நாள்: 22-11-2023
புனிதர்களாக மாற அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ரோமர் 1 : 1 – 7
- இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
2) ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது,
3) நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக
4)இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
5) மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.
6) அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,
7) தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.
நாம் உலகத்தின் பார்வையில் அடையாளப் படுத்தப்படுவதற்கு பல காரணிகள் உள்ளன. நமது குடும்பப் பின்னணி, நாம் பெற்ற போதனைகள், நமது கல்வி, நாம் சார்ந்திருக்கும் சமூகம், நமது சமூக ஊடகங்கள், இசை, நாம் போற்றும் மனிதர்கள், நம் அனுபவங்கள் ஆகியவை. இவை ஒவ்வொன்றும் நம் வாழ்வில் ஒரு பங்கு வகிக்கிறது.
அதுபோலவே, ரோமர் புத்தகமும் உலகத்தின் பார்வையைப் பற்றியதாகும். இது ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அதாவது பெரும்பாலும் புறஜாதியினருக்கு எழுதப்பட்ட கடிதம். இது நமக்கும் பொருந்தும். இந்த கடிதத்தின் வழியாக விசுவாசத்தால் நீதிமான்களாக்கப்படுவதையும் , நற்செய்தி அறிவிப்பதன் வல்லமை ஆகியவற்றைப் பற்றியும் அருமையாக விளக்குகிறார். இதை படிக்கும்போது ரோமர்கள் நம்முடைய உலகத்தின் பார்வை மிக முக்கியமான சத்தியங்களில் நங்கூரமிட்டு இருப்பதை அறிய முடியும்.
மேலே உள்ள வசனங்களில் பவுல் அவருடைய நிலையையும் அவருடைய நோக்கத்தையும் விளக்குவதன் மூலம் தம்மை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
முதல் வசனத்தில் தாம் இயேசு கிறிஸ்துவின் பணியாள் என்றும் தாம் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதையும் குறிப்பிடுகிறார். தமாஸ்கு நகர வீதியில் பவுல் செல்லும் போது கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில், கர்த்தர் ஒரு சிறப்பு அழைப்பை அவருக்கு கொடுத்தார். ஒரு அப்போஸ்தலராக அவரின் நோக்கம் கர்த்தருடைய நற்செய்தியை அறிவிப்பதாகும் . அதாவது இயேசுகிறிஸ்துவின் மீட்பைப் பற்றிய நற்செய்தியாகும்.
2 – 4 ம் வசனங்களில் பழைய ஏற்பாட்டு தீர்க்கத்தரிசிகள் கூறிய நற்செய்திகளை விரிவாகக் கூறுகிறார். இந்த நற்செய்தி இயேசுவின் அடையாளத்தைப் பற்றியது. அவர் முழு மனிதனாக வாழ்ந்தது, தெம்வீகத் தன்மை நிரம்பிய பிதாவின் குமாரனாக உயிர்த்தெழுந்தது ஆகிய இரண்டையும் பற்றியது.
பவுல் அப்போஸ்தலனாக அழைக்கப்பட்டது அவருடைய சொந்த நலனுக்காக அல்ல. மாறாக புறஜாதியாரை கிறிஸ்துவுடனான உறவுக்கு அழைப்பதற்காகவே இந்த கிருபையை பெற்றார். விசுவாசத்தின் மூலம் வளரும் கீழ்படிதலுள்ள வாழ்க்கை, அவரை சார்ந்திருக்கும் நிலை, அன்புடன் கூடிய உறவு , புனிதமான மக்கள் அல்லது பரிசுத்தவான்கள் என்ற நிலை ஆகிய அனைத்து நன்மைகளையும் கர்த்தர் தன்னுடைய ஜனங்களுக்கு அளிப்பதாக வாக்களித்தார்.
5 – 7 வரையுள்ள வசனங்களில் இயேசுவை விசுவாசிக்கின்ற அனைவருக்கும் உள்ள பொதுவான அழைப்பை புரிந்துகொள்ளச் செய்கிறார். நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுபவர்களாக இருந்தால் கீழ்படிதலுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும், அவரை சார்ந்திருப்பதற்கும், அன்பிலே நிலைத்திருப்பதற்கும் பரிசுத்தவான்களாவதற்கும் அவர் உங்களை அழைக்கிறார்.
ஜெபம்
பவுல், பேதுரு, யாக்கோபு, யோவான் போன்ற எண்ணற்றவர்களுடன், உமது நாமத்தினிமித்தம் கீழ்படிதலுக்கும் விசுவாசத்திற்கும் மற்றவர்களை அழைப்பதற்கும் நாங்களும் அப்போஸ்தல பணி என்னும் கிருபையை பெற அழைக்கப்பட்டிருக்கிறோம். உம்மை நேசிக்கவும் உமது பரிசுத்த ஜனங்களாக இருக்கவும் நாங்கள் அழைக்கப்பட்டுள்ளோம்.
ஆமென்.
Sol. ப்ரீதா டெப்நத்
