தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 23-12-2022

2 கொரிந்தியர் 3 : 18  ” நாம் எல்லாரும் திறந்த முகமாய் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு , ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத் தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். “

புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆண்டு முழுவதும் எங்களோடிருந்து , கர்த்தருடைய வசனங்களில் வளரவும், முன்னேறவும் எங்களது ஜெப வாழ்க்கையில்  உதவி செய்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.   நாங்கள் ஜெயிப்பதற்கும் , மாறுவதற்கும் ,ஜெபத்தில் முன்னேறுவதற்கும்  வசனத்திலும் , சேவையிலும் வளர்வதற்கும்  இன்னும் ஓர் ஆண்டினை எமக்கு அளித்த பரலோகத் தந்தையையும் அவருடைய ஒரே பேறான குமாரனையும் பரிசுத்த ஆவியானவரையும் போற்றி புகழுகிறோம். வருகிற இந்த ஆண்டில் நாம் அனைவரும் ஆவிக்குரிய வாழ்வில் வளர வேண்டும். நாம் ஜெபிக்கும் போதும் பரிசுத்த ஆவியானவரின் கிருபையில் நடக்கும் போதும் நாம் கர்த்தரின் பிரசன்னத்திற்குள் நெருங்கி வருகிறோம்.  நாம் அவருடைய இந்த வல்லமை , அன்பு மற்றும் நீதியை அனுபவிக்கும் போது , அவருடைய சாயலில் மாறுகிறோம்.

எபிரேயர் 1 : 3 ” இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும் , அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து , சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்திலே தாங்குகிறவராய் , தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி , உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். “

எபேசியர் 4 : 11 – 13 ” மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத் தக்க பூரண புருஷராகும் வரைக்கும் , பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும் , கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும் ,அவர் சிலரை அப்போஸ்தலர்களாகவும் தீர்க்கத்தரிசளாகவும் , சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். “

கர்த்தருடைய மேலான திட்டமே நாம் அவருடைய குமாரன் இயேசுவாக இருக்க வேண்டும் என்பதே. நாம் ஏற்கெனவே இயேசுவாகிய பாறையிலிருந்து உடைக்கப்பட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் வடிவம் கொடுக்கும் செயல்முறை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இது ஒரு மெதுவான , சிலருக்கு பலநேரங்களில் வேதனை கொடுக்கக்கூடிய செயல் . நம் கர்த்தர் ஒரு கைவினைஞர். அவர் எந்த தவறும் செய்யாதவர். நமது பணி எப்போதும்  அவரது தெய்வீக வழிகாட்டுதலில் இருக்க வேண்டும்.

1 பேதுரு 5 : 6 ” ஆகையால் , ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு , அவருடைய பலத்த கைகளுக்குள் அடங்கியிருங்கள்.”

முயற்சிகளை மேற்கொள்ளும்போது ஒரு போதும் சோர்வடைய வேண்டாம். ஆரம்பம் மெதுவாக இருக்கலாம். பாதை பாறையாக இருக்கலாம். ஆனால் முடிவு மகிமையாக இருக்கும்.

பிலிப்பியர் 1 : 5 ” உங்களில் நற்கிரியைகளை தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்புகிறேன். “

அவருடைய கண் ஒருபோதும் தூங்காது , அவருடைய காது ஒருபோதும் கேட்பதை நிறுத்தாது , அவருடைய கரங்கள் ஒருபோதும் சோர்வடையாது. அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பு அத்தகையது. அத்தகைய அன்பிற்கு முடிவே இல்லை.

ஜெபம்

அன்பின் பரலோகத் தந்தையே , நீர் என்னை தெரிந்துகொண்டதற்காகவும்  அன்பு செய்ததற்காகவும் , கற்றுக் கொடுத்ததற்காகவும்,  என்னை உமது பிள்ளையாக உருவாக்கியதற்காகவும் , படிப்படியாக என்னை கட்டுவித்ததற்காகவும் நன்றி செலுத்துகிறேன். தயவு செய்து எனக்கு உதவும் ,என்னை உருக்கும் ,என்னை களிமண்ணாக மாற்றும் . உமக்குப் பிரியமான வழியில் நான் செல்ல என்னை மாற்றும். என்னுடைய வாழ்வினால் நீர் மகிமைப்படுவீராக. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் இதைக் கேட்கிறேன். ஆமென்.

Sol. மல்கீத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *