தானியேல் – II
நாள் 13-04-2022 – தேவ செய்தி

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபே 3:17-19.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனம்- எபேசு சபை மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அன்பில் வேரூன்றியதாக இருக்க வேண்டும் என்று பவுல் எபேசு சபைக்காக செய்த ஜெபம்.

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

ரோம 5:5

பரிசுத்த ஆவியானவர் அதே அன்பை நம்மில் பொழிந்துள்ளார். வேதம் சொல்லும் இப்படிப்பட்ட அன்பை நம்முடைய குடும்பத்திலும், சபைகளிலும் அல்லது கிறிஸ்தவ சமுதாயத்திலும் காண்கிறோமா?. இப்படிப்பட்ட அன்பு நம் மத்தியில் ஏன் காணப்பட வில்லை. கர்த்தர் நமக்கு சொல்லும் பதில் இதுதான், “யாரும் என்னை கேட்க வில்லை.” இயேசு சொன்னார், கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். நாம் கேட்காத ஒன்றை கர்த்தர் நமக்கு கொடுக்க இயலாது. நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்கவோ, நமக்கு எதிராக எழுந்தவர்களை அன்பு செய்யவோ, நமக்கு பிடிக்காதவர்கள், நம்மைவிட கீழ்தரமாக நாம் நினைக்கும் சிலர் என இவர்களை அன்பு செய்ய நாம் ஆசைப்பட்டு கேட்டால்தான் அவர் நமக்கு கொடுப்பார். மத் 5:44 – உங்களுடைய எதிராளியை அன்பு செய்யுங்கள் என்று இயேசு சொன்னதோடு நிறுத்தாமல் அவ்வாறு செய்ய அன்பையும் நமக்கு கொடுக்கிறார்.

அதே அன்பை இயேசு இவ்வுலகில் வெளிப்படுத்தியுள்ளார். உடலாலும், இரத்தத்தாலும் அவர் நம்மைபோலவே இருந்தார் ஆனால் அவர் அடிக்கப்பட்டார், துன்புறுத்தப்பட்டார், துப்பப்பட்டார், ஆனால் அவருக்குள் பரிசுத்த ஆவியினால் ஊற்றப்பட்ட அந்த அன்பின் காரணத்தால் அனைத்தையும் சகித்துக்கொண்டார்.

ஆவியின் கனிகளில் முதன்மையனது அன்பு. அப்போஸ்தலர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிறுபத்தில் பரிசுத்த ஆவியின் வரங்களைப் பற்றி விளக்கிச் சொல்கிறார் – 1கொரி 12,14 – அன்புக்கு முக்கியத்துவமும் கொடுக்கிறார். 1கொரி 13 சொல்லுகிறது, நாம் பற்பல பாஷைகளில் பேசினாலும் , நற்செய்தியை போதித்து, தீர்க்கதரிசனம் சொன்னாலும், ஏழைகளுக்கு செல்வத்தை அள்ளிக்கொடுத்தாலும், அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும், அன்பில்லா விட்டால் கர்த்தருடைய பார்வையில் இவை வீணே.

அநேகர் கர்த்தருடைய அன்பு எனக்குள் இருக்கிறது என சொல்கின்றனர்.

ஆனால் அது வேதம் சொல்லும் அன்பா?
கடையில் நாம் அரிசி வாங்கும்போது அதன் எடையை சரிபார்த்தபிந்தானே நமக்கு கொடுக்கப்படுகிறது. எடை பார்க்காமல் இது போதும் என்று எப்படி சொல்ல முடியும்? 1கொரி 13 தான் அன்பின் அளவை காட்டுகிறது. இது அன்பின் 13 குணாதிசயங்களை காட்டுகிறது. கர்த்தரிடமிருந்து வரும் இந்த அன்பு, பரிசுத்த ஆவியினால் நமக்குள் ஊற்றப்படுகிறது. கர்த்தருடைய ராஜ்யத்தை இவ்வுலகில், சமுதாயத்தில், நமது குடும்பத்தில் நிலைநாட்ட கர்த்தரிடம் இந்த அன்பை கேட்போம்.

ஜெபம்

எங்கள் பரலோக பிதாவே, இந்த செய்தியை படிக்கும் அனைவருக்கும் நீர் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பை புரிந்துகொள்ளவும் அதே அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தவும் ஜெபிக்கிறேன். ஆமேன்.

Sol.Leo

தானியேல் – II

நாள் 12-04-2022 – தேவ செய்தி

விசுவாசம் ஒரு ஆன்மீக பரிசு:

ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,  வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும் அளிக்கப்படுகிறது.

1கொரி 12:8-9

விசுவாச வரம் ஒரு வல்லமை நிறைந்த பரிசு, அதை தவறாக பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த வரத்தை ஞானத்தோடு பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் அது சந்தேகத்தையும், குழப்பத்தையும் உருவாக்கும். “இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். (மாற்கு 11:22-24).

நம் அனைவருக்கும் அப்படிப்பட்ட ஒரு வரம் கிடைத்திருக்குமேயானால், இவ்வுலகம் என்னவாயிருக்கும்?

