாள் , திருமணத்தாலும் குழந்தைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டாள்.

புதிய ஏற்பாட்டிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு தன் கிராமத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்த ஒரு சமாரியப் பெண்ணைப் பார்க்கிறோம். எல்லா வேத வசனங்களும் நமக்குப் போதிப்பது , நாம் நற்செய்தியை அறிவிக்கும்போது அவமானம் மற்றும் இகழ்ச்சியான வாழ்விலிருந்து  மரியாதையும் கண்ணியமும் பெறக்கூடிய ஆசீர்வாதமான வாழ்க்கை கிடைக்கும் என்பதாகும். கர்த்தர் நம்  கவலைகளையெல்லாம் எடுத்துப்போட்டு அவருடைய சந்தோஷத்தினால் நம்மை நிரப்புவார்.

மத்தேயு : 5 : 8 

” இருதயத்தில்  சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.”

மத்தேயு 6 : 33

” முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்  கொடுக்கப்படும். “

நன்றி இரக்கம் நிறைந்த தந்தையே , உமது ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் எங்களுக்குத் தேவைப்படுகிறது. எங்களை ஆசீர்வதியும்.எப்போதும் உமது நீதியைத் தேட எங்களுக்கு உதவும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. குஷி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-02-2023

கர்த்தரோடுஇருப்போம்

கர்த்தர் யோசேப்போடு இருந்தார். (ஆதி 39:2) எனவே பரிசுத்தத்தை காத்து கொண்டான்.தன் எஜமானின் மனைவியோடு சயனிக்க இணங்காமல்.


நான் இதனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி❓ (39:9)
என்று சொல்லி தன்னுடைய வஸ்திரத்தை எஜமானனின் மனைவியின் கையில் விட்டு விட்டு தூரமாய் ஓடிப் போனான். இப்படி தைரியமாக ,மாமிச இச்சைக்கு விலக்கி, செயல்பட வைத்தது
கர்த்தர் யோசேப்போடு இருந்ததுதான். இதனித்தம்
சிறையில் வைக்கப்பட்டப் போது,
கர்த்தர் சிறையிலும் யோசேப்போடு இருந்தார். எனவே சிறையில் உள்ள கைதிகள் அனைவருக்கும் தலைவனாக இருந்து அவர்களை விசாரித்து அவர்களுக்கு உதவினான். சூழ்நிலை அவனுக்கு விரோதமாக இருந்தபோதும்
மனம் சோர்ந்து போகாமல் நன்மை செய்கிறவனாக காணப்பட்டான். இவையெல்லா வற்றிற்கும் காரணம் கர்த்தர் அவரோடு இருந்தது தான். மற்றோரு உதாரணத்தை பார்ப்போம்.


ஈசாக்கோடு கர்த்தர் இருந்தார். (ஆதி 26:28) எனவே பஞ்ச காலத்திலும் விதை விதைத்த போது நூறு மடங்கு பலனடைந்தான். மேலும் ஐஸ்வரியவனாகி வர வர விருத்தியடைந்து மகா பெரியவனானான். மேலும் எங்கெங்கு ஈசாக்கு துரவை தோண்டினானோ அங்கெல்லாம் பெலிஸ்தர் அவன் மேல் உள்ள பொறாமையினால் வாக்கு வாதம் பண்ணின போது அந்த துரவை விட்டு விட்டு வேறு இடத்துக்கு சென்றான். இப்படியாக விட்டு கொடுக்கும் மனப்பான்மை. பஞ்ச காலத்திலும் ஐஸ்வரியவனாக ஆனது எல்லாம் கர்த்தர் அவனுடன் இருந்தது நிமித்தம் உண்டானது.


அப்போஸ்தலர்கள் உடன் இயேசு கிறிஸ்து 3.5
வருடம் இருந்தார். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் போதனை செய்த தோடு தாம் செய்யும் உழியங்களை (அற்புதங்களை, அதிசயங்கள்) உடன் இருந்து கற்றுக் கொள்ள செய்தார். இயேசு பன்னிரண்டு சீஷரையும் வர வைத்து தேவனுடைய ராஜ்யத்தை குறித்து. பிரசங்கிக்கவும் பிணியாளிகளைச் சொஸ்தமாக் க வும் அனுப்பி வைத்தார். லூக் (9:2) அவர்கள் புறப்பட்டு போய் கிராமங்கள் தோறும் திரிந்து எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பினியாளிகளைக் குணமாக்கினார்கள். திரளான ஜனங்கள் இயேசுவுக்கு பின் சென்றார்கள். அவர்களை இயேசு சொஸ்தமாக்கினார். (மத் 19 : 2) எப்பொழுதும் இயேசுவிற்கு பின்னால் திரளான ஜனங்கள் சென்றார்கள். அவர்களிடம் இருந்த சகல வியாதிகளையும் சொஸ்தமாக்கினார். சொஸ்தமாகாத வியாதி ஒன்று இல்லை என்று சொல்லலாம். மேலும் இயேசு என்னை விசுவாசிகிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோ 14 :12) என்று கூறினார் . அப்படியே பேதுருவின் நிழல் பட்டு அநேகர் சொஸ்தமானார்கள். பவுலின் உறமால்களும் கச்சை களும் பலரை சொஸ்தபடுத்தின.


தற்போதைய நிலை என்ன❓
இயேசுவின் சொஸ்தமாக்குகிற வல்லமை குறைந்து விட்டதா? விஞ்ஞானமும் மருத்துவமும் வளர வளர கிறிஸ்துவின் மேல் அவர்களின் விசுவாசம் குறைந்து விட்டது. எனவே தான் பல நகரங்களில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், வளரும் செயற்கை கருத்தரிக்கும் ஆஸ்பத்திரிகளும் அதிகமாகிவிட்டன. தடுக்கி விழுந்த இடமெல்லாம் மருந்து விற்பனை நிலையங்கள் .நிலமை மாறவேண்டும்.


AOJக்கு வெளிபடுத்தப்பட்ட அணிச் சபைகளில் அநேகர் சொஸ்தமாகிறார்கள். பிசாசுகள் துரத்தப்படுகின்றன. நானும் தேனாம்பேட்டை பகுதி அணிச் சபை பொறுப்பாளராக இருந்த வீ. பெனாவின் சாமுவேலும் அணிச்சபை நடத்தினர். 2 வது வாரத்தில் நம் ஒவ்வொருவரும் ஜெபத்தின் மூலம் வியாதிகளை சொஸ்தமாக்க முடியும் என்பதை தேவ வசனங்கள் மூலம் விளக்கினார். பின்பு ஜெப நேரத்தில் வியாதியஸ்தர்களை ஜெபிப்பதற்கு அழைத்தோம் . அப்போது சுமார் பத்து வயது உள்ள சிறுவன் பிறந்தது முதல் கால்களை மடக்கி உட்கார முடியாது. அவனுக்காக எல்லோரும் ஜெபித்தபோது அவன் உடனே சுகத்தை பெற்றான். எல்லோர் முன்பும் உட்கார்ந்து காண்பித்தான். தேவனுக்கு மகிமை.


ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே | கர்த்தர் மனிதர்களோடு இருப்பதனால் அவர்கள் பரிசுத்தமாக வாழவும் மாமிச இச்சைகளை மேற்கொள்ளவும், பஞ்ச காலத்திலும் ஐஸ்வர்யராக முடியும் என்பதை அறிந்தோம். மேலும் உன் மகனாகிய இயேசு கிறிஸ்து மூலம் வியாதிகளை சொஸ்தமாக்கவும் பிசாசுகளை துரத்தவும் முடியும் என்று அறிந்தோம் .எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து வியாதியஸ்தர் கள் சொஸ்தமாக்கவும் தேவனுடைய ராஜ்யத்தை இங்கு கொண்டுவரவும் கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


Sol. Mohanasundaram.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-02-2023

” உங்கள்மேல் மனுஷரையும் மிருக ஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன், பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன், அதினால் நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.”

