நாள்: 09-03-2023
இயேசுவும் அவரது இரவு வருகையாளரும்
‘எனக்கு சாட்சியாக இருங்கள்’இயேசு
“ ஒரு மனுஷன் சொல்லுவதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். “யோவான். 7:51
ஒருமுறை இராத்திரியிலே இயேசுவைச் சந்தித்த பரிசேயரான நிக்கொதேமு என்பவர் இந்தக் கூற்றைச் சொன்னார். இயேசு உண்மையிலேயே தேவனிடமிருந்து வந்த ஒரு போதகர் என்று அவர் அறிவித்தார். நிக்கொதேமு இஸ்ரேலின் சிறந்த ஆசிரியராகவும் யூதத் தலைவராகவும் இருந்தார்.
மக்கள் கூடாரப் பண்டிகையைக் கொண்டாட எருசலேம் சென்றனர். யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்லக் காத்திருந்தார்கள், அது இயேசுவுக்குத் தெரியும். அதனால் அவர் வெளியரங்கமாய் அங்கு செல்லவில்லை.
எருசலேமில் சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.
பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம் பண்ணினார். அப்பொழுது யூத அதிகாரிகள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது.
அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறது என்று அறிந்துகொள்ளுவான்” என்றார்.
அப்பொழுது சிலர்: இவனையல்லவா அதிகாரிகள் கொலைசெய்யத் தேடுகிறார்கள்? இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ?” என்றார்கள்.
அப்பொழுது அவரைப் பிடிக்கவகைதேடினார்கள், ஆனாலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. ஜனங்களில் அநேகர் அவர் செய்த அற்புதங்களை பார்த்து அவர் கிறிஸ்து என்று விசுவாசித்தனர். அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன் என்றார். பண்டிகையின் கடைசி நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார்.
ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். மற்றவர்கள் அவர் மேசியா என்று சொன்னார்கள். காவலர்கள் திரும்பிச் சென்றபோது, பரிசேயர்கள், ஏன் அவரை அழைத்து வரவில்லை என்று கேட்டார்கள். “இவரைப் போல் யாரும் பேசியதில்லை” என்று பதிலளித்தனர்.
அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? என்றனர்.
அந்த நேரத்தில், நிக்கொதேமு, இயேசுவுக்காக குரல் எழுப்பி, ஒரு மனிதனை அவன் என்ன செய்தான் என்பதை விசாரித்துக் கண்டுபிடிப்பதற்கும் முன்பு, கண்டிக்க முடியாது என்று அவர்களின் சட்டத்தை நினைவுபடுத்தினான்.
சாட்சியம்:
அவருடைய நிபந்தனையற்ற அன்பினால், நாம் மெய்யான வெளிச்சத்திற்கு வந்துள்ளோம். இயேசுவின் சீடர்களாக, நாம் அவருக்கு ஒவ்வொரு நாளும், எப்பொழுதும் சாட்சியாக இருப்போம்.
ஜெபம்:
இயேசுவே, நிக்கொதேமு போல நாங்கள் உம்முடைய ஒளியை ஏந்துபவர்களாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும்.
வீரா. D. விக்டி மிதிலா
