நாள்: 03-04-2023
அக்கினித் தழல்
“அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து,அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான். பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன். “
இங்கு எசாயா தீர்க்கத்தரிசி வல்லமையாய் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு ஒரு பரலோக தரிசனத்தைக் காண்கிறார். கண்ட மாத்திரத்தில் தன்னுடைய பாவ நிலையை உணர்கிறார்.
அப்பொழுது அக்கினித் தழலால் தன் வாய் தொடப்படுகிறது. அக்கினியாக இருந்தாலும் அந்த அக்கினி அவரை சுடவில்லை. மாறாக அவரது உதடுகள் பரிசுத்தப்படுத்தப்படுகின்றன. பின் அவர் வல்லமையான தீர்க்கத் தரிசியாக ஆண்டவருடைய ஊழிய த்தை செய்கிறார்.
புதிய ஏற்பாட்டில் 120 சீடர்கள் கூடியிருக்கும் நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினி நாவுகளாக வந்து அவர்கள்மேல் அமர்கிறார். நாவு தொடப்பட்டவுடன் பேதுரு தைரியமாக கர்த்தருடைய வார்த்தைகளை பேசுகிறார்.
இந்த பரிசுத்தப்படுத்தும் அக்கினி நம் வாழ்வை ஒரு நாளும் எரிப்பதில்லை. மாறாக , பரிசுத்தப்படுத்துகிறது. நம்மை சுத்திகரிக்கிறது. கர்த்தருக்கு வல்லமையாய் பயன்பட நம்மை தகுதியாக்குகிறது.
ஆண்டவர் அக்கினியில் நடந்தாலும் வேகாதிருப்பாய் என்று வாக்கு கொடுத்திருக்கிறார். சாத்ராக், மேஷாக் போல அக்கினி நடுவில் நடக்கிற சூழ்நிலைகள் , நம்மை பரிசுத்தப்படுத்துவது மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாற்றுகிறது.
சாட்சி
நான் புதிய இடத்தில் என்னுடைய அலுவலகத்தில் சேர்ந்த சில மாதத்தில் என்னுடைய கணினியில் முக்கியமான செயலி வேலை செய்யவில்லை.3 மாதம் ஆகியும் சரியாகவில்லை. ஆனால் இந்தக் காரியத்தின் மூலம் கர்த்தர் என்னை பொறுமையாக நடத்தியது மட்டுமல்லாமல் , இது அநேக மனிதர்களுடைய தவறுகளால் நடந்தது என்று என்று காட்டிக் கொடுத்து, அது சரி செய்ய கிருபை செய்தார். இதன் மூலம் அநேக நாட்கள் சரிசெய்யப்படாமலிருந்தவைகள் சரிசெய்யப்பட்டு , இனிமேலும் இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடிக்க கிருபை கூர்ந்தார். இந்தக் காரியம் எனக்கும் என் அலுவலகத்திற்கும் ஆசீர்வாதமாய் முடிந்தது.
ஜெபம்.
அன்புள்ள தகப்பனே, இந்த செய்தியை வாசிக்கும் ஒவ்வொருவரோடும் நீர் பேசும். நாங்கள் கடந்து போகிற அக்கினியின் பாதை எங்களை பரிசுத்தமாக்குதலுக்கும், சுத்திகரித்தலுக்கும் நேராக நடத்துவதாக. இந்த நடைமுறையின் மூலமாக எங்களை உமக்கு உபயோகமான பாத்திரமாக நீர் வனைவதற்காக நன்றி. எங்களை மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாற்றுவதற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென்.
Sol. லட்சுமி.
