நாள் 18-10-2022
” பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார். அவர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.” மாற்கு 3 : 13
இந்த ஒரு நிகழ்வில் , இயேசு மலையின் மேல் ஏறி உட்கார்ந்து, தமக்கு விருப்பமானவர்களை அழைத்தார் என்று அறிகிறோம். ஆனால் நமக்குத் தெரியும் நம் ஒவ்வொருவரையும் இயேசு நேசிக்கிறார் என்பது. அவர் பாரபட்சமற்றவர். நம் ஒவ்வொருவரையும் தேவன் அழைத்தது மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரையும் அன்பு செய்கிறார். மேலும் அந்த வசனத்தில் மக்கள் அவரிடத்தில் வந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்று நம் தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். நம்முன்னே இப்போது இருப்பது, நாம் அவரை நேசிக்கிறோமா அல்லது அவரை விட்டு விலகி இருக்கிறோமா?

நாம் வேதாகமத்தின் மூலம், இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் ஒரு பெரிய மக்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்தார்கள் என்று அறிகிறோம். இயேசு அடிக்கடி மலையின் மேல் ஏறி, அங்கு உட்கார்ந்து தேவனுடைய வார்த்தைகளை போதித்தார். இயேசுவை பின்பற்றியவர்கள் எல்லோரும் அவருடனே மலைமேல் ஏறி அமர்ந்தார்கள். அவருடன் செல்ல சில மக்கள் தயங்கினார்கள். ஆனால் நிறைய மக்கள் அவருடைய வார்த்தைகளைக் கேட்டு, தன் கவலைகளின் பொருட்டு சில அற்புதங்களை நிகழ்த்துவார் என்று நினைத்து காத்திருந்து திரும்பினார்கள். ஆனால் சில மக்கள் அவருடன் நடந்து ,அவருடன் உட்கார்ந்து ,அவர் செல்லும் இடங்களில் அவருடைய பிரசங்கத்தை கேட்டார்கள் . மேலும் அவருடைய அற்புதங்களையும் கண்டார்கள். இவர்கள்தான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்ட சீடர்கள்.
நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், வெளிப்பாடுகளையும் பெற வேண்டுமென்றால் அவருடனே இருந்து அவரை பின்பற்றி , களைப்படையாமல் அவர்மீதுள்ள விசுவாசத்தையும் இழக்காமல் இருக்க வேண்டும். நாம் அவருடன் அமர்ந்து அவர் பேசுவதை கேட்பது அவசியம். நாம் தேவனின் வார்த்தைக்கு முன்னுரிமை கொடுத்து, எந்தவித சோம்பலும் களைப்பும் இல்லாமல், அவருக்கு கீழ்படிந்து அவரைச் சார்ந்து அவருடனே வாழும்போது, அவருடைய வேலையை நம் வழியாக நிறைவேற்றுவார்.நாம் பிரசங்கிக்க தொடங்கி, பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை உணரும்போது தேவன் வாக்குரைத்தபடியே அற்புதங்கள் நடக்கும்.
மாற்கு 16 : 20 ல் ” அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள் . கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து , அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்.”
மேலும் மாற்கு 3 : 15 ல் ” வியாதிகளை குணமாக்கி பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும் , அவர்களை ஏற்படுத்தினார்”. என்ற வசனத்தின்மூலம் அறிய முடியும். தேவன், பிசாசுகளைத் துரத்தும் வல்லமையைத் தந்தார். நாம் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு தேவனின் வார்த்தைகளை பிரசங்கிக்கும்போது, இயல்பாகவே அற்புதங்கள் நடக்கும், சாத்தானை துரத்தலாம்.
எனவே நாம் இயேசுவின் சீடராக மாற விரும்பினால் , பிரசங்கிக்கவும், அற்புதங்கள் நடக்கவும், சாத்தானை துரத்தவும் , தேவனோடு நாம் அதிகநேரம் செலவளிப்பது அவசியமாகிறது.
மாற்கு 3 : 14 ல் “அப்பொழுது அவர் பன்னிரெண்டு பேரைத் தெரிந்து கொண்டு , அவர்கள் தம்மோடு கூட இருக்கவும் ,பிரசங்கம் பண்ணும்படியாத் தாம் அவர்களை அனுப்பவும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அப்பா பிதாவே, இந்த உலகத்திற்காக மரித்து, உமக்காகவே வாழ நீர் எங்களுக்கு உதவியதற்காக நன்றி. கிறிஸ்துவின் ஆவிக்குள் நிலைத்திருக்கவும் , எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் சீடருக்குரிய தகுதியோடு வாழ கிருபை புரியும்.
ஆமென்.
Sol.Richa Jain