நமது விருப்பங்கள் மற்றும் தனிப்பட்ட வசதிக்கு ஏற்ப மலைகள் மற்றும் ஆறுகள் இடங்களை மாற்றத் தொடங்கும், மேலும் கால நிலைகள் மாறுபடும், எனவே இந்த வியத்தகு வரத்தை  கர்த்தர் அனைவருக்கும் கொடுக்காததற்கு இதுவே காரணமாகும். வேதத்தில் இந்த வல்லமையான வரம் கொடுக்கப்பட்ட சில நபர்கள் இருக்கின்றார்கள். யோசுவா சூரியனை நிறுத்தச் செய்தார், மேலும் போரில் வென்று முடிக்கும் வரையில் இரவு வரகூடாது என்றார்.

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். –

1இராஜா 17:1.

ராஜாவிடம் இதைப் பேச அவர் தைரியமாக இருந்தார். கர்த்தர் மேல் அவர் நம்பிக்கை வைத்ததுபோலவே நடந்தது. ஆனால் மீண்டும் மழையை கொண்டுவர, தொடர்ந்து தலையை கீழே சாய்த்து ஜெபிக்க வேண்டியிருந்தது. அவர் ஜெபித்ததுபோலவே மழை வந்தது. மோசே செய்த அற்புதங்கள் கர்த்தரால் கட்டளையிடப்பட்டு திட்டமிடப்பட்டன, எனவே அவருக்கு நம்பிக்கையிருந்தது என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவிக்க.

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

சங் 33:6

விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

எபி 11:3

கர்த்தருடைய வார்த்தை நம்மில் நிலைத்திருந்தால் நமக்கு தேவையான யாதொன்றைக் கேட்டாலும் அதை அவர் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விசுவாசத்தால்தான் சுகமாக்குதல் உண்டாகிறது. நம்பாமல் அவரில் விசுவாசம் வைத்தால் அது பேரிழப்பை கொண்டுவரும்.

எனவே அவரில் நாம் முழு நம்பிக்கை வைப்போம், அவர் எது செய்தாலும் நமது நன்மைக்கே என்று விசுவசிப்போம். மலைகளை நகர்த்தகூடிய விசுவாசத்தைப் பற்றி பவுல் பேசுகிறார். நாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசிக்க வேண்டும்.

அப்போஸ்தலர் நடபடிக்கையில், அப்போஸ்தலர்களுக்கு மத்தியில் கூட இப்படிப்பட்ட விசுவாசத்தை பார்க்கிறோம். இன்றுகூட இது நடக்கும்.

இயேசு சொன்னது போல அந்த தெய்வீக அதிகாரமும், வரமும் நமக்கு இருக்க வேண்டும், விவேகத்துடன் அதை பயன்படுத்த கர்த்தர் நமக்கு ஞானத்தை தருவார். கர்த்தரில் விசுவாசம் வைப்போம். இந்த விசுவாசம் நமக்கு அவருடைய கிருபையால்  கொடுக்கப் பட்டுள்ளது.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

-Sol.Salomi

தானியேல் – II – தேவ செய்தி

நாள் – 11-04-2022

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

எபே 5:1,2.

 

நாம் கர்த்தரை பின்பற்ற முயற்சிக்கும்போது நாம் அவரை ஆராதிக்கிறோம்.  எனவே தங்களுடைய புரிதல் அந்தகாரப்பட்டும்,  தங்கள் வாழ்வு ஆன்மீக அந்தகாரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவிசுவாசிகளைப்போல நாம் வாழ முடியாது.

தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

2 கொரி 4:4

நாம் அவருடைய வார்த்தையை அறிந்திருக்கிறோம், அவருடைய வழிகளை தெரிந்திருக்கிறோம், எனவே, மற்றவர்களை ஏமாற்றக்கூடிய உலகபிரகாரமான இச்சைகளை நம்மிடமிருந்து அகற்றிப்போட வேண்டும். கர்த்தருடைய ஆவியில் நாம் தொடர்ந்து புதிதாக்கப்பட வேண்டும்.

உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி

எபே 4:23

நம்முடைய சொந்த கிரயத்தில் அல்ல மாறாக இயேசு கிறிஸ்து செலுத்திய விலை கிரையத்தின் மூலமாக நமக்கு இரட்சிப்பு கிடைத்திருக்கிறது. நாம் ஒருவர் மற்றவருடன் உண்மையை பேச வேண்டும், மேலும் தலையாகிய இயேசு சொல்லுவது போல நடக்க வேண்டும். ஒருவர் மீதும் கோபமோ, கசப்போ இருக்க கூடாது மாறாக அனைவரையும் மன்னிக்க வேண்டும். கர்த்தருடைய சாயலாக மாறி வாழ நமக்கு பரிசுத்த ஆவியானவர் துணை செய்வார்.

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.  

