தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 22-02-2023

ரோமர் 10 : 10 வசனம்  சொல்கிறது ,

” நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.  அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்   வெட்கப்படுவதில்லை . ”

அல்லேலூயா. கர்த்தருக்கே மகிமை.

மேற்கூறிய வசனங்கள் , கர்த்தரை இருதயத்திலிருந்து விசுவாசிப்பவர்கள் ஒருபோதும் வெட்கப்படுதில்லை என்று சொல்கிறது. இதனை நாம் வேதாகமத்தின் சில வசனங்களின் வழியாக நிரூபிக்கலாம்.

நாம் யோசுவா புத்தகத்தை படிக்கும் போது இரண்டு இஸ்ரவேலர்கள் எரிக்கோ நகரத்திற்கு வேவு பார்க்க செல்கிறார்கள். விபசாரத் தொழில் புரியும் ராகாப் என்ற பெண் அவர்கள் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்தாள். இந்த இஸ்ரவேலர்கள் அவளுடைய வீட்டில் தங்குகிறார்கள்.

யோசுவா 2 : 9 – 11

” கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக் கொடுத்தாரென்றும்  உங்களைப் பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும் , உங்களைக் குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்து போனார்களென்றும் அறிவேன். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட போது , கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப் போகப் பண்ணினதையும் நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததைப்பற்றி கேள்விப்பட்டோம் . கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்து போயிற்று. உங்கள் தேவனாகிய கர்த்தரே, உயரே வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். ” 

இதில் இந்தப் பெண் ராகாப் , யெகோவா கர்த்தர் மேலுள்ள விசுவாசத்தை தன் இருதயத்தினால்  வெளிப்படுத்தி வாயினால்  அறிக்கையிடுகிறாள். கர்த்தர் இந்த தேசத்தை உங்களுக்கு கொடுத்தார்  என்று உறுதியாக நம்புவதாக அவள் சொல்லத் தொடங்கினாள். எரிக்கோவில் குடியிருக்கக்கூடிய மக்கள் அனைவரும் பயந்தார்கள். ஏனென்றால் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வரும்போது கர்த்தர் இஸ்ரவேலருக்கு முன்பாக  செங்கடலின் தண்ணீரை வற்ற வைத்தார் என்று கேள்விப்பட்டிருந்தார்கள். மேலும் யோர்தான் ஆற்றினருகில்  வாழ்ந்த இரண்டு எமோரிய ராஜாக்களை வீழ்த்தியதையும் அறிந்து எங்கள் இருதயம் உருகிற்று . உங்கள் தேவனாகிய கர்த்தர் உயர்ந்தவர் என்று அறிக்கையிடுகிறாள் . அவளுடைய இந்த அறிக்கையினால் கர்த்தர் இந்த சகோதரிக்கு ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட திருமண  வாழ்க்கையை  அளித்தார். அவர் ராகாப் மூலம் போவாஸைப் பெற்ற சாலமோனின் மனைவியாவார். மேலும் கர்த்தர் அவளை இயேசுகிறிஸ்துவின் வம்சத்தில் இணைத்தார். இந்த வழியில் கர்த்தர் அவளுடைய அவமானத்தை அழித்து அந்தப் பெண்ணுடைய பெற்றோர் , சகோதர , சகோதரிகள் எல்லாரையும் காப்பாற்றினார்.

இதுபோலவே , ரூத்தின் வாழ்க்கையிலும் அறிக்கையிடுதல்  என்ற வார்த்தையைப் பார்க்கிறோம்.

ரூத் 1 : 16 நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து , என்னோடே பேச வேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” 

அவளுடைய  விசுவாசம் மற்றும் அறிக்கையினால் மட்டுமே அவள் ஆசீர்வாதத்தைப் பெற்றாள் , திருமணத்தாலும் குழந்தைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டாள்.

புதிய ஏற்பாட்டிலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு தன் கிராமத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்த ஒரு சமாரியப் பெண்ணைப் பார்க்கிறோம். எல்லா வேத வசனங்களும் நமக்குப் போதிப்பது , நாம் நற்செய்தியை அறிவிக்கும்போது அவமானம் மற்றும் இகழ்ச்சியான வாழ்விலிருந்து  மரியாதையும் கண்ணியமும் பெறக்கூடிய ஆசீர்வாதமான வாழ்க்கை கிடைக்கும் என்பதாகும். கர்த்தர் நம்  கவலைகளையெல்லாம் எடுத்துப்போட்டு அவருடைய சந்தோஷத்தினால் நம்மை நிரப்புவார்.

