நாள்:20-05-2022 – தேவ செய்தி
என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.
யோபு 19:15-17.
என்னுடைய சுவாசம் என் மனைவியினால் வெறுக்கப்படுகிறது, மேலும் என்னுடைய தாயின் வற்றிலிருந்து பிறந்தவர்களிடம் நான் கெஞ்ச வேண்டியுள்ளது.
இங்கு யோபு தன்னுடைய தற்போதைய நிலையை விளக்குகிறான். இவ்வுலகில் அநேக வயதான மூத்தவர்கள் இப்படிப்பட்ட நிலையில் தான் வாழ்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒரு சகோதரி, ஓய்வு பெற்றதிலிருந்து தனியாகத்தான் வசித்துவருகிறார். வாழ்நாள் முழுவதும் குடும்ப செலவிற்கு அவருடைய கணவன் அவருக்கு ஒரு பைசா கூட கொடுக்க வில்லை. அவர் எப்படி எங்கே தன் சம்பாத்தியத்தை செலவுசெய்தார் என்கிறுகூட மனைவிக்கு தெரியாது.
கணவன் மனைவி இருவருக்கு இடையில் இருக்கும் தவறான புரிதலின் காரணமாக அவர்களுடைய குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய மகள், பெற்றோர் இருவரையும் வெறுக்கிறாள். சில வேளைகளில் தாய் மகளை பார்க்கச் சென்றாலும் அவர்களை அவள் துரத்திவிடுகிறாள். பேரப்பிள்ளையோடு தனக்கு இருக்கும் அளவுகடந்த அன்பு இரண்டு நாள் தங்க வைக்கிறது. அப்பொழுதுகூட மகள் தாயை ஒரு அடிமையைவிட கேவலமாக நடத்துகிறாள்.
யோபு ஏன் தன்னுடைய வாழ்வில் இப்படிப்பட்ட மோசமான ஒரு நிலையில் இருந்தான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது அவனுக்காக வைக்கப்பட்ட பரீட்ச்சையாகும். இது போன்று நம் வாழ்வில் நடந்தால் நாம் ஏன் இது நடக்கிறது என்று கேட்ப்போம்.
யோபு நம் அனைவருக்கும் ஒரு மாதிரி. யோபுவின் காலத்தில் மனிதர்கள் சம்பந்தப்பட்ட கர்த்தருடைய வழிகளை விளக்கிச்சொல்ல ஒருவரும் இல்லை.
ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய வாழ்வில் நடக்கும் அனைத்தையும் நமக்குள் வாழும் இயேசு, பரிசுத்த ஆவியின் மூலமாக நமக்கு சொல்லிகொடுக்கிறார், வழிநடத்துகிறார்.
நமக்கு காதுகள் இருந்தால் கேட்க கடவோம்.
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரே 17:5
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரே 17:7

நம்முடைய வாழ்வில் நமது நம்பிக்கையின் ஊற்றாக இருப்பவர் நம் தேவன் மட்டுமே. நம் வாழ்வில் நாம் காணும் இவ்வனைத்தும் ஒரு நாள், ஒரு நேரத்தில் நம்மை விட்டு விலகி போகலாம். குடும்பத்தில் பிறந்த குழந்தை எல்லாவற்றிற்கும் தன் பெற்றோரை நம்புகிறது. சமுதாயத்தில் அவன் பார்க்கும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் மேலும் மற்றவர்களை அவன் சார்ந்து வாழ்கிறான்.
ஆனால் எந்த நேரத்திலும் வாழ்க்கையில், யாராலும் சொல்ல முடியாத நேரத்தில் மனிதர்கள் மீது அந்த குழந்தை வைத்த அனைத்து நம்பிக்கைகளும் உடைந்து போகும். அது நடப்பதற்கு முன்பாக அந்த குழந்தைக்கு தெரிய வேண்டிய உண்மை ஒன்று உள்ளது – எல்லா நம்பிக்கைக்கும் ஊற்றாகவும், எல்லாவற்றையும் வாழ்வில் நமக்கு கொடுக்கவல்லவராக இருப்பவர் கர்த்தர் மட்டுமே. அதனுடைய பெற்றோரோ, நண்பர்களோ, உறவினர்களோ, படிப்பு, புத்திசாலித்தனம், செல்வங்கள், பதவி, மற்ற அனைத்துமே கர்த்தர் கொடுக்கும் ஒரு கொடையாகும். அவனுடைய வாழ்க்கைகூட கர்த்தர்கொடுத்ததால் அவன் கர்த்தருக்கு கடமைப் பட்டிருக்கிறான்.
பெற்றோரின் பராமரிப்பில் அவன் இருக்கும் அந்த 18 வயதிற்குள் மக்களின் மீதிருக்கும் அவனது நம்பிக்கையானது கர்த்தர் மேல் மாற நாம் சொல்லி கொடுக்க வேண்டும். இதைப் பற்றி அவர்களுக்கு தெளிவாக சொல்லி கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் இப்படி சொல்லி கொடுத்து வளர்த்த குழந்தைகள் மெதுவாகவும், சீராகவும், சரியான நேரத்தில் தங்கள் வாழ்வின் இலட்சியத்தை நிச்சயம் அடைகிறார்கள்.
ஜெபம்
அனைத்து ஆத்துமாக்களும் கர்த்தர் மீது மட்டுமே நம்பிக்கை வைப்பார்களாக, கர்த்தருடைய மகிமை நிறைந்த சிங்காசனம் அவரை நம்புகிறவர்களுக்கு ஒரு பாதுகாப்பான கோட்டையாக இருக்கிறது. கர்த்தருடைய திட்டத்திற்கும் கிருபைக்கும் முன்பாக நாம் எல்லாவற்றையும் எல்லாரையும் ஒப்புகொடுப்போம், ஆமேன்.
–Sr. Angelica AOJ
