நாள்: 29-02-2024
ரோமர் 8 : 24 – 25″ அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல, ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்.”
எபிரேயர் 11 : 1 “விசுவாசமானது நம்பப்படுகிறவர்களின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது. ” விசுவாசத்தின் வரையறை என்பது காணப்படாதவைகளின் நிச்சயமாய் இருக்கிறது.
நாம் ஒன்றை கண்ணால் பார்த்துவிட்டு பின் அதை நம்புவது என்பது விசுவாசம் இல்லை. நாம் பார்க்காததை நம்பும்போதுதான் அதன் பெயர் விசுவாசம் என்று அறிகிறோம். நம் தேவன் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கின்ற தேவன். அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அப்படிப்பட்ட கண்களை உடையவர்களாக இருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அப்படிப்பட்ட ஒரு விசுவாசம் நிறைந்த சந்ததியை இந்நாளில் தேவன் விரும்புகிறார். விசுவாசத்தில் நிலைத்திருந்த இருவரைப்பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.
நோவா
எபிரேயர் 7 : 11″ விசுவாசத்தினாலே நோவா அக்காலத்திலே காணாதவைகளைக் குறித்து எச்சரிப்படைந்து பயபக்திக்கு உள்ளாகி தன் குடும்பத்தை இரட்சிப்பதற்காக பேழையை உண்டு பண்ணினான். ” ஆதியாகமம் புத்தகத்திலே நாம் நோவாவைக் குறித்து தெளிவாக அறிகிறோம். நோவாவின் காலத்திலே கர்த்தர் நான் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்கு நான் மனஸ்தாபப்படுகிறேன். எனவே நான் அவர்களை அழிக்கப் போகிறேன்.
எனவே நீ ஒரு பேழையை உண்டாக்கு என்று சொல்கிறார். நமக்கு இப்படிப்பட்ட ஒரு பணியை கொடுத்தால் நாம் உடனே செய்ய முற்படுவோமா என்பது கேள்விக்குறி தான். ஆனால் காணாதவைகளைக் குறித்து விசுவசிக்கக்கூடிய , உடனே கீழ்படியக்கூடிய நோவாக்களைத்தான் கர்த்தர் எதிர்பார்க்கிறார். நம்முடைய வாழ்க்கையிலும் நம்மைக்குறித்து நாம் வாழும் பகுதியில் ஒரு திட்டம் வைத்திருப்பார். அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை செயல்படுத்தக்கூடிய கிருபையை கர்த்தர் நமக்குத் தருவாராக. மழையை அறியாத அந்நாட்களில் நோவா பேழையைக் கட்டுவது குறித்து பல அவிசுவாச வார்த்தைகள் வந்தாலும் அதைக் குறித்து சோர்வடையாமல் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியைச் செய்தார். நமக்கும் கர்த்தர் பலப்பல திட்டங்களைத் தந்திருக்கிறார். நாம் கர்த்தரோடு இணைந்து ‘ நம் விசுவாசத்திலே நிலைத்திருந்து நமது பணிகளை செய்து முடிக்க வேண்டும். அதன்மூலம் இந்த உலகத்தை ஆபத்திலிருந்து, ஆக்கினையிலிருந்து காக்க கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக.
ஆபிரகாம்
எபிரெயர் 11 : 8 ” விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்திரமாக பெறப்போகும் இடத்திற்கு போகும்போது, கீழ்படிந்து தான் போகுமிடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டு போனான். ”
கல்தேயர் தேசத்திலே விக்கிரகங்களை வணங்கிக் கொண்டிருந்த அந்த ஆபிரகாமைப் பார்த்து உன் தகப்பன் வீட்டையும் உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ என்று சொல்லி விட்டார். ஆனால் ஒருபோதும் அவர் தேசத்தின் பெயரைச் சொன்னதில்லை. ஆபிரகாம் தான் கண்டிராத ஒரு இடத்திற்கு உடனே புறப்பட்டு செல்கிறார். இதுதான் விசுவாசம். ரோமர் 4 : 17 , 19 வசனங்களை வாசிக்கும்போது ஆபிரகாம் தான் வயதானவன் என்பதையும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய மனைவி கர்ப்பம் செத்துப் போனவள் என்பதையும் பொருட்படுத்தவில்லை. தான் ஜாதிகளுக்கு தலைவனாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பதை விசுவசித்தான். நம்புவதற்கு ஏதுமில்லாத போதும் அதை விசுவசித்தான். திருமணமாகி ஏழு வருடங்களாக குழந்தை இல்லாத தம்பதி ஒருமுறை என்னை சந்திக்க வந்தனர். அப்போது என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கர்த்தர் ஒரு காரியம் பண்ணைச் சொன்னார். அதன்படி சமீபத்தில் பிறந்த குழந்தை ஒன்றை கொண்டு வரச் செய்து அவர்களிடம் கொடுத்தேன்.
குழந்தையை கையில் வாங்கியவுடன் நீங்கள் உங்கள் குழந்தைக்காக அதாவது இப்போது காணாத இனிமேல் காணப்போகிற உங்கள் குழந்தைக்காக ஸ்தோத்திரம் சொல்லி ஜெபியுங்கள் என்று சொன்னேன். கர்த்தருடைய மேலான கிருபையினால் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை கொடுத்து அவர்களை ஆசீர்வதித்தார். கர்த்தருடைய நாமம் மகிமைப்படட்டும். புதிய ஏற்பாட்டிலே , யாவீர் தன்னுடைய மகள் உடல்நிலை சரியில்லையென்று இயேசுவிடம் வந்து சொல்கிறார். அருகிலுள்ளவர்கள் அவ நம்பிக்கையோடு யாவீரிடம் சொன்னபோது இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து நம்பிக்கை கொள் என்று சொல்லி வீட்டிற்கு செல்கிறார். இறந்த யாவீரின் மகளைப் பார்த்து அவள் இறக்கவில்லை, நித்திரை செய்கிறாள் என்று சொல்லி அவளை உயிர்ப்பிக்கிறார்.
நடக்காதவைகளை நடப்பிக்கின்ற தேவன். உங்கள் வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்ற நிலையிலும், இயேசு அவை எல்லாவற்றையும் என்னால் மாற்ற முடியும் என்று சொல்கிறார். நாம் அடிக்கடி வாசிக்கின்ற எசேக்கியேல் 37 ம் அதிகாரத்தில் உள்ளபடி அவர் உலர்ந்த எலும்புகளை உயிர்பெறச் செய்கின்ற தேவன்.நம்முடைய தொகுதியோ நம்முடைய குடும்பமோ மரித்த ஒரு நிலையில் காணப்படுமேயாகில், அவர்களை தேவனை துதிக்ககூடிய ஆராதனை வீரர்களாக எழும்பி வரச் செய்வோம் . தேவனுக்கு ஊழியம் செய்ய கூடிய ஊழியர்களாக எழும்பி வரச் செய்வோம். அவராலே எல்லாமே முடியும். காரணம் உலர்ந்த எலும்புகளை உயிருள்ள சேனைகளாக மாற்றக்கூடிய தேவன் நம் இயேசு கிறிஸ்து.
தீங்கு ஒரு விரியன் பாம்பைப் போல நம்மை கவ்விக் கொண்டிருந்தாலும் அவை எவ்வளவு விஷமுள்ளவைகளாக இருந்தாலும் நாம் கர்த்தர் மேலுள்ள விசுவாசத்தினால் அதை உதறிவிடுவோம். ஆமென்.
Sol. Dr. Petricia