நாள்: 04-11-2022
அப்போஸ்தலர் 2 : 38 ” பேதுரு அவர்களை நோக்கி , நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.”
2 கொரிந்தியர் 3 : 17 “கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுண்டு. “
அப்போஸ்தலர் 5 : 32 “இந்த சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்கு சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்கு கீழ்படிகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.”

நாம் நமது பாவங்களுக்காக வருந்தி , கர்த்தரிடம் அவைகளுக்காக மன்னிப்பு கேட்டு, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். பிறகு கர்த்தர் நம் பாவங்களை எல்லாம் மன்னித்து பரிசுத்த ஆவியானவர் வழியாக நம்மை ஆசீர்வதிப்பார்.
யாரெல்லாம் கர்த்தருக்கு கீழ்படிந்து அவருடைய வார்த்தையின்படி வாழ்கிறார்களோ அவர்களுக்கே பரிசுத்த ஆவியானவர் அருளப்படுவார்.
கர்த்தரால் நமக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் நமது நண்பர் , துணையானவர், நமக்காக வாதாடுபவர். அவர் நமக்கு உதவி செய்வார். நம்மோடு இருப்பார்.
பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவார், எல்லாவற்றையும் நமக்கு கற்றுக் கொடுப்பார். ஒவ்வொன்றையும் நமக்கு நினைவூட்டுவார்.
நாம் , நம்மை முழுவதுமாக பிரிசுத்த ஆவியானவருக்கு அர்ப்பணித்து , அவர் நம்மை பற்றிக் கொள்ளும்படியாக ஜெபிக்க வேண்டும்.
நாம் அவருடன் நல்ல வலுவான உறவை ஏற்படுத்திக் கொண்டால் , நாம் என்ன செய்யவேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் , என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பதைப்பற்றி சொல்லிக் கொடுப்பார்.
சங்கீதம் 143 : 10 ” உமக்கு பிரியமானதைச் செய்ய எனக்கு போதித்தருளும் , நீரே என் தேவன்,உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையிலே வழி நடத்துவாராக. “
பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையை பொறுப்பெடுத்துக் கொள்ளும்போது , அன்பு, சந்தோஷம், பொறுமை, இரக்கம், நற்குணம், விசுவாசம் , சாந்தம் , இச்சையடக்கம் போன்ற நற்கனிகளை நம் வாழ்க்கையில் நமக்கு தருவார்.
நாம் கர்த்தராகிய ஆவியானவரிடம் நம்மை அர்ப்பணிக்கும் போது , கர்த்தருடைய விருப்பத்தினை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். அப்போது கர்த்தர் நம்முடைய வாழ்க்கையின் பாதையை செம்மைப்படுத்தி, நம்முடைய இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவார்.
பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்துவதனால்,நாம் கர்த்தருக்கு உண்மையும் விசுவாசம் உள்ளவர்களாகவும் இருந்து , நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்காக, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருப்போம்.
ஜெபம்:
பரலோகத் தந்தையே, இந்த செய்தியை வாசிக்கின்ற யாராக இருந்தாலும், அவர்கள் தங்களையும், தங்களுடைய விருப்பத்தையும் கர்த்தருக்கு அர்ப்பணித்து வாழ , அவர்களோடு இருந்து அவர்களுக்கு உதவி செய்யும்படியாக ஜெபிக்கிறேன். இதன்மூலம் அவர்களை வல்லமையாக பயன்படுத்தி , ஏராளமாக ஆசீர்வதிக்கும்படி
இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்.
ஆமென்
Sol.Dr.Himakshi