எபே 4:31

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் அவருடைய முதற்பேரான குமாரனாகிய இயேசுவைப் போல நாம் இருக்க வேண்டும்.  எளிமையாகவும், பணிவாகவும், மென்மையாகவும், மன்னிப்பவராகவும், இரக்கமுள்ளவராகவும், அன்பாகவும், ஞானமாகவும் உண்மையுள்ளவராகவும், இயேசு வாழ்ந்தார் நாமும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்பித்தார். கர்த்தர் நம்மை ஏற்றுக்கொண்டார் பதிலுக்கு அவருடைய சாயலை நாமும் ஏற்க வேண்டும். இப்படியாகத்தான் நாம் உண்மையான மற்றும் ஏற்க கூடிய ஆராதனையைச் செய்து கர்ததருக்கு நம்முடைய நன்றியை வெளிப்படுத்த முடியும். நாம் மாற்ற வேண்டிய நமது குணம், அணுகுமுறை மற்றும் பழக்கவழக்கங்களின் பகுதிகளை சுட்டிகாட்ட பரிசுத்த ஆவியானவரை அனுமதிக்க வேண்டும்.

கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார். 

எபே 5:2

எனவே நாம் கிறிஸ்துவின் அன்பில் தொடர்ந்து நடக்க வேண்டும். நம்முடைய கஷ்ட நேரத்திலும் நல்ல நேரத்திலும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும், மற்றவர்களுக்காக ஜெபிக்க, உதவ, குணப்படுத்த, ஆலோசனை வழங்க, அவர்களை ஆறுதல் படுத்த வேண்டும்.

நாம் என்ன யோசித்தாலும்,  சொன்னாலும், செய்தாலும், நாம் செல்லும் இடமெல்லாம் கர்த்தருடைய சிகந்த வாசனையை எடுத்துச் செல்ல வேண்டும்,  இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.

2கொரி 2:15

மற்றவர்கள் நம்மை நடைமுறைக்கு மாறானவர்கள், அதிக ஆன்மீகமுள்ளவர் அல்லது கடவுள் என்று கேலி செய்யலாம்.

சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். “

1கொரி 13:7

கிறிஸ்து தம் உயிரை தியாகம் செய்தது போல் மற்றவர்களை ஆசீர்வதிக்க தன்னையும், தன் அகங்காரத்தையும் தன் நேரத்தையும், முயற்சிகளையும், வளங்களையும் தியாகம் செய்வதே அன்பு.

பழைய ஏற்பாட்டின் கீழ், சில மக்களுடைய காணிக்கை கர்த்தருக்கு ஏற்ற சுகந்த காணிக்கையாய் இருந்தது. தியாகத்தைவிட தியாகம் செய்தவரின் இதயத்தின் அவர்கள் செய்த தியாகத்தைவிட அவர்களுடைய இதயத்தின் இருதயமே அதிகம் பார்க்கப்பட்டது. இயேசுவை அபிஷேகம் செய்வதற்கு மேரி மக்தலின் விலைஉயர்ந்த வாசனை தைலத்தை பயன்படுத்தியது போல, நமது எண்ணங்கள், செயல்கள், மற்றும் வார்த்தைகளை பரப்ப முயற்சிக்க வேண்டும். நாம் கர்த்தருக்கு உயிருள்ள மற்றும் அன்பான காணிக்கையாக மாற வேண்டும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே நாங்கள் உம்மை பிரதிபலிக்கவும், நீர் அன்பு செய்வது போலவே மற்றவர்களை நாங்களும் அன்பு செய்ய விரும்புகிறோம். அதைச் செய்ய எங்களுக்கு கிருபை தாரும், எங்களோடு இருந்து எங்களை வழி நடத்தும்.  இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் கேட்கிறோம் பிதாவே. ஆமேன்.

Sol.Gigi  Jacob

தானியேல் – II

நாள் – 10-04-2022 – தேவ செய்தி

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

1பேது 1:7

தங்கம் அழிந்துபோகும். அது நிரந்தரமானதல்ல. தங்கத்தின் உண்மையான மதிப்பு நெருப்பில் சோதிக்கப்படும் போதுதான் வெளிப்படுகிறது.  தங்கமானது நெருப்பில் சுட்டெரிக்கப்படாவிட்டால் அதன் மதிப்பு தெரியாது. மண், குப்பை மற்றும் அசுத்தமான பொருட்களுடன் அது கலந்துவிடும். சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தை தட்டான் எரியும் நெருப்பில் சரியான வெப்பநிலை இருக்கும்போது போடும்போது அதோடு கலந்திருக்கும் மணல், அழுக்கு போன்ற அனைத்து மாசுகளும் நீங்கி 22 காரட் தங்கமாக மாறும். பிறகு தட்டான் தங்கத்தை தான் விரும்பிய வடிவத்தில்ல் வடிவமைத்து, ஆயிரம், இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அழகான ஆபரணமாக மாற்றுகிறார்.

அதே போல மலைப்பாறையை வெட்டும்போது அது பாறையாகவே இருக்கிறது. ஆனால் சிற்பி பாறையை செதுக்கும்போது அவன் மனதில் இருக்கும் அழகான வடிவத்தை உருவாக்குகிறான். சிற்பி செதுக்கும்போது ஏற்படும் வலியில் இருந்து தப்ப பாறை நிறுத்தச் சொன்னால் அது சிற்பிக்கு அல்ல, பாறைக்குதான் இழப்பு. அது பாறையாகத்தான் இருக்கும் சிற்பமாக மாறாது. அதேபோல் நம் வாழ்வின் சிற்பி இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையை செதுக்கும்போது நமக்கு வலிகள் ஏற்படலாம். நாம் மனமுவந்து நம்மை அவர் கைகளில் ஒப்புகொடுக்கும்போது அவர் நம்மை அவருடைய சாயலாக மாற்றுகிறார்.

புடவைகள் சல்வார்களில் எம்ப்ராய்டரி வேலைகளைப் பார்க்கும்போது பூக்கள் மற்றும் பொம்மைகளின்  அழகான, வடிவமைப்புகளை பார்க்கிறோம், ஆனால் அதற்கு முன் அதே வடிவமைப்பை நூற்றுக்கணக்கான முறை ஊசிகளால் துளைத்து ஒரு பூ அல்லது பொம்மையில் பல வண்ண வடிவமைப்பை உருவாக்கப்படுகிறது.

1சாமுவேல் 1 – இல் அன்னாள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று மனம் கசந்து  மிகவும் அழுதாள்.  ஏன்? ஏனென்றால் பெனின்னாள் அவளை மனம் நோகச் செய்தாள். எனவே, அன்னாள் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருக்கு முன்பாக தன் இருதயத்தின் பாரத்தை இரக்கி வைத்தாள். அதற்குபின் தான் தீர்க்கதரிசி சாமுவேல் பிறந்தான்.

நம்முடைய இருதயம் நொருங்கியிருக்கும்போது, மற்றவர்களால் கைவிடப்பட்டிருக்கும்போது, இது கர்த்தருடைய சாயலை நம்மில் உருவாக்குவதற்காகத்தான், கர்த்தருடைய சித்தத்தை செய்யத்தான், நம்மில் ஒரு தீர்க்கதரிசி உருவாகத்தான்.

யோசுப்பு கூட  ஜெயிலில் இருக்கும் போது இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்துதான் சென்றான். ஆதி 39:20,21 சொல்லுகிறது யோசுப்பு தனியாக இல்லை அவனோடு தேவன் இருந்தார். அவருடைய கிருபை யோசேப்புக்கு ஜெயில் அதிகாரியின் கண்களில் கிருபை கிடைக்கச் செய்தது.

நம்முடைய எல்லா வழிகளிலும், இயேசு கிறிஸ்துவின் சாயலை நாம் பிரதிபலிக்க வேண்டும் எனவும், கர்த்தருடைய சித்தம் நம்மில் நிறைவேற வேண்டும் எனவும் அவர் விரும்புகிறார்.

சாட்சி

தன்னுடைய 40 வது வயதில் என் தாய் என்னை கர்ப்பம் தரித்தாள். உடல் பலவீனத்தின் காரணமாக அநேக முறை கரு கலைப்பு செய்ய என் தாய் முயற்சித்தாள் ஆனால், என் தாயின் கருவிலே தேவன் என்னை காப்பாற்றினார். என்னுடைய 52 வயது வாழ்க்கையில் அநேக முறை கர்த்தர் என்னை உடைத்தார், உருவாக்கினார், புதிதாக்கினார். கர்த்தருடைய சித்தம் என்னில் நிறைவேற நான் என்னையே அவர்கையில் ஒப்புகொடுத்தேன். சங் 119:73 – உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, அனைத்தையும் படைத்த சிருஷ்டிகரே, என்னை என் தாயின் வயிற்றிலே காப்பாற்றியெ அன்பு தெய்வமே, உம்மை ஆராதிக்கிறேன். இயேசப்பா, என்னுடைய வாழ்க்கை உமக்காக, உம் சித்தம்போல என்னை உருவாக்கும் பிதாவே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே. ஆமேன்.

Sol.Rani

தானியேல் – II

நாள்:09-04-2022 – தேவ செய்தி

அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.

-லூக் 21:4.

நீ கொடுக்கும்போது நீ என்ன கொடுக்கிறாய் என்பதை அல்ல, உங்கள் இதயத்தைப் பார்கிறார்.

கர்த்தருடைய பொருளாதாரம் என்பது நீங்கள் கொடுக்கும் தொகையை அல்ல, ஆனால் அதற்காக நீங்கள் செய்யும் தியாகத்தைத்தான்.

ஆலயத்தின் வளாகத்தில் ஒரு பெரிய பெட்டியில் மக்கள் எல்லாரும் பார்கும்படி தங்கள் பணத்தை போட்டனர்.  திறந்த இடத்தில் இந்த பெட்டி இருந்ததால் மக்கள் அனைவரும் யார் எவ்வளவு பணம் போடுகிறார்கள் என்று பார்க்க முடிந்தது. அதிகமாக பணம் போடுகிறவர்கள் அனைவருடைய கவனத்தையும் ஈசியாக ஈர்ப்பார்கள்.

செல்வந்தர்கள் தாராளமாக காணிக்கை கொடுப்பதையும், சந்தையில் மதிப்பே இல்லாத பணத்தைப் போட்ட ஏழை விதவையும் இயேசு பார்த்தார்.  

