நாள்: 21-10-2022
இயேசு அவனுக்குப் பிரதியுத்ரமாக, நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார்.
யோவான் 13:7
நம்முடைய வாழ்க்கையில் என்ன தவறு இருக்கிறது, நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை நாம் இப்பொழுது அறியோம்.ஆனால் இந்த வசனம் ஆண்டவரை நம்பும்படி நமக்கு நினைப்பூட்டுகிறது. இப்பொழுது நாம் கடந்து போகிற காரியங்களை அறியாமல் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் அதை அறிவோம். நம் ஆண்டவரே எல்லாவற்றையும் அறிந்தவர்
அவர் நம்முடைய நித்திய தேவனும், நம்முடைய இரட்சகரும், நம்முடைய பிதாவுமாயிருக்கிறார். நம் வாழ்க்கையில் நாம் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் நம் ஆண்டவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையும் விசுவாசமும்தான்.
நாம் அவரையும் அவரது திட்டத்தையும் நம்பினால், நமது வாழ்க்கைக்காக, நாம் கனவு கண்ட அனைத்தையும் அதற்கு மேலாகவும் நமக்குத் தருவார்.அதற்கு நம்பிக்கையும், பொறுமையும் தேவை.காத்திருக்கும் நேரத்தில் அவரை ஆராதித்து வரப்போகும் ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மனத்தாழ்மையுள்ள ஊழியக்காரன் போல் மற்றவர்களின் பாதங்களைக் கழுவும் வேலையை இயேசு செய்தார்.இந்த வேலை பின்னால் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று இயேசு எல்லாருக்கும் உறுதியளிக்கிறார்.
சீடர்கள் அதிகாரத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் லூக்கா 9:54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது , ஆண்டவரே , எலியா செய்ததுபோல , வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
மாற்கு 9 :34 ல் அவர்கள் தங்களுக்குள் எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆண்டவர் எருசலேமுக்கு ராஜாவாக வருவதை கண்டு உற்சாகப்பட்டார்கள் யோவான் 12 : 12, 13ல்
ஆனால் இயேசு தன்னை அவர்களுடைய பாதங்களை கழுவி எவ்வளவாய் தாழ்த்தினார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்
என்னுடைய முப்பது முதல் ஐம்பது வயதில் என்னுடைய வாழ்க்கையில், எனக்கு ஐந்து அறுவை சிகிச்சைகள், என்னுடைய கணவருக்கு ஒரு இதய அறுவை சிகிச்சை என்று ஒன்றன் பின் ஒன்றாக ஏன் இவ்வளவு துன்பங்கள் வந்தன என்று நான் அடிக்கடி யோசித்தேன். ஆனால், சகித்து நிலைத்திருப்பதற்கும் நம்பிக்கையோடு இருப்பதற்கும் கடவுள் எனக்கு பொறுமையைக் கொடுத்தார்.
கடவுள் என்னை தெரிந்தெடுத்து (எரேமியா 30:21) அவரிடம் நெருங்கிவர என்னை செதுக்கினார் என்பதை என் அறுபதுகளின் பிற்பகுதியில் நான் அறிந்து கொண்டேன்.
ஆம் ,ஆண்டவருடைய பிரசன்னம் எல்லாவற்றையும் கனியுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது அவருடைய பிரசன்னம் இல்லாதது எல்லாவற்றையும்- நமது அறிவு, சந்தோஷம், பொருள், வலிமை போன்றவற்றை பயனற்றதாக மாற்றிவிடுகிறது-,
அவருடைய பிரசன்னத்தில் நாம் நேரத்தை செலவிடும் போது அதனுடைய முக்கியத்துவத்தை இப்போது நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு கால அளவில் நாம் அதை புரிந்து கொள்வோம் அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம். நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் அவர் நம் வாழ்வில் ஆறுதல், அர்த்தம், முக்கியத்துவம் மற்றும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக மாற்றுவார்.
தினமும் ஜெபம் செய்வதிலும், அவருடைய வார்த்தையை தியானிப்பதிலும் உள்ள நேரம் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தை நாம் மிகவும் பொக்கிஷமாகக் கருத வேண்டும், ஏனெனில் அது நம் வாழ்வில் பெரும் பலத்தையும் ஆறுதலையும் தருகிறது.
ஜெபம்
எங்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் நடக்க அனுமதித்ததற்காக அப்பா உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம், எப்போதும் எல்லாவற்றிலும் உம்மீது நம்பிக்கை வைக்க உதவி செய்யும். என் விருப்பம் அல்ல உம விருப்பம் நிறைவேற என ஜெபிக்க கிருபை தாரும் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்
Sol. Gigi Jacob.