எசேக்கியல் 36 : 11

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு நோக்கம் உண்டு. நம் விசுவாசம் விரிவடையும் போது கர்த்தர் நமது வளர்ச்சி, செழிப்பு , மற்றும் அமைதிக்கான விதையைப் பெருக்குவார். மேலே உள்ள வசனம் ஒரு அற்புதமான வாக்குறுதி. இங்கே கர்த்தர் , நாம் பெருகுவோம், நீடித்திருப்போம்,  பலனடைவோம் என்பதற்கு உறுதியளிக்கிறார். அவர் நம் எண்ணிக்கையையும் பலத்தையும் பெருக்குவார். அவர் நம் உதடுகளின் பலனையும் , நம் கர்ப்பத்தின் கனியையும் நமது ஆவியின் கனிகளையும் உழைப்பின்  பலனையும் பெருக்குவார்.

சங்கீதம் 115 : 14 ” கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுவார்.”

 மேற் கூறிய வசனம் , நம்முடைய விசுவாசத்தின்  ஆரம்பத்தில் கர்த்தருடன் நடப்பதைவிட , இப்போது கர்த்தர் நமக்குச் சிறப்பாக செய்வார் என்று உறுதியளிக்கிறது. கர்த்தர் நாம்  எதிர்பார்த்ததைவிட எதிர்காலத்திலும் நித்தியத்திலும் நமக்காக சிறந்த ஒன்றை ஒதுக்கி வைத்திருக்கிறார் . அவர் நமக்கு பிந்தைய மழையையும்  அவருடைய இரக்கத்தையும் அன்பையும் காலைப்பனிபோலவும் அனுப்புவார்.

யோவேல் 2 : 23 சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறுங்கள், அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து , உங்களுக்கு முன்மாரியையும் பின்பாரியையும் ஏற்கெனவே வருஷிக்கப் பண்ணுவார். “

கர்த்தரை நாம் மிக நெருக்கமாக அறிவோம் ,  அவரைச் சார்ந்திருக்கும் போது  அவரை அன்பு செய்வதும் அதிகரிக்கும்.

மகிழ்ச்சி, அமைதி, வளம், ஆரோக்கியம், ஞானம், செல்வாக்கு, பலம் மற்றும் இரக்கம் எல்லாமே மற்றவர்களிடமிருந்து அல்ல கர்த்தரிடமிருந்து மட்டுமே வரும். இவை எல்லாமே அதிகரிக்கும்.

நம்முடைய சவால்களை எதிர்கொள்ள நம்மை பலப்படுத்தி நம்முடைய வேலைகளை ஸ்தாபிக்கிறார். அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்ட நாம் , கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்த வேண்டும்.

யாக்கோபு 4 : 10

” கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுத்துங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.”

பெருமையைத் தவிர்ப்பதற்கும் , நமக்கு  ஏற்படுகின்ற  சலனங்களைத் தோற்கடித்து நம்மை மகிமைக்கு நேராக உயர்த்தவும்  , இது மட்டுமே நமக்கு வழியாகும்.

யோவான் 3 : 30 ” அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். “

நாம் பிரமிக்கத்தக்க வகையிலும் , அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறோம்.

சங்கீதம் 139 : 14 ” நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் , உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள் , அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். “

கலாத்தியர் 5 : 22

” ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம் , சமாதானம், நீடிய பொறுமை, தயவு , நற்குணம், விசுவாசம், ” இந்த ஆவியின் ஏழு குணங்களும் நம்முடைய தார்மீக, சமூக, தனிப்பட்ட மற்றும் ஆவிக்குரிய மேன்மையின் அடிப்படையாகும். அத்தகைய பலனைத் தருவதற்கும் அதை அதிகரிப்பதற்கும் நாம் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். அவருடைய வசனங்கள் நிறைய பலன்களைத் தருவதற்கும் சாத்தானிடமிருந்து பாதுகாப்பை தருவதற்கும் நம்மை உத்வேகப்படுத்துகிறது.

வாக்குறுதிகள் நிறைவேறும்  வரை நாம் காத்திருக்காமல்,  நன்றியறிதல்களாலும்,   அவருடைய மகிமையைக் குறித்த துதித்தல்களாலும்  ஆராதித்தல்களாலும் நம் இருதயத்தை நிரப்ப வேண்டும் . இரண்டாவது முறை நமக்கு  இன்னல்கள் வருவதை கர்த்தர் அனுமதிக்க மாட்டார்.

” அவர் சர்வசங்காரம் பண்ணுவார், இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. ”  நாம் சகிப்பதற்கு பல சிரமங்கள் இருக்கலாம். பல சவால்களை சமாளிக்கலாம். ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் நமக்கு வாக்களித்ததை செய்ய வல்லவர் என்பதில் நாம் எப்போதும்  நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

நாகூம் 1 : 9

கர்த்தர்தாமே நம்மில் குடியிருக்கும்போது , அவர் நம்முடைய தனிப்பட்ட நேரத்தில் நம்முடன் பேசிய வார்த்தைகள் நம்மை நிரப்பும் என்பதை உறுதியுடன் நம்ப வேண்டும் . அவரே நம்முடைய வெற்றிக்கும் பாதுகாப்பிற்கும் ஆதாரம்.

எங்கள் பரலோகத் தந்தையே, எங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிளையும் உயர்த்தப் போகிறீர் என்ற  உம்முடைய வாக்குறுதியைப் பெறுகிறோம் என்று விசுவசிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றி கூறுகிறோம் . ஆமென்

Sol. ஜிஜி ஜேக்கப்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-02-2023

கர்த்தர் உன்னுடன் செல்வார்.

உபாகமம் 31 : 6 ” நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார் , அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை. “


மோசே மேலும் யோசுவாவைப் பார்த்து, கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த தேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதால் அவர் பலமாகவும் , தைரியமாகவும் , உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். கர்த்தர் ஒருபோதும் அவரை தோல்வி அடையச் செய்யவோ கைவிட மாட்டார் என்றும் அவரை வெற்றிக்கு அழைத்துச் செல்ல கர்த்தர் அவருடன் செல்வார் என்றும் உறுதியளித்தார். கர்த்தர் இன்றும் உங்களுக்கும் எனக்கும் இதே உறுதியை அளிக்கிறார்.

நாம் செல்லும் இடமெல்லாம் கர்த்தர் வழியை ஆயத்தம் செய்ய நம்முன்னே செல்கிறார் என்பது தெரியவருவது நமக்கு ஆறுதலான விஷயம். என்ன சூழ்நிலையாக இருப்பினும் நமக்கு முன்னே செல்வதாக கர்த்தர் வாக்கு தருகிறார். உங்களுக்கு நீதிமன்ற வழக்கு வந்தால் , நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் செல்வதற்கு முன்னே நீதிமன்றத்திற்கு கர்த்தர் சென்றிருப்பார். அல்லது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கும் உங்கள் முதலாளிக்கும் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் , கர்த்தருடைய வசனங்களை நம்புங்கள். உங்களுக்குச் சாதகமானதை செய்வார் . மேலும் அதற்குரிய நேரம் வரும்போது அன்பான வழிகளில் சரியான வார்த்தைகளை பேசவும் வைப்பார்.

நீங்கள் எங்கெங்கு சென்றாலும் என்னென்ன சூழ்நிலைகள் வந்தாலும் உங்களுக்கு முன்பாகச் சென்று பாதைகளை செம்மைப்படுத்த கர்த்தரிடம் கேளுங்கள். அவர் செய்வார். பின்பு நீங்கள் செய்யவேண்டியது அதைப்பின்பற்றுவது தான்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் முன்வைக்கப்படுகின்றன. நம் எண்ணங்களை மாமிசத்தினால் அல்ல ஆவியினால் எண்ணங்களால் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். நம்முடைய சரீரம் சார்ந்த எண்ணங்கள் எந்தவித முயற்சியும் இல்லாமலே தவறான சிந்தனைகளை சுதந்திரமாக பயிற்சி செய்கிறது. மறுபுறம் நாம் கண்டிப்பாக சரியான எண்ணங்களை சிந்திப்பதை தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக கர்த்தரிடம் நாம் ஒருமித்த எண்ணம் கொண்டவர்களாக இருக்க முடிவு செய்த பிறகு தொடர்ந்து சரியான சிந்தனைகளை தேர்வு செய்வது அவசியம்.

நம் எண்ணங்களுடன் போர் புரிவது கடினமானது என்று உணரத் தொடங்கும் போது ,நாம் விரும்பாததை செய்ய போகிறோம் என்ற எண்ணம் வரும்போது எஎல்லா எதிர்மறையான எண்ணங்களை களைய வேண்டும். நாம் இதை செய்யப்போகிறோம் , இந்த காரியத்தை விட்டு பின்வாங்க மாட்டேன் என்று தீர்மானிக்க வேண்டும். நாம் சந்தேகத்தாலும் பயத்தாலும் தாக்கப்படும் போது , நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன், கர்த்தர் என்னுடன் இருக்கிறார் , அவர் என்னை அன்பு செய்கிறார் மற்றும் எனக்கு உதவி செய்கிறார் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் வாழ்நாள் முழுவதும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.
உபாகமம் 30 : 19 ல்
” நான் ஜீவனையும் மரணத்தையும் , ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன், ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படி க்கு, நீ ஜீவனைத் தெரிந்து கொண்டு ” என்று வாசிக்கிறோம். கர்த்தர் தம்முடைய மக்களை வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்படி அவர்களுக்கு முன் வைத்ததாக கூறுகிறார்.
நீதிமொழிகள் 18 : 21 ம் வசனமும் மமரணத்தையோ அல்லது வாழ்வையோதெரிந்தெடுங்கள் என்று சொல் கிறது.
” மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும் அதில் பிரியப்படுபவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். “

நம்முடைய எண்ணங்களே வார்த்தைகளாக மாறுகிறது. எனவே வாழ்வு தரும் எண்ணங்களை நாம் தேர்வு செய்வது முக்கியமானது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் கர்த்தரை நம்ப வேண்டும். ஆமென்.

Sol. கமல்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 17-02-2023

நூற்றுவர் தலைவனும் அவனது விசுவாசமும்.

  ” இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு , திரும்பி, தமக்கு பின் செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி;இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். “

லூக்கா 7 : 9

இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட கர்த்தர், ரோமானிய படைவீரர்களின் தலைவனாகிய புறஜாதிக்காரனாகிய  நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தைக் கண்டு  வியந்து ஆச்சரியமடைந்தார். நாம் வேதாகமத்தில் நிறைய நிகழ்வுகள் பார்த்த போதிலும் அங்கே விசுவாசத்தின் காரணமாக இயேசுவிடமிருந்து குணம் பெறுவதை காண்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் மிகவும் அசாதாரணமான ஒன்று என்ன தெரியுமா?