மத்தேயு : 5 : 8 

” இருதயத்தில்  சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.”

மத்தேயு 6 : 33

” முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்  கொடுக்கப்படும். “

நன்றி இரக்கம் நிறைந்த தந்தையே , உமது ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் எங்களுக்குத் தேவைப்படுகிறது. எங்களை ஆசீர்வதியும்.எப்போதும் உமது நீதியைத் தேட எங்களுக்கு உதவும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தின் பெயரால் ஜெபிக்கிறேன். ஆமென்.

Sol. குஷி.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 20-02-2023

கர்த்தரோடுஇருப்போம்

கர்த்தர் யோசேப்போடு இருந்தார். (ஆதி 39:2) எனவே பரிசுத்தத்தை காத்து கொண்டான்.தன் எஜமானின் மனைவியோடு சயனிக்க இணங்காமல்.


நான் இதனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி❓ (39:9)
என்று சொல்லி தன்னுடைய வஸ்திரத்தை எஜமானனின் மனைவியின் கையில் விட்டு விட்டு தூரமாய் ஓடிப் போனான். இப்படி தைரியமாக ,மாமிச இச்சைக்கு விலக்கி, செயல்பட வைத்தது
கர்த்தர் யோசேப்போடு இருந்ததுதான். இதனித்தம்
சிறையில் வைக்கப்பட்டப் போது,
கர்த்தர் சிறையிலும் யோசேப்போடு இருந்தார். எனவே சிறையில் உள்ள கைதிகள் அனைவருக்கும் தலைவனாக இருந்து அவர்களை விசாரித்து அவர்களுக்கு உதவினான். சூழ்நிலை அவனுக்கு விரோதமாக இருந்தபோதும்
மனம் சோர்ந்து போகாமல் நன்மை செய்கிறவனாக காணப்பட்டான். இவையெல்லா வற்றிற்கும் காரணம் கர்த்தர் அவரோடு இருந்தது தான். மற்றோரு உதாரணத்தை பார்ப்போம்.


ஈசாக்கோடு கர்த்தர் இருந்தார். (ஆதி 26:28) எனவே பஞ்ச காலத்திலும் விதை விதைத்த போது நூறு மடங்கு பலனடைந்தான். மேலும் ஐஸ்வரியவனாகி வர வர விருத்தியடைந்து மகா பெரியவனானான். மேலும் எங்கெங்கு ஈசாக்கு துரவை தோண்டினானோ அங்கெல்லாம் பெலிஸ்தர் அவன் மேல் உள்ள பொறாமையினால் வாக்கு வாதம் பண்ணின போது அந்த துரவை விட்டு விட்டு வேறு இடத்துக்கு சென்றான். இப்படியாக விட்டு கொடுக்கும் மனப்பான்மை. பஞ்ச காலத்திலும் ஐஸ்வரியவனாக ஆனது எல்லாம் கர்த்தர் அவனுடன் இருந்தது நிமித்தம் உண்டானது.


அப்போஸ்தலர்கள் உடன் இயேசு கிறிஸ்து 3.5
வருடம் இருந்தார். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் போதனை செய்த தோடு தாம் செய்யும் உழியங்களை (அற்புதங்களை, அதிசயங்கள்) உடன் இருந்து கற்றுக் கொள்ள செய்தார். இயேசு பன்னிரண்டு சீஷரையும் வர வைத்து தேவனுடைய ராஜ்யத்தை குறித்து. பிரசங்கிக்கவும் பிணியாளிகளைச் சொஸ்தமாக் க வும் அனுப்பி வைத்தார். லூக் (9:2) அவர்கள் புறப்பட்டு போய் கிராமங்கள் தோறும் திரிந்து எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பினியாளிகளைக் குணமாக்கினார்கள். திரளான ஜனங்கள் இயேசுவுக்கு பின் சென்றார்கள். அவர்களை இயேசு சொஸ்தமாக்கினார். (மத் 19 : 2) எப்பொழுதும் இயேசுவிற்கு பின்னால் திரளான ஜனங்கள் சென்றார்கள். அவர்களிடம் இருந்த சகல வியாதிகளையும் சொஸ்தமாக்கினார். சொஸ்தமாகாத வியாதி ஒன்று இல்லை என்று சொல்லலாம். மேலும் இயேசு என்னை விசுவாசிகிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். (யோ 14 :12) என்று கூறினார் . அப்படியே பேதுருவின் நிழல் பட்டு அநேகர் சொஸ்தமானார்கள். பவுலின் உறமால்களும் கச்சை களும் பலரை சொஸ்தபடுத்தின.


