நாள்: 21-04-2023
நாம் ஏமாற்றமடையும் போது எவ்வாறு செயல்படுவது?ஏமாற்றம் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது?
“நீதிமான்கள் கூப்பிடும் போது , கர்த்தர் கேட்டு அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார்.நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு கர்த்தர் சமீபமாயிருந்து நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும். கர்த்தர் அவைகள் எல்லாவற்றிலிருந்தும் அவனை விடுவிப்பார்.”
சங்கீதம் 34 : 17 – 19
நாம் அனைவரும் பல விஷயங்களில் ஏமாற்றம் அடைகிறோம். தினமும் பிரச்சனைகளை சந்திக்கிறோம். ஆனால், கர்த்தர் மனம் உடைந்தோருக்கு அருகாமையில் இருக்கிறார் . வேதனை மற்றும் துன்பம் ஏற்படும் காலங்களில் அமைதியைக் தருகிறார். கர்த்தர் நம் ஏமாற்றம் மற்றும் கவலையைக் குறித்து கவனம் கொள்கிறார்.
“ஆகையால், ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு , அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள், அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்.”
1 பேதுரு 5 : 6 – 7
கடினமாக உழைத்தாலும், சில சமயங்களில் நமது முயற்சிகள் வெற்றியடையாது. அந்த காலகட்டத்தில், நம்மை வழிநடத்தும் கர்த்தரின் தலையீட்டிற்காக நாம் அவரை நோக்கிப் பார்க்க வேண்டும்.
” நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன், என்று கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. அப்பொழுது நீங்கள் கூடி வந்து , என்னைத் தொழுது கொண்டு விண்ணப்பம் பண்ணுவீர்கள், நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடு என்னைத் தேடினீர்களானால் என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். “
எரேமியா 29 : 11 – 13
கர்த்தர் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. எப்பொழுதும் நாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்.
” கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சகாலம் பாடனுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி , ஸ்திரப்படுத்தி , பலப்படுத்தி , நிலைநிறுத்துவாராக. அவருக்கு மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக “
1பேதுரு 5 : 10 – 11
ஏமாற்றம் என்பது தற்காலிகமானது. கர்த்தர் நம்மை மீட்டெடுப்பார். நம்முடைய வளர்ச்சிக்காகவும் அவருடைய மகிமைக்காகவும் அவர் நம்மை பலமாகவும், உறுதியானவர்களாகவும் ஆக்குவார்.
“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல, என்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகள் , உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்த்திருக்கிறது.”
எசாயா 55 : 8 – 9
நம் ஏமாற்றத்திலும்கூட கர்த்தர் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்.
மகத்தான எதிர்காலம் என்ற அவருடைய வாக்குறுதிக்காக நாம் கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். இந்த வேதனையான தருணங்களில் நம்மை முழுவதும் கர்த்தருக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவர் நம்மை பலப்படுத்துவார். நாம் எந்த சூழ்நிலையிலும் எந்த சவாலையும் எதிர்கொள்ளும் ஞானத்தை உடையவர்களாக மாறுவோம். நாம் ஏமாற்றம் அடையும் போது கர்த்தருக்கு எதிராக முணுமுணுக்கக் கூடாது. இந்த வேதனையான வேளைகளில் பூமியில் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தவும், அவருடைய ராஜ்யத்தில் நுழையவும் வழிகாட்டுகிறார்.எனவே , இரவும் பகலும் கர்த்தர் நம்மோடிருந்து , நம் வாழ்க்கை முழுவதும் நம்மை தம் கரங்களில் ஏந்துவதற்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். ஆமென்.
Sol. சுப்ரமணியன்.
