நாள்: 29-11-2023
வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்.
வேதாகமத்தை படித்தும் அதை ஜெப ஆலயங்களில் பிரசங்கித்தும் வருகின்ற பிரதான ஆசாரியர்கள் , பரிசேயர்கள், சதுசேயர்கள் முதலானோர் மேசியாவாகிய இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வரப் போவதையும் அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பதையும் நன்கு அறிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் பாரம்பரியங்களையும் மனுஷருடைய கற்பனைகளையும் உபதேசங்களாக போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று எசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தபடி அவர்களுடைய வாழ்க்கை இருந்ததால் இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களையும் அற்புதங்களையும் அவர்களால் ஏற்க முடியவில்லை. எப்போதும் இயேசு கிறிஸ்துவின் பின்பு திரளான கூட்டம் இருப்பதைப் பார்த்து , இயேசுவின் மேல் பொறாமை கொண்டார்கள். தங்களுடைய பதவிக்கு அவரால் ஆபத்து ஏற்படும் என்று பயந்தார்கள். எனவே பலமுறை நீர் யார் என்றும் மனுஷகுமாரன் என்பதை விசுவாசிக்க, அடையாளத்தை கேட்கிறார்கள். இயேசுவைப் பிடித்து அவரை விசாரிக்கும் போது பிரதான ஆசாரியர்கள் அவரிடம் மறுபடியும் வந்து , நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா? என்று அதை சொல்லும்படி தேவன் பேரில் ஆணையிட்டு கேட்கிறார்கள்.
மத்தேயு 26 : 63 – 64
” அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டு கேட்கிறேன் என்றான்.அதற்கு இயேசு நீர் சொன்னபடிதான், அன்றியும் மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.”
இயேசு , நீர் சொன்னபடி நான் மனுஷகுமாரன் என்று ஒத்துகொண்டபோது அவர் தேவதூஷணம் செய்ததாக கூறி அவரை மரண ஆக்கினைக்கு உள்ளாக்குகிறார்கள்.
பிறவிக் குருடன் இயேசு கிறிஸ்துவால் குணமாக்கப்பட்டபோது அவனது அறிக்கை எப்படியிருக்கிறது என்று பாருங்கள். இயேசு என் கண்களை திறந்திருந்தும் அவர் எங்கேயிருந்து வந்திருக்கிறார் என்று நீங்கள் அறியாதிருப்பது ஆச்சரியமான காரியம். அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் இப்படிப்பட்ட காரியங்கள் செய்ய மாட்டாரே என்றான். இதை யோவான் 9 : 30 – 33 வரையுள்ள வசனங்களில் காணலாம்.
இயேசு கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார் என்பதை நன்கு அறிந்திருந்த பிரதான ஆசாரியரும் பரிசேயரும் காவல் சேவகன் வந்து அவர் உயிர்த்தெழுந்ததை அறிவித்த போது அதை ஏற்றுக் கொள்ளாமல் அதை மறுப்பதற்கு சேவகர்களுக்கு பணம் கொடுத்து சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவரது உடலை கொண்டு போய் விட்டார்கள் என்று உண்மையை மறைத்து பொய்யை சொல்ல சொல்கிறார்கள். ஏன் இவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கவில்லை? இவர்கள் மோசேயின் சீஷர்கள் என்றும் ஆபிரகாமின் புதல்வர்கள் என்று வெளிப்படையாக சொல்லி கொண்டாலும் அவர்களுடைய கட்டளைகளை கைக்கொள்ளவில்லை.
இயேசு கிறிஸ்து லூக்கா 16 : 31 ல் கூறியது நினைவுக்கு வருகிறது.
லூக்கா 16 : 31 ” அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி கொடாவிட்டால் மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்து போனாலும் நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். “
இயேசு சிலுவையில் அறையப்படும்போது காவலில் இருந்த நூற்றுக்கு அதிபதியும் அவரோடு இயேசுவை காவல் காத்தவர்களும் பூமியதிர்ச்சியையும் அப்போது சம்பவித்த காரியங்களையும் கண்டு பயந்து மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
இயேசு கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்கு பாதையை செவ்வைப்படுத்துங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடும் சத்தம் உண்டாகும் என்று எசாயா தீர்க்கத்தரிசியினால் குறிப்பிடப்பட்டவன் யோவான் ஸ்நானகன் . அவர் வரப்போகிற இயேசுவைக் குறித்து சாட்சி சொல்லியிருக்கிறார். எனக்குப் பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்றார். பரிசேயர்களும் யூதர்களும் யோவான்ஸ்நானனையும் இயேசு கிறிஸ்துவையும் ஏற்றுக் கொள்ளவில்லை. யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலானோர் சக ஜனங்களும் யோவானாலே ஞானஸ்நானம் பெற்று தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். பரிசேயரும் நியாய சாஸ்திரிகளும் அவராலே ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளி விட்டார்கள் என்று வேதம் சொல்லுகிறது.
ஜெபம்
பிதாவாகிய தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த போது பரிசேயர்களும் பிரதான ஆசாரியர்களும் நியாய சாஸ்திரிகளும் யூதர்களும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. உண்மையாகவே அவர் வருகைக்காக காத்திருந்தவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை இழந்தார்கள். அப்படி நாங்கள் இராமல் இயேசு கிறிஸ்துவின் போதனையில் நிலைத்து நிற்கவும் , அந்நிய போதனைகள் மற்றும் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு விலக்கி காத்துக் கொள்ளவும் உம்முடைய கிருபையும் வழிகாட்டலும் வேண்டும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
Sol. மோகன சுந்தரம்.