தற்போதைய நிலை என்ன❓
இயேசுவின் சொஸ்தமாக்குகிற வல்லமை குறைந்து விட்டதா? விஞ்ஞானமும் மருத்துவமும் வளர வளர கிறிஸ்துவின் மேல் அவர்களின் விசுவாசம் குறைந்து விட்டது. எனவே தான் பல நகரங்களில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், வளரும் செயற்கை கருத்தரிக்கும் ஆஸ்பத்திரிகளும் அதிகமாகிவிட்டன. தடுக்கி விழுந்த இடமெல்லாம் மருந்து விற்பனை நிலையங்கள் .நிலமை மாறவேண்டும்.


AOJக்கு வெளிபடுத்தப்பட்ட அணிச் சபைகளில் அநேகர் சொஸ்தமாகிறார்கள். பிசாசுகள் துரத்தப்படுகின்றன. நானும் தேனாம்பேட்டை பகுதி அணிச் சபை பொறுப்பாளராக இருந்த வீ. பெனாவின் சாமுவேலும் அணிச்சபை நடத்தினர். 2 வது வாரத்தில் நம் ஒவ்வொருவரும் ஜெபத்தின் மூலம் வியாதிகளை சொஸ்தமாக்க முடியும் என்பதை தேவ வசனங்கள் மூலம் விளக்கினார். பின்பு ஜெப நேரத்தில் வியாதியஸ்தர்களை ஜெபிப்பதற்கு அழைத்தோம் . அப்போது சுமார் பத்து வயது உள்ள சிறுவன் பிறந்தது முதல் கால்களை மடக்கி உட்கார முடியாது. அவனுக்காக எல்லோரும் ஜெபித்தபோது அவன் உடனே சுகத்தை பெற்றான். எல்லோர் முன்பும் உட்கார்ந்து காண்பித்தான். தேவனுக்கு மகிமை.


ஜெபம்


அன்புள்ள பரலோக தகப்பனே | கர்த்தர் மனிதர்களோடு இருப்பதனால் அவர்கள் பரிசுத்தமாக வாழவும் மாமிச இச்சைகளை மேற்கொள்ளவும், பஞ்ச காலத்திலும் ஐஸ்வர்யராக முடியும் என்பதை அறிந்தோம். மேலும் உன் மகனாகிய இயேசு கிறிஸ்து மூலம் வியாதிகளை சொஸ்தமாக்கவும் பிசாசுகளை துரத்தவும் முடியும் என்று அறிந்தோம் .எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து வியாதியஸ்தர் கள் சொஸ்தமாக்கவும் தேவனுடைய ராஜ்யத்தை இங்கு கொண்டுவரவும் கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


Sol. Mohanasundaram.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 19-02-2023

” உங்கள்மேல் மனுஷரையும் மிருக ஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன், பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன், அதினால் நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள்.”

எசேக்கியல் 36 : 11

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு நோக்கம் உண்டு. நம் விசுவாசம் விரிவடையும் போது கர்த்தர் நமது வளர்ச்சி, செழிப்பு , மற்றும் அமைதிக்கான விதையைப் பெருக்குவார். மேலே உள்ள வசனம் ஒரு அற்புதமான வாக்குறுதி. இங்கே கர்த்தர் , நாம் பெருகுவோம், நீடித்திருப்போம்,  பலனடைவோம் என்பதற்கு உறுதியளிக்கிறார். அவர் நம் எண்ணிக்கையையும் பலத்தையும் பெருக்குவார். அவர் நம் உதடுகளின் பலனையும் , நம் கர்ப்பத்தின் கனியையும் நமது ஆவியின் கனிகளையும் உழைப்பின்  பலனையும் பெருக்குவார்.

சங்கீதம் 115 : 14 ” கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுவார்.”