-மாற்கு 12:41-42.

மக்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை அல்ல, எப்படிகொடுத்தார்கள் என்பதைத்தான் பார்த்தர். அந்த விதவை எல்லாரையும் விட அதிகமாக போட்டாள் என்று அவர் கருதினார், ஏனென்றால் காணிக்கையாக கொடுக்கப்பட்ட பணத்தை வணிக மதிப்பால் அவர் அளக்க வில்லை, ஆனால் கொடுப்பவரின் தியாகத்தை கொண்டே அளந்தார்.

அவருடைய ராஜ்யத்தில் பணம் அல்ல, உண்மையான நம்பிக்கை கொண்டுள்ள இருதயமே அதிக மதிப்புடையது.

மாற் 12:43-44.

கர்த்தருடைய பொருளாதாரத்தில் குறைவாக கொடுக்கும் அநேகர் அதிகமாக கொடுக்கின்றனர். எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. என்ன தியாகம் செய்கிறோம்? அதை கொடுக்க உனக்கு என்ன இழப்பு?

வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு  களத்தை வாங்க அர்வானிடத்திற்கு சென்றான். அர்வானா, தாவிதுக்கு அதை இலவசமாக கொடுக்க முயன்றான் ஆனால் தாவீது, “நான் இலவசமாய் வாங்கி என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல் அதை உன் கையிலே விலைகிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி அந்தக் களத்தையும், மாடுகளையும் ஐம்பது சேக்கேல் நிறை வெள்ளிக்கு கொண்டான்.” இலவசமான எதையும் நான் கர்த்தருக்கு காணிக்கையாக கொடுக்க மாட்டேன். கர்த்தருக்கு நீங்கள் கொடுப்பதற்கு என்ன செல்வாகிறது. இதைத்தான் கொண்டுதான் கர்த்தர் நம்முடைய காணிக்கையை மதிப்பிடுவார்.

கொடுப்பவரில் நம்பிக்கை வைப்பது

யாக்கோபின் புத்தகத்தில் நாம் வாசிக்கின்றோம், எல்லா நன்மைகளையும் நமக்கு கொடுப்பவர் கர்த்தரே.

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.

யாக் 1:17.

எனவே, விசுவாசத்தோடு நாம் பலியாக கொடுத்ததெல்லாம் கர்த்தரால் இரட்டிப்பாக மீட்கப்படும்.

ஜெபம்

அன்பின் தேவனே, நீர் கொடுப்பவர் என்பதை அறிந்து கிறிஸ்துவில் உள்ள சக வீரர்களின் தேவையை உணர்ந்து செயல்பட எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் விசுவாசத்தில்  விதைக்கும் அனைத்தையும் பலமடங்கு திரும்பப் பெற்றிட உதவி செய்யும்.ஆமேன்

Sol. Raymond Amanna

தானியேல் – II

நாள்: 08-04-2022 – தேவ செய்தி

இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.

-எபி 1:3

“சர்வத்தையும் தம்முடைய வல்லமியுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய்” – என்ற வசனத்தின் மீது  நம்முடைய கவனத்தை திருப்புவோம்.

கர்த்தருடைய முழுமையான பிரதிபலிப்பான இயேசு   தன்னுடைய வல்லமையுள்ள வார்த்தையின் மூலம் இந்த உலகை தாங்குகிறார். அவருடைய வார்த்தைகள் உலகத்தையே தாங்ககூடிய வல்லமையுள்ளதாய் இருக்குமேயானால் இவ்வுலகில் எதைப்பற்றியும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இந்த பெரிய அற்புதமான தேவன், நம்மை பாவம் மற்றும் அதன் தண்டனையிலிருந்து விடுவிக்க, நமக்காக பலியாக இந்த பூமியில் இறங்கி வந்தார். அவருடைய ஒரு வார்த்தையின் மூலம் இந்த உலகம் உருவாக்கப்பட்டது. ஆதி 1-2:1.

மத் 28:18 – அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்கு 16:17-18 – அவருடைய நாமத்தில் விசுவாசம் வைப்பவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப் படுகிறது. நாம் கிறிஸ்துவில் இருக்கும்போது  அவரிடமிருந்த அதே வல்லமையும் அதிகாரமும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த வல்லமையை பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு கொடுக்கிறார்.

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

யோவா 1:14

கர்த்தருடைய வார்த்தை உண்மையில் இயேசுதான். எனவேதான் நாம் கட்டிட சபைக்கு செல்லும்போதோ, சில பாடல் பாடும்போது, மற்றும் சில காரியங்களை செய்யும் போது எதிரியாகிய சாத்தான் நடுங்குவது இல்லை.  வார்த்தையின் ஆழத்திற்கு போகும்போதுதான் அவன் பயப்படுகிறான். தேவ வார்த்தையில் வல்லமை உண்டு என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான்.  (1கொரி 1:18). எதிரிக்கு தெரியும்  சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவா 8:32.

அவருடைய வார்த்தை உங்களை பாவத்திலிருந்து விடுதலையாக்கும், முற்றிலும் உங்களை மாற்றும், உங்கள் வாழ்வை மாற்றிபோடும்.  சம்மட்டியைபோலவும், நெருப்பைப் போலவும் பாறைகளை உடைத்து நொருக்கும்.  உங்கள் பாதையில் வரும் ஒவ்வொரு தடைகளையும் அது நொருக்கிபோடும். பேசப்பட்ட அந்த வார்த்தைதான் மரித்த லாசருவை உயிரொடு எழுப்பியது. அது வெறுமனே திரும்பாது. (ஏசா 55:10-11).  வார்த்தை சுகமாக்கும், விடுதலையாக்கும், அசுத்த ஆவிகளை எடுத்துபோடும்.  அதனால்தான் நூற்றுவ தலைவன் சொன்னான், ஒரு வார்த்தை சொல்லும் என்னுடைய சேவகன் குணமாவான் என்று. (மத் 8:8).

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

மத் 22:29.

எனவே, கர்த்தருடைய வார்த்தையால் இந்த பிரபஞ்சத்தை நிலைநிறுத்த முடிந்தால், இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள், அல்லேலூயா!

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, எங்களுக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கும் உம்முடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசுவுக்கு நன்றி.  எங்கள் வாழ்விலன் அந்தகார வல்லமையையும்,  எங்கள் வாழ்வை அழிக்க நினைக்கும் எதிரியின் ஒவ்வொரு திட்டங்களையும் நொருக்கிபோடும்  அக்கினையைப் போலும், கன்மலையை நொருக்கும் சம்மட்டியைப் போல் இருக்கும் உமது வார்த்தைக்காக நன்றி. இதை படிக்கும் ஒவ்வொருவரும் கர்த்தருடைய வார்த்தையில் வளர்வார்களாக, வல்லமையில் நடப்பார்களாக, அவர்களுடைய வாழ்வில் மகிமையின் மேல் மகிமை அடைவார்கள்ளாக, இயேசுவின் இணையற்ற நாமத்தில் கேட்கிறோம் பிதாவே, ஆமேன்.

Sol.Lalitha Menon

தானியேல் – II

நாள் :07-04-2022 – தேவ செய்தி

வழக்கத்தால் சலிப்பு? தாமதங்களால் விரக்தியா? நம்பிக்கை இழந்து விட்டீர்களா?

கொள்கை:

இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் அவருடைய இலக்கும், நம்முடைய வாழ்வு மற்றும் இலக்கு என்ற புரிதலில் நாம் வளர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள் .

-2கொரி 4:18

அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்.

-அப்போ 5:41

பவுலின் துன்பங்கள் அவர் அப்போஸ்தலராய் இருப்பதை திடப்படுத்தியது. 2கொரி 11:24-27 – “யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.”

அநேக வருடங்களாக அவர்பட்ட எல்லா கஷ்டங்களும், துன்பங்களும் இந்த நான்கு வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும் கூட தான் சொல்லபோகும் செய்தி அநேகரால் புறக்கணிக்கப்படுமே அல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிந்தும் பவுல் தன்னுடைய தேவ அழைத்தலில் விட முயற்சியுடன், உழைப்பிலும், கஷ்டத்திலும் முன்வைத்த காலை பின்வைக்காமல் ஊர் ஊராய் சென்று நற்செய்தியை போதித்தார்.  தனக்கு சிறப்பாக எதையும் எதிர்பார்க்காமல் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அவர் போதித்தார். ஆனால் அவர் ஆண்டுதோறும், மைலுக்கு மைல், கிராமத்திற்கு கிராமம், அடிக்குபின் அடி வாங்கியப்பின்னும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்தார். ஆம், வெற்றி வழிகளில் கிடைத்தது; சிலுவையின் வல்லமையை நாம் நிராகரிக்க முடியாது. அதேவேளையில் அதன் வலி, வேதனையையும் நிராகரிக்க முடியாது.

20 ஆம் நூற்றாண்டின் பெரிய வியாதிகளில் ஒன்று பொருமையின்மை. நாம் எதை செய்தாலும் அதில் உடனடி வெற்றியை எதிர்பார்கிறோம். நம்முடைய முயற்சி வெற்றி அடையவில்லையெனில் உடனே வேறு ஒன்றிற்கு மாறிவிடுகிறோம். நம்முடைய அன்றாட வாழ்க்கைமுறைகள் நம்மை உற்சாகம் இழக்க வைக்கலாம், தாமதங்கள் நம்மை விரக்தி அடையச்செய்யலாம்.

பவுல் தெசலோனிக்கேயருக்கான நிரூபத்தில் சொல்லுகிறார்,

சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.

-1தெச 2:9.

ஆயினும் கூட பவுல் தனது அழைப்பில் விடாமுயற்சியுடன் இருந்தார், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்றார் (சில சமயங்களில் விருப்பமின்றி) என்ன நடந்தாலும், யார் கைவிட்டாலும் நற்செய்தி அறிவிப்பதை அவர் கைவிடவே இல்லை.