நூற்றுவர் தலைவன் மிக அதிகாரம் படைத்தவர் , அதிக வல்லமை படைத்தவர், செல்வந்தர் மற்றும் செல்வாக்கு மிக்கவர். தம்முடைய வேலைக்காரனின் பலவீனமான நிலையை அவர் எப்படி கவனித்து அவர் குணமாக வேண்டும் என்று விரும்பினார் என்பதைக் காண்கிறோம் . அவர், இயேசு இஸ்ரேலில் எப்படி குணப்படுத்துகிறார் , எவ்வாறு அற்புதங்கள் செய்கிறார் , என்பதை கேள்விப்பட மட்டுமே செய்திருந்தார். மேலும் அவர் இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு வல்லமையான அதிகாரம் இருக்கிறது என்று நம்பினார். அவரை ஏற்றுக் கொண்டார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இயேசுவை தன்னிடம் வரும்படி கட்டளையிட்டிருக்கலாம். ஆனால் அவர் தம்மை மிகவும் தாழ்த்தினார். இயேசுவைப் பார்ப்பதற்கு அவருடைய தகுதி போதும் என்று அவர் எண்ணவில்லை. ஆனால் இஸ்ரேலில் உள்ள மதிக்கப்படக்கூடிய  தலைவர்களிடம் அவருக்காக பேசும்படி கேட்டார். (எசாயா 49 : 7

நீதிமொழிகள் 15 : 33 ” கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்: மேன்மைக்கு முன்னானது தாழ்மை.”

மத்தேயு 18 : 4 ” ஆகையால் இந்த  பிள்ளையைப் போலத் தன்னை  தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்”

மேலும் அவன் இயேசு அவ்வழியே வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து குழப்படைந்து ,  என்னுடைய இடத்திலே  இயேசுவை வரவேற்க நான் தகுதியானவன் தானா? என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான். அவன் முழுவதும் தன்னை வெறுமையாக்கி  அவருடைய வார்த்தையால் மட்டுமே குணமாக்க முடியும் என்பதை உணர்ந்து , அவனுடைய வேலைக்காரனை குணமாக்கச்  சொல்லும்படி கேட்டுக் கொள்ள தன் நண்பர்களை அனுப்பினான்.

 சங்கீதம் 107 : 20 ” அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். ” 

அவன் இயேசுவின் அதிகாரத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டினான். மேலும் இயேசுவை தன்னுடைய இடத்திற்கு அழைத்து வர தகுதியில்லை என்றும் எண்ணினான்.   கர்த்தருடைய தயவைப் பெறுவதற்கு நாம்  எதைக் குறித்து பெருமை பாராட்ட முடியும்? ஒன்றுமில்லை. அவருடைய கிருபையைத் தவிர வேறெதுவும் நம்மைக் காப்பாற்ற முடியாது. அதுதான் நாம் பெருமை பாராட்டக்கூடிய விஷயம்.

கர்த்தர் மீதான நம்பிக்கை என்பது நமது செயல்களால் காட்டப்பட வேண்டும்.

யாக்கோபு 2 : 26

” அப்படியே  ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போல , கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. “

புறஜாதிக்காரனாகிய நூற்றுவர் தலைவன் இயேசுவின் தெய்வீக அதிகாரத்தையும் அவருடைய வார்த்தையின் வல்லமையையும் ஒப்புக் கொண்டு மிகப் பெரிய விசுவாசத்தை வெளிப்படுத்தினான். கர்த்தருடைய ராஜ்யத்தில் யூதரென்றோ, புறஜாதிக்காரன் என்றோ இல்லை. இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் எல்லோரும் ஒருவரே.

கலாத்தியர் 3 : 28

” யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். “

எபேசியர் 3 : 12 ” அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. “

பரலோகத் தந்தையே, எங்களை முழுமையாக தாழ்த்தவும் நாங்கள் ஒன்றுமேயில்லை, உம்மைக்குறித்து மட்டுமே பெருமைப்படவும் இயேசுகிறிஸ்துவின் தியாகத்தின் வழியாக  எங்களை உமது மகனாக மகளாக தெரிந்துகொண்டதை ஏற்றுக் கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்யும். நூற்றுவர் தலைவன் அனைவருக்குமுன் காட்டிய அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தவும் உலகம் முழுவதும் நற்செய்தியை அறிவிக்கவும் எங்களுக்கு உதவி செய்யும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

 Sol. நேகா.