 மேற் கூறிய வசனம் , நம்முடைய விசுவாசத்தின்  ஆரம்பத்தில் கர்த்தருடன் நடப்பதைவிட , இப்போது கர்த்தர் நமக்குச் சிறப்பாக செய்வார் என்று உறுதியளிக்கிறது. கர்த்தர் நாம்  எதிர்பார்த்ததைவிட எதிர்காலத்திலும் நித்தியத்திலும் நமக்காக சிறந்த ஒன்றை ஒதுக்கி வைத்திருக்கிறார் . அவர் நமக்கு பிந்தைய மழையையும்  அவருடைய இரக்கத்தையும் அன்பையும் காலைப்பனிபோலவும் அனுப்புவார்.

யோவேல் 2 : 23 சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறுங்கள், அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து , உங்களுக்கு முன்மாரியையும் பின்பாரியையும் ஏற்கெனவே வருஷிக்கப் பண்ணுவார். “

கர்த்தரை நாம் மிக நெருக்கமாக அறிவோம் ,  அவரைச் சார்ந்திருக்கும் போது  அவரை அன்பு செய்வதும் அதிகரிக்கும்.

மகிழ்ச்சி, அமைதி, வளம், ஆரோக்கியம், ஞானம், செல்வாக்கு, பலம் மற்றும் இரக்கம் எல்லாமே மற்றவர்களிடமிருந்து அல்ல கர்த்தரிடமிருந்து மட்டுமே வரும். இவை எல்லாமே அதிகரிக்கும்.

நம்முடைய சவால்களை எதிர்கொள்ள நம்மை பலப்படுத்தி நம்முடைய வேலைகளை ஸ்தாபிக்கிறார். அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்ட நாம் , கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்த வேண்டும்.

யாக்கோபு 4 : 10

” கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுத்துங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.”

பெருமையைத் தவிர்ப்பதற்கும் , நமக்கு  ஏற்படுகின்ற  சலனங்களைத் தோற்கடித்து நம்மை மகிமைக்கு நேராக உயர்த்தவும்  , இது மட்டுமே நமக்கு வழியாகும்.

யோவான் 3 : 30 ” அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். “

நாம் பிரமிக்கத்தக்க வகையிலும் , அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறோம்.

சங்கீதம் 139 : 14 ” நாம் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் , உம்மைத் துதிப்பேன், உமது கிரியைகள் அதிசயமானவைகள் , அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். “

கலாத்தியர் 5 : 22

” ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம் , சமாதானம், நீடிய பொறுமை, தயவு , நற்குணம், விசுவாசம், ” இந்த ஆவியின் ஏழு குணங்களும் நம்முடைய தார்மீக, சமூக, தனிப்பட்ட மற்றும் ஆவிக்குரிய மேன்மையின் அடிப்படையாகும். அத்தகைய பலனைத் தருவதற்கும் அதை அதிகரிப்பதற்கும் நாம் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். அவருடைய வசனங்கள் நிறைய பலன்களைத் தருவதற்கும் சாத்தானிடமிருந்து பாதுகாப்பை தருவதற்கும் நம்மை உத்வேகப்படுத்துகிறது.

வாக்குறுதிகள் நிறைவேறும்  வரை நாம் காத்திருக்காமல்,  நன்றியறிதல்களாலும்,   அவருடைய மகிமையைக் குறித்த துதித்தல்களாலும்  ஆராதித்தல்களாலும் நம் இருதயத்தை நிரப்ப வேண்டும் . இரண்டாவது முறை நமக்கு  இன்னல்கள் வருவதை கர்த்தர் அனுமதிக்க மாட்டார்.

” அவர் சர்வசங்காரம் பண்ணுவார், இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. ”  நாம் சகிப்பதற்கு பல சிரமங்கள் இருக்கலாம். பல சவால்களை சமாளிக்கலாம். ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் நமக்கு வாக்களித்ததை செய்ய வல்லவர் என்பதில் நாம் எப்போதும்  நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

நாகூம் 1 : 9

கர்த்தர்தாமே நம்மில் குடியிருக்கும்போது , அவர் நம்முடைய தனிப்பட்ட நேரத்தில் நம்முடன் பேசிய வார்த்தைகள் நம்மை நிரப்பும் என்பதை உறுதியுடன் நம்ப வேண்டும் . அவரே நம்முடைய வெற்றிக்கும் பாதுகாப்பிற்கும் ஆதாரம்.