நம்முடைய தேவ அழைத்தலுக்கு பவுலுடைய அப்போஸ்தலத்துவத்தை நேரடியான மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பவுல் ஒவ்வொரு மலையாக கடந்துசெல்வது, உறுதியுடன் கஷ்டமான பாதைகளில் பயணிப்பது,  தன்னுடைய ஓட்டம் முடியும்வரை என்ன நடந்தாலும் ஊர் ஊராய் சென்று நற்செய்தியை அறிவிப்பது என இவைகள் எல்லாவற்றிலிருந்தும் நாம் ஊக்கத்தை பெறலாம்.

சிந்தனை:

தாங்கள் சந்தித்த உலகபிரகாரமான பிரச்சனைகளுக்கு மத்தியில் பரலோகத்திற்கான கண்ணோட்டத்தை வளர்ப்பதன் ரகசியத்தை பவுல், பேதுரு மேலும் மற்ற சீடர்கள் கற்றுக்கொண்டனர். கிறிஸ்துவுக்குள் தாங்கள் யார், எங்கு செல்கிறோம் என்பதை அவர்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டதால், துன்புறுத்தப் பட்டாலும், அடிக்கப்பட்டாலும் கூட அவர்கள் அந்த சூழ்நிலைக்கு மேல் வாழ முடிந்தது மேலும் மகிழ்ச்சியாய் இருக்க முடிந்தது. அதனால்தான் தான் ஜெயிலில் இருந்த போது கூட பவுலால் இப்படி எழுத முடிந்தது, நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்கே, மரித்தாலும் இயேசுவுக்கே.

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

-2 கொரி 4:18.

Sol. Gerard Fernandes

தானியேல் – II

நாள் 06-04-2022 – தேவ செய்தி

வார்த்தை தேவனிடத்திலிருந்தது, .

யோவா 1:1

வேததின் மூலம் நாம் தெரிந்துகொள்வது, ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, இங்கு “ வார்த்தை” என்பது இயேசுவை குறிக்கிறது. இந்த வார்த்தைதான் கர்த்தருடைய செய்தியை எல்லா மக்களுக்கும் வெளிப்படுத்தியது.

மூன்று குணங்களை, தேவனுடைய வார்த்தையாகிய இயேசுவுக்கு யோவான் பயன்படுத்துகிறார்.

  1. பிதாவோடு வார்த்தையின் உறவு

அ). ஆதியிலிருந்து இயேசு சர்வவல்லமையுள்ள தேவனோடு இருந்தார், “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

கொலோ 1:15.

ஆ) இயேசு (வார்த்தை தேவனோடு இருந்தது, அவருடைய இயற்க்கை மற்றும் குணம் (வல்லமை) பிதாவைப்போல் இருந்தது. பரத்திலிருந்து ஒரு குரல் கேட்டது,

அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

மாற்கு 1:11.

2.உலகத்தோடு வார்த்தையின் உறவு:

கர்த்தர் உலகை இயேசு கிறிஸ்துவின் மூலம் உருவாக்கினார் மேலும் அதை காத்தும் வருகிறார். “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. கொலோ 1:16)

3.மானித இனம் மற்றும் வார்த்தையின் உறவு:

வார்த்தை மனிதனானார், ஆவியில் தேவன் மனிதனானார், மனித இயல்பு பாவமே செய்யாமல் பாவத்தை மேற்கொண்டது. “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்;

அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.”

மத் 1:23.

வார்த்தை இன்றும் தேவனோடு இருக்கிறார் மேலும் அவரோடே எப்பொழுதும் இருப்பார் ஏனென்றால் வார்த்தையின் மூலமாகத்தான் நமக்கு வாழ்வு கிடைத்தது, என்பது மேற்கண்ட வசனங்கள் தெளிவாக சொல்லுகின்றன, பரலோக ஆசிர்வாதங்களுக்காக கர்த்தரிடம் கேட்போம் அவர் நம்மை அந்தகாரத்திலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்.

ஜெபம்

கிழக்கு உத்திரபிரதேசத்திற்கான பாரத்தை கர்த்தாவே நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிறீர், உம்மைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல நீர் எங்களோடு இருப்பீராக. பரலோக வல்லமை மற்றும் சக்தியினால் எங்களை நிறப்பும். ஆமேன்.

Sol.Sudha AOJ

தானியேல் – II

நாள் – 05-04-2022 – தேவ செய்தி

யோவா 1:1 –கிறிஸ்து இயேசுதான் கர்த்தர் என்று வேதம் முழுமையாக சொல்லுகிறது.

கொலோ 2:9 – ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

ரோம 9:5 – பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் உண்மையான தன்மையை முற்றிலும் தெளிவுபடுத்துவதற்காக, கிறிஸ்து இயேசு செய்த ஏழு இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களை யோவான் இந்த பதிவில் சேர்த்துள்ளார். அவர் தேவகுமாரன் என்பதற்கும், அவருடைய அதிகாரம் மற்றும்  வல்லமைக்கும் சான்றாகும். இந்த ஏழு அடையாளங்களும் இணையற்றவை.

  1. தண்ணீரை திராட்சை ரசமாக்குதல்
  2. ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரனுடைய வியாதியை குணமாக்குதல்.
  3. ஊனமுற்றவனை குணமாக்குதல்
  4. 5000 மக்களை போஷித்தது
  5. தண்ணீர்மேல் நடந்தது
  6. குருடனுக்கு பார்வை அளித்தது.
  7. மரித்த லாசரை உயிரோடு எழுப்பியது.

இயேசு தேவனுடைய தூதர், மனித உருஎடுத்த தெய்வம்,மேலும் தீர்க்கதரிசி மட்டும் அல்ல மாறாக அவர் கர்த்தர், குமாரன் மற்றும் பரிபூரண தேவன்.

யோவா 10:30 -நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

யோவா 8:12 – மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து இயேசு தேவன், அவர் மனிதனாக ஒரு குறுகிய காலத்திற்கு  இவ்வுலகில் வந்தார் ஆனால் அவர் நித்தியமானவர். அவரில் விசுவாசம் வைப்பதால் நமக்கு கிடைப்பது நித்திய வாழ்வு.

நற்செய்திகளில் தேவன் சொன்னது, தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களால் சொல்லப்பட்டது இன்று அணி சபை, வரங்களின் பயிற்சி பள்ளி மற்றும் உருவாகு உருவாக்கு ஊழியங்களின் மூலம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

நாம் வயதாகி மரித்துபோவோம் ஆனால் இயேசு கிறிஸ்துவின் மீது வைத்திருக்கும் விசுவாச்த்தின் மூலமாக மனித ஆத்துமாக்களுக்கு நித்திய வாழ்வு கிடைக்கும்.

எனவே, தன்னுடைய உயிர்தெழுதலுக்கு முன்பே இயேசு தேவன் என்றும் தனது தெய்வீக சக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கொலோ 2:9 -ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

ஜெபம்:

பிதாவாகிய எங்கள் தேவனே, நீர் விரும்புகிறது போல உம்மை ஆவியில் ஆராதிக்க எங்களை உம்முடைய ஆன்மீக அடிமையாக்கும். நித்திய வாழ்விற்கான ஓட்டத்தில் எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே உம்முடைய  தெய்வீக நடத்தைகளையும், வல்லமையையும் மக்கள் வாழ்வில் வெளிப்படுத்தவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும், அபிஷேகத்தால் எங்களை நிறப்பும், ஆமேன்.

Sol.Kamalesh AOJ 

தானியேல் – II
நாள் 04-04-2022 – தேவ செய்தி

னெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும்கர்த்தருடனேகூட இருப்போம்.


இதுதான் நம்முடைய மிகப்பெரிய நம்பிக்கை. கர்த்தருடைய வருகையின் போது அவரோடு கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். பத்து கன்னிகைகள் உவமையின் மூலமாக நமக்கு வேதத்தில் சொல்லியிருக்கிறார். மணவாளன் அவர்களை சந்திக்க வருவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது, ஆனாலும் பத்தில் ஐந்துபேர் மட்டுமே தயாராக இருந்தனர். கர்த்தருடைய வருகை ஒரு கற்பனை அல்ல. இயேசுவே இதை உறுதிப் படுத்துகிறார்.

யோவான் 14:3 இவ்விதமாய் சொல்லுகிறது -நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

அவர் இருக்கும் இடத்திற்கு நம்மையும் கொண்டுசெல்வதுதான் கர்த்தருடைய ஆசை. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு தகப்பன் தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறான்.

அதேப்போல கர்த்தர் எங்கே இருக்கிறாரோ அங்கு தன்னுடைய குடும்பமாகிய நம்மையும் அழைத்துசென்று அங்கேயே குடியேற்ற விரும்புகிறார். தூதர்கள் கூட இயேசுவின் வருகையைப் பற்றி சாட்சி சொல்லுகின்றனர்.
அப்போ 1:11 சொல்லுகிறது
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

மேற்கண்ட வசனங்களின் மூலம் இயேசுவின் வருகை உறுதி செய்யப்படுகிறது. எனவே நம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள தயார் செய்ய வேண்டும். நம் வாழ்வில் சோதனைகள் மற்றும் துன்பங்கள் வரும்போது அவற்றைக் கடந்து விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும். அநேக மக்கள் எதிரியோடு யுத்தம் செய்யாமலே விசுவாசத்தை கைவிடுகின்றனர். பரலோக வெளிப்பாடுகள் அவர்களுக்கு கிடைத்துவிட்டால், அவர்கள் சந்திக்கும் சோதனைகள் மற்றும் துன்பங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.

ஜெபம்


பரலோக பிதாவே, ஒருவரும் அழிந்துபோகாமல் பரலோக ராஜ்யம் சென்று சேர்வது உம்முடைய சித்தம். இந்த நாட்களில், உம்மை அறிந்துகொள்ள, உம்மோடு நிரந்தரமான ஒரு உறவை ஏற்படுத்த மேலும் நீர் வரும்போது உம்மோடு எடுத்துச் செல்லப்பட தங்களையே தயார் செய்ய அனைவருக்கும் உதவி செய்யும்.

ஆமேன்.

SOL. SAJITHA EUGINE AOJ