ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும்கர்த்தருடனேகூட இருப்போம்.
இதுதான் நம்முடைய மிகப்பெரிய நம்பிக்கை. கர்த்தருடைய வருகையின் போது அவரோடு கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம். பத்து கன்னிகைகள் உவமையின் மூலமாக நமக்கு வேதத்தில் சொல்லியிருக்கிறார். மணவாளன் அவர்களை சந்திக்க வருவார் என்பது அனைவருக்கும் தெரிந்தது, ஆனாலும் பத்தில் ஐந்துபேர் மட்டுமே தயாராக இருந்தனர். கர்த்தருடைய வருகை ஒரு கற்பனை அல்ல. இயேசுவே இதை உறுதிப் படுத்துகிறார்.
யோவான் 14:3 இவ்விதமாய் சொல்லுகிறது -நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
அவர் இருக்கும் இடத்திற்கு நம்மையும் கொண்டுசெல்வதுதான் கர்த்தருடைய ஆசை. ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு தகப்பன் தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறான்.
அதேப்போல கர்த்தர் எங்கே இருக்கிறாரோ அங்கு தன்னுடைய குடும்பமாகிய நம்மையும் அழைத்துசென்று அங்கேயே குடியேற்ற விரும்புகிறார். தூதர்கள் கூட இயேசுவின் வருகையைப் பற்றி சாட்சி சொல்லுகின்றனர்.
அப்போ 1:11 சொல்லுகிறது
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
மேற்கண்ட வசனங்களின் மூலம் இயேசுவின் வருகை உறுதி செய்யப்படுகிறது. எனவே நம்மை பரிசுத்தமாக வைத்துக்கொள்ள தயார் செய்ய வேண்டும். நம் வாழ்வில் சோதனைகள் மற்றும் துன்பங்கள் வரும்போது அவற்றைக் கடந்து விசுவாசத்தில் உறுதியாக நிற்க வேண்டும். அநேக மக்கள் எதிரியோடு யுத்தம் செய்யாமலே விசுவாசத்தை கைவிடுகின்றனர். பரலோக வெளிப்பாடுகள் அவர்களுக்கு கிடைத்துவிட்டால், அவர்கள் சந்திக்கும் சோதனைகள் மற்றும் துன்பங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.
ஜெபம்
பரலோக பிதாவே, ஒருவரும் அழிந்துபோகாமல் பரலோக ராஜ்யம் சென்று சேர்வது உம்முடைய சித்தம். இந்த நாட்களில், உம்மை அறிந்துகொள்ள, உம்மோடு நிரந்தரமான ஒரு உறவை ஏற்படுத்த மேலும் நீர் வரும்போது உம்மோடு எடுத்துச் செல்லப்பட தங்களையே தயார் செய்ய அனைவருக்கும் உதவி செய்யும்.
ஆமேன்.
SOL. SAJITHA EUGINE AOJ