எங்கள் பரலோகத் தந்தையே, எங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிளையும் உயர்த்தப் போகிறீர் என்ற  உம்முடைய வாக்குறுதியைப் பெறுகிறோம் என்று விசுவசிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நன்றி கூறுகிறோம் . ஆமென்

Sol. ஜிஜி ஜேக்கப்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-02-2023

கர்த்தர் உன்னுடன் செல்வார்.

உபாகமம் 31 : 6 ” நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார் , அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை. “


மோசே மேலும் யோசுவாவைப் பார்த்து, கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த தேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதால் அவர் பலமாகவும் , தைரியமாகவும் , உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். கர்த்தர் ஒருபோதும் அவரை தோல்வி அடையச் செய்யவோ கைவிட மாட்டார் என்றும் அவரை வெற்றிக்கு அழைத்துச் செல்ல கர்த்தர் அவருடன் செல்வார் என்றும் உறுதியளித்தார். கர்த்தர் இன்றும் உங்களுக்கும் எனக்கும் இதே உறுதியை அளிக்கிறார்.

நாம் செல்லும் இடமெல்லாம் கர்த்தர் வழியை ஆயத்தம் செய்ய நம்முன்னே செல்கிறார் என்பது தெரியவருவது நமக்கு ஆறுதலான விஷயம். என்ன சூழ்நிலையாக இருப்பினும் நமக்கு முன்னே செல்வதாக கர்த்தர் வாக்கு தருகிறார். உங்களுக்கு நீதிமன்ற வழக்கு வந்தால் , நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் செல்வதற்கு முன்னே நீதிமன்றத்திற்கு கர்த்தர் சென்றிருப்பார். அல்லது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கும் உங்கள் முதலாளிக்கும் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் , கர்த்தருடைய வசனங்களை நம்புங்கள். உங்களுக்குச் சாதகமானதை செய்வார் . மேலும் அதற்குரிய நேரம் வரும்போது அன்பான வழிகளில் சரியான வார்த்தைகளை பேசவும் வைப்பார்.

நீங்கள் எங்கெங்கு சென்றாலும் என்னென்ன சூழ்நிலைகள் வந்தாலும் உங்களுக்கு முன்பாகச் சென்று பாதைகளை செம்மைப்படுத்த கர்த்தரிடம் கேளுங்கள். அவர் செய்வார். பின்பு நீங்கள் செய்யவேண்டியது அதைப்பின்பற்றுவது தான்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் முன்வைக்கப்படுகின்றன. நம் எண்ணங்களை மாமிசத்தினால் அல்ல ஆவியினால் எண்ணங்களால் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். நம்முடைய சரீரம் சார்ந்த எண்ணங்கள் எந்தவித முயற்சியும் இல்லாமலே தவறான சிந்தனைகளை சுதந்திரமாக பயிற்சி செய்கிறது. மறுபுறம் நாம் கண்டிப்பாக சரியான எண்ணங்களை சிந்திப்பதை தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக கர்த்தரிடம் நாம் ஒருமித்த எண்ணம் கொண்டவர்களாக இருக்க முடிவு செய்த பிறகு தொடர்ந்து சரியான சிந்தனைகளை தேர்வு செய்வது அவசியம்.

நம் எண்ணங்களுடன் போர் புரிவது கடினமானது என்று உணரத் தொடங்கும் போது ,நாம் விரும்பாததை செய்ய போகிறோம் என்ற எண்ணம் வரும்போது எஎல்லா எதிர்மறையான எண்ணங்களை களைய வேண்டும். நாம் இதை செய்யப்போகிறோம் , இந்த காரியத்தை விட்டு பின்வாங்க மாட்டேன் என்று தீர்மானிக்க வேண்டும். நாம் சந்தேகத்தாலும் பயத்தாலும் தாக்கப்படும் போது , நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன், கர்த்தர் என்னுடன் இருக்கிறார் , அவர் என்னை அன்பு செய்கிறார் மற்றும் எனக்கு உதவி செய்கிறார் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் வாழ்நாள் முழுவதும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.
உபாகமம் 30 : 19 ல்
” நான் ஜீவனையும் மரணத்தையும் , ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன், ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படி க்கு, நீ ஜீவனைத் தெரிந்து கொண்டு ” என்று வாசிக்கிறோம். கர்த்தர் தம்முடைய மக்களை வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்படி அவர்களுக்கு முன் வைத்ததாக கூறுகிறார்.
நீதிமொழிகள் 18 : 21 ம் வசனமும் மமரணத்தையோ அல்லது வாழ்வையோதெரிந்தெடுங்கள் என்று சொல் கிறது.
” மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும் அதில் பிரியப்படுபவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். “

நம்முடைய எண்ணங்களே வார்த்தைகளாக மாறுகிறது. எனவே வாழ்வு தரும் எண்ணங்களை நாம் தேர்வு செய்வது முக்கியமானது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் கர்த்தரை நம்ப வேண்டும். ஆமென்.

Sol. கமல்.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 17-02-2023

நூற்றுவர் தலைவனும் அவனது விசுவாசமும்.

  ” இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு , திரும்பி, தமக்கு பின் செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி;இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். “

லூக்கா 7 : 9

இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட கர்த்தர், ரோமானிய படைவீரர்களின் தலைவனாகிய புறஜாதிக்காரனாகிய  நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தைக் கண்டு  வியந்து ஆச்சரியமடைந்தார். நாம் வேதாகமத்தில் நிறைய நிகழ்வுகள் பார்த்த போதிலும் அங்கே விசுவாசத்தின் காரணமாக இயேசுவிடமிருந்து குணம் பெறுவதை காண்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் மிகவும் அசாதாரணமான ஒன்று என்ன தெரியுமா?

நூற்றுவர் தலைவன் மிக அதிகாரம் படைத்தவர் , அதிக வல்லமை படைத்தவர், செல்வந்தர் மற்றும் செல்வாக்கு மிக்கவர். தம்முடைய வேலைக்காரனின் பலவீனமான நிலையை அவர் எப்படி கவனித்து அவர் குணமாக வேண்டும் என்று விரும்பினார் என்பதைக் காண்கிறோம் . அவர், இயேசு இஸ்ரேலில் எப்படி குணப்படுத்துகிறார் , எவ்வாறு அற்புதங்கள் செய்கிறார் , என்பதை கேள்விப்பட மட்டுமே செய்திருந்தார். மேலும் அவர் இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு வல்லமையான அதிகாரம் இருக்கிறது என்று நம்பினார். அவரை ஏற்றுக் கொண்டார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இயேசுவை தன்னிடம் வரும்படி கட்டளையிட்டிருக்கலாம். ஆனால் அவர் தம்மை மிகவும் தாழ்த்தினார். இயேசுவைப் பார்ப்பதற்கு அவருடைய தகுதி போதும் என்று அவர் எண்ணவில்லை. ஆனால் இஸ்ரேலில் உள்ள மதிக்கப்படக்கூடிய  தலைவர்களிடம் அவருக்காக பேசும்படி கேட்டார். (எசாயா 49 : 7

நீதிமொழிகள் 15 : 33 ” கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்: மேன்மைக்கு முன்னானது தாழ்மை.”

மத்தேயு 18 : 4 ” ஆகையால் இந்த  பிள்ளையைப் போலத் தன்னை  தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்”

மேலும் அவன் இயேசு அவ்வழியே வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து குழப்படைந்து ,  என்னுடைய இடத்திலே  இயேசுவை வரவேற்க நான் தகுதியானவன் தானா? என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான். அவன் முழுவதும் தன்னை வெறுமையாக்கி  அவருடைய வார்த்தையால் மட்டுமே குணமாக்க முடியும் என்பதை உணர்ந்து , அவனுடைய வேலைக்காரனை குணமாக்கச்  சொல்லும்படி கேட்டுக் கொள்ள தன் நண்பர்களை அனுப்பினான்.

 சங்கீதம் 107 : 20 ” அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். ” 

அவன் இயேசுவின் அதிகாரத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டினான். மேலும் இயேசுவை தன்னுடைய இடத்திற்கு அழைத்து வர தகுதியில்லை என்றும் எண்ணினான்.   கர்த்தருடைய தயவைப் பெறுவதற்கு நாம்  எதைக் குறித்து பெருமை பாராட்ட முடியும்? ஒன்றுமில்லை. அவருடைய கிருபையைத் தவிர வேறெதுவும் நம்மைக் காப்பாற்ற முடியாது. அதுதான் நாம் பெருமை பாராட்டக்கூடிய விஷயம்.

கர்த்தர் மீதான நம்பிக்கை என்பது நமது செயல்களால் காட்டப்பட வேண்டும்.

