நாள்: 13-03-2023
விசுவாத்தினால் வாழ்வது
எபிரேயர் 11 ம் அதிகாரம் விசுவாசம் என்பது என்ன என்று சொல்வதில் தொடங்குகிறது.
எபிரேயர் 11 : 1
” விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நம்பப்படுகிறவைகளின் விஷயங்கள் என்று குறிப்பிடப்படுவது கர்த்தர் வாக்குறுதி கொடுத்த விஷயங்கள் என்று உறுதியாகக் கூறலாம்.
“காணப்படாதவைகளின் என்பது கர்த்தர் வெளிப்படுத்தியவைகள் என்று கொள்ளலாம். எனவே விசுவாசம் கர்த்தர் வெளிப்படுத்தியவைகளை நம்புகிறது. கர்த்தர் கொடுத்த வாக்குறுதிகளின் மேல் நம்பிக்கை வைக்கிறது.
இப்போது விசுவாசத்தினால் வாழ்வது என்றால் என்ன அர்த்தம் ? கர்த்தர் நிஜ வாழ்க்கையின் உதாரணங்களை சுட்டிக் காட்டி நமக்கு கற்பிக்கிறார். அவை ஒவ்வொன்றும் விசுவாசத்தின் தனித்துவமான அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது.
ஆபேலைப் பார்க்கும்போது விசுவாசம் கர்த்தருக்கு செவிசாய்க்கிறது என்பதை அவரது கதையிலிருந்து காண முடியும். ஆபேல் நீதிமானாக பாராட்டப்பட்டார். ஏனென்றால் அவரது பலியை கர்த்தர் ஏற்றுக் கொண்டார். அவன் தன் மந்தையில் முதன்முதலாக பிறந்த ஆட்டுக்குட்டியை காணிக்கையாகக் கொடுத்தான். கர்த்தருக்காக ஒரு உயிர் கொடுக்கப்பட்டது.
ஆபேல் மந்தையிலிருந்து ஒரு ஆட்டுக்குட்டியை பலியிட்டது , உலகத்தின் பாவத்தைப் போக்கும் கர்த்தரின் ஆட்டுக்குட்டியான இயேசுவை நோக்கி செல்கிறது.
யோவான் 1 : 29 ” யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு ; இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி என்றார். “
ஆட்டுக் குட்டியை காணிக்கை செலுத்துவது , ஆபேல் கர்த்தரின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்கு அடையாளமாக இருந்தது. இயேசு சிலுவையில் நமக்காக உயிரைக் கொடுத்தபோது அந்த வாக்குறுதி நிறைவேறியது. கர்த்தர் தம்முடைய ஒரே மகனை நம் பாவங்களுக்கு பலியாக ஒப்புக் கொடுத்தார்.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தோலினால் ஆன ஆடையை உருவாக்கிய போது கர்த்தர் அதை வெளிப்படுத்தியதால் , ஆபேலுக்கு ஒரு உயிர் கொடுக்கப்படவேண்டும் தெரிந்திருந்தது.
கர்த்தர் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பலியை வெளிப்படுத்தினார். கர்த்தர் வெளிப்படுத்தியதற்கு விசுவாசம் செவிசாய்க்கிறது.
எபிரேயர் 11 ம் அதிகாரம் விசுவாசத்தின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கிறது. இன்று நாம் ஏனோக்கின் கதைக்கு வருவோம்.
எபிரேயர் 11 : 5
” விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தை காணாதபடிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். அவன் தேவனை எடுத்துக் கொண்டபடியினாலே அவன் காணப்படாமற் போனான். அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னே சாட்சி பெற்றான்.
ஏனோக்கின் கதை, ஆதியாகமம் 5 ல் ஆதாம் முதல் நோவா வரையுள்ள கர்த்தரின் தலைமுறையில் திரும்பவும் சொல்லப்படுகிறது.
தலைமுறைகள் பதிக்கப்பட்டுள்ளன. நாம் இங்கே ஆதாம், சேத், எனோஸ், கேனான், மகலேலாள், ஜேர்த், ஏனோக், மெதுசலா, லாமேக், நோவா என்று வாசிக்கின்றோம்.
இரண்டு கேள்விகள்:
1. ஏன் இந்தப் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன?
லூக்கா 3 ம் அதிகாரம் இறுதியில் இயேசு கிறிஸ்து பிறந்த தலைமுறையின் வரிசையைப் பார்க்கலாம். இது என்னவென்றால் அவர்களுக்கும் இயேசுவுக்குமுள்ள உறவு முறையாகும். நிச்சயமாக இறுதியில் நம் அனைவருக்கும் முக்கியமானது.
ஜோசப் பார்க்கர் கூறுகிறார், ஆதியாகமத்தின் ஐந்தாவது அதிகாரம் மனித வரலாற்றில் மிகவும் சுவாரஸ்யமற்ற கதாபாத்திரங்களின் நீண்ட தொடரின் தொடக்கமாகும். எனோஷ், மகலேலாள், போன்ற மனிதர்கள் மரியாதைக்குரிய போற்றத்தக்க அமைதியானவர்கள். இவர்கள் சாதாரணமாக இருந்து மரித்துப் போனவர்கள்.
உங்களைப் பற்றிய முக்கியமான விஷயம் என்னவென்றால் உங்களைப்பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் ? சமூக ஊடகங்களில் எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்? என்பது அல்ல. இது நீங்கள் சாதித்த பெரிய விஷயங்களின் பட்டியல் அல்ல. இயேசுவோடு நீங்கள் வைத்திருக்கும் உறவு என்ன என்பதுதான்.
2 . ஏன் அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்தனர்?
இந்த தலைமுறையினரின் ஆயுட்காலம் இன்றைய நமது வாழ்க்கையைப் போல பத்து மடங்கு அதிகம்.
ஆதாம் 930 ஆண்டுகள் வாழ்ந்தார். ( ஆதி : 5 : 5 )
சேத் 912 ஆண்டுகள் வாழ்ந்தார். ( ஆதி : 5 :8 )
ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்தார். ( ஆதி : 5 : 11)
ஆதிகாலத்தில் மனிதனின் ஜனத்தொகையை பெருக்குவதற்கு கர்த்தருடைய ஏற்பாடுகள் இவை. நோவாவின் காலத்திற்கும், வெள்ளப் பெருக்கிற்கும் பிறகு மனிதனுடைய ஆயுட்காலம் நாம் பயன்படுத்துகின்றதைப் பொறுத்து வேகமாகக் குறைந்தது.
இந்த முதல் தலைமுறையினர் பல ஆண்டுகள் வாழ்ந்தனர். ஆனால் அவர்களுக்குப் பொதுவான ஒன்று இருந்தது. அவர்கள் இறந்தனர், அவர்கள் இறந்தனர் , அவர்கள் இறந்தனர் என்பதுதான் இது.
ஆனால் இதில் ஒரே ஒரு விதிவிலக்கு இருந்தது. ஏனோக்கு தேவனோடு நடந்தான், அவர் அவனை எடுத்துக் கொண்டார்.
ஆதியாகமம் 5 : 24 ” ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணாமற்படப்போனான், தேவன் அவனை எடுத்துக் கொண்டார். “
கர்த்தர் தம்மை தேடுபவர்களுக்கு பலன் அளிக்கிறார். எஎன்று எபிரேயர் 11 : 6 ல் வாசிக்கக் கேட்கிறோம். கர்த்தரைத் தேடுவதற்கான வெகுமதி அவரைக் காண்பதாகும் . தம்முடைய பிரசன்னத்தில் நிலையான சந்தொஷத்தில் வாழ கர்த்தர் நம்மை அழைக்கிறார். நாம் அவரைத் முழு இருதயத்தோடு தேடினால் அவரைக் கண்டுபிடிப்போம். ஆமென்.
Sol. பவுலோஸ்.
