நாள்: 15-03-2023
எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும்,வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும்,
1 கொரிந்தியர் 12 : 8 – 11
வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
இவைகளையெல்லாம் அந்த ஒரே அவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.”
மேற்கண்ட வசனங்கள் நமக்கு அற்புதமான குணமளித்தல் , ஞானம் , தீர்க்கத்தரிசனம், அந்நிய பாஷைகளில் பேசுதல் , பரிசுத்த ஆவியின் வல்லமையால் பகுத்தறிதல் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறது.
அவரால் நாம் பரிசுத்தமாக்கப்பட்டு , கிறிஸ்துவில் முழுமையானவர்களாக உருவாக்கப்படுகிறோம். பரிசுத்த ஆவியானவர் சர்வ வல்லவரை நேரடியாக நம்மோடு இணைக்கிறார். அவர் நமது ஜெபத்தின் பங்காளி. அவரது குரல் ஆத்துமாவைத் துளைத்து நம் இதயங்களை எரிய வைக்கும். யாரேனும் யகோவாவை இரட்சகராக ஏற்றுக் கொண்டால் பரிசுத்த ஆவியானவர் தமது வேலையைத் தொடங்குகிறார். சாத்தானுக்கு எதிரான போரில் விசுவாசி வெற்றி அடையும் வரை அவரது வேலை முடியாது. பரிசுத்த ஆவியின் துணையில்லாமல் யாரும் கர்த்தரின் ராஜ்யத்திற்குள் நுழைய முடியாது. நாம் நம்மையே ஒப்புக் கொடுக்க வேண்டும். பரிசுத்த ஆவியின் அதிகாரத்திற்கு அடிபணிய வேண்டும். பாவம் நம்மை பரிசுத்த ஆவியிடமிருந்து பிரித்துவிடும். எந்த காரணத்திற்காகவும் அவருடன் உள்ள தொடர்பை நாம் விட்டுவிடக் கூடாது. நாம் நம்மை பரிசோதித்து அவருடனான உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு மற்றவர்களை மன்னிக்கும்போது, நாமும் மன்னிப்பு பெறுவோம்.
மன்னித்தலும் ஒப்புரவாதலும் இந்த பூமியின் அமைதி மற்றும் செழிப்புக்கான, மற்றும் கர்த்தரின் ராஜ்யத்திற்குள் நுழைவதற்கான இரண்டு முக்கியமான சாவிகளாகும்.
என்னுடைய வாழ்க்கையில் ஞானஸ்நானத்திற்குப் பிறகு, நான் செய்த தீமையான செயல்கள் என்னை பரிசுத்த ஆவியிடமிருந்து பிரித்தன. சாத்தான் எனது தொழில், வியாபாரம் மற்றும் ஊழியங்களில் பல தடைகளைக் கொண்டு வந்தான். ஆயினும் நம்முடைய கர்த்தர் என்னை மன்னிக்க தயை உள்ளவராக இருந்தார். நான் இப்போது சாத்தானை எதிர்க்க தைரியமுள்ளவனாகவும் எந்த இடத்திலும் சாத்தானை தோற்கடிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. எனக்குள் வந்த இந்த மாற்றம் , என்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் என்னை வழிநடத்தும் பரிசுத்த ஆவியினாலே வந்தது. பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்துவாராக. ஆமென்.
Sol. சுப்ரமணியன்.