யாக்கோபு 2 : 26

” அப்படியே  ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போல , கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. “

புறஜாதிக்காரனாகிய நூற்றுவர் தலைவன் இயேசுவின் தெய்வீக அதிகாரத்தையும் அவருடைய வார்த்தையின் வல்லமையையும் ஒப்புக் கொண்டு மிகப் பெரிய விசுவாசத்தை வெளிப்படுத்தினான். கர்த்தருடைய ராஜ்யத்தில் யூதரென்றோ, புறஜாதிக்காரன் என்றோ இல்லை. இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் எல்லோரும் ஒருவரே.

கலாத்தியர் 3 : 28

” யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். “

எபேசியர் 3 : 12 ” அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. “

பரலோகத் தந்தையே, எங்களை முழுமையாக தாழ்த்தவும் நாங்கள் ஒன்றுமேயில்லை, உம்மைக்குறித்து மட்டுமே பெருமைப்படவும் இயேசுகிறிஸ்துவின் தியாகத்தின் வழியாக  எங்களை உமது மகனாக மகளாக தெரிந்துகொண்டதை ஏற்றுக் கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்யும். நூற்றுவர் தலைவன் அனைவருக்குமுன் காட்டிய அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தவும் உலகம் முழுவதும் நற்செய்தியை அறிவிக்கவும் எங்களுக்கு உதவி செய்யும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

 Sol. நேகா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 16-02-2023

இயேசுவும் அவருடைய இரவுப் பார்வையாளரும்.

கர்த்தர் உலகத்தை மிகவும் நேசித்தார். அவர் தம்முடைய ஒரே குமாரனைப் கொடுத்துஇருக்கிறார். அதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.
யோவான் 3 : 16


தேவன் , தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜுவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். “

பரிசேயரும் இஸ்ரவேலின் பெரிய போதகருமான நிக்கோதேமஸ் என்பவர் இரவு நேரத்தில் இயேசுவிடம் வந்து ” ரபி நீர் கடவுளால் அனுப்பப்பட்ட போதகர் என்பதை நாங்கள் அறிவோம் . நீங்கள் செய்யும் அற்புதங்களை கர்த்தர் உங்களுடன் இல்லாவிட்டால் யாராலும் செயாய முடியாது என்று கூறினார்.

அதற்கு இயேசு , ஒருவன் மறுபடி பிறக்காதவரை தேவனுடைய ராஜ்யத்தை பார்க்க முடியாது என்றார். நிக்கோதெமஸ் திகைத்துபோனார். ஒரு வளர்ந்த மனிதன் எப்படி பிறக்க முடியும் ? அவர் நிச்சயமாக தனது தாயின் வயிற்றில் நுழைந்து இரண்டாவது பிறக்க முடியுமா?


இயேசு அவருக்குப் பல இரகசியங்களைப் போதித்தார்.

1 . ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறக்காதவரை ஒருவரும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது.

2 . ஒரு நபர் மனித பெற்றோரால் உடல் ரீதியாகப் பிறப்பார். ஆனால் அவர் ஆவியால் ஆன்மீக ரீதியில் பிறப்பார்.

3 . நீங்கள் அனைவரும் மீண்டும் பிறக்க வேண்டும் . காறறு வீசும் போது அதன் ஒலி கேட்கிறது. ஆனாலும் அது எங்கிருந்து வருகிறது ? எங்கு செல்கிறது ? என்பது தெரியவில்லை. ஆவியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்படித்தான்.

4 . பரலோகத்திலிருந்து இறங்கி வந்த மனுஷகுமாரனைத் தவிர வேறு யாரும் பரலோகத்திற்கு ஏறியதில்லை.

5 . மோசே வெண்கலப் பாம்பை வனாந்தரத்தில் ஒரு கம்பத்தில் உயர்த்தியது போல மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும். அதனால் அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.

6 . தேவன் தம்முடைய குமாரனை இவ்வுலகிற்கு வெறுமனே அனுப்பாமல் நமக்கு இரட்சகராக இருக்கவே அனுப்பினார் . குமாரனை விசுவாசிக்கிறவன் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. ஆனால் விசுவாசிக்காதவன் தேவனுடைய குமாரனை விசுவாசிக்காதபடியினால் அவன் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப் பட்டிருக்கிறான்.

7 . வெளிச்சம் உலகில் வந்தது. ஆனால் மக்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களின் செயல்கள் தீயவை. ஆனால் எவரொருவர் எப்போதும் உண்மையான செயல்களை செய்கிறாரோ , அவர் கர்த்தருக்கு கீழ்படிவதன் மூலம் வெளிச்சத்திற்கு வருகிறார்.


இயேசு இரவுநேரங்களில் ஜெபித்தார். கர்த்தர் அவரை வழிநடத்தினார் , மற்றும் அவருக்கு பலம் கொடுத்தார்.

ஜெபம்
தந்தையே இரவும் பகலும் பலர் உங்களிடத்தில் வரட்டும். அவர்களை உங்கள் அன்பாலும் ஒளியாலும் நிரப்புங்கள். ஆமென்.

Sol. விக்டிமிதிலா.

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 15-02-2023

ஆராதனை என்பது நம்மை ஒப்புக்கொடுத்தல்


ஆராதனை என்பது நம்மை ஒப்புக்கொடுத்தல், நம்மை ஒப்புக்கொடுப்பது என்பது ஆராதனையாகும். கிறிஸ்துவின் மனம் தியாகம். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் 2:5ல் கிறிஸ்து இயேசுவில் இருந்த இந்த மனம் உங்களுக்குள்ளும் இருக்கட்டும் என்று கூறுகிறார்:

இயேசு எப்பொழுதும் தம்முடைய பிதாவாகிய தேவனுடைய சிந்தையை உடையவராய் இருந்தார், அதேபோல் நாமும் கிறிஸ்துவின் சிந்தையை வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறோம். ஆம் உண்மையிலேயே கிறிஸ்துவின் மனம் தியாகம்.

பிலிப்பியர் 2:7-8 வசனங்களைப் பாருங்கள், ஆனால் அவர் தன்னைப் புகழ்ச்சியடையாமல், ஒரு வேலைக்காரனின் வடிவத்தை எடுத்து, மனித சாயலில் தோன்றினார்: அவர் ஒரு மனிதனாகக் காணப்பட்டார், அவர் தன்னைத் தாழ்த்தினார். மற்றும் மரணம் வரை, சிலுவையின் மரணம் வரை கீழ்ப்படிந்தார்.


கிறிஸ்துவின் மனதை நாம் மிகத் தெளிவாகக் காண்கிறோம், அவர் தன்னை எந்தப் புகழும் பெறவில்லை, அதாவது அவர் தன்னை முற்றிலும் பூஜ்ஜியமாக கருதினார். எந்த மனதை உடையவராய் இருந்தார்பிலிப்பியர் 2:6 வசனம் கூறுகிறது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாகஎண்ணவில்லை.

அவர் கடவுள், மனித வடிவத்தில் கடவுளுக்கு சமமான கொள்ளை என்று நினைக்கவில்லை. அவர் கடவுளின் வடிவத்தில் இருந்தாலும், அவர் தன்னைத் தாழ்த்தி, கடவுளுக்குக் கீழ்ப்படிந்த ஊழியராக மரணம் வரை தனது வாழ்க்கையைத் தியாகம் செய்தார். பூமியில் இருந்தபோது சிலுவை அவரது அன்றாட ஆர்வமாக இருந்தது, ஏனெனில் அவர் தனது தந்தையான கடவுளுக்கு ஒரு இனிமையான மணம் கொண்ட பலியாக தினமும் வளர்ந்தார். ஆகையால், அவர் தனது தந்தையான கடவுளிடம் வரும்போதெல்லாம், அவர் தம்முடைய ஆராதனையாகத் தம் உயிரை ஒரு உயிருள்ள பலியாகக் கொடுத்தார்.


பரலோகத்திலுள்ள பிதாவாகிய தேவனை நோக்கிய அவருடைய பாதையைப் பின்பற்றுவதற்கு, அவர் ஒரு பரிபூரணமான ஜீவனுள்ள தேவனுடைய தியாக ஆட்டுக்குட்டியாக இருந்தார் என்பதை நற்செய்தியின் மூலம் பார்க்கிறோம். என் தந்தையின் விருப்பத்தை நான் செய்கிறேன் என்று அவர் எப்போதும் கூறி வந்தார்.

ஆதலால், பிலிப்பியர் 2:9-11ல் நாம் பார்க்கிறபடி, தேவன் அவரைத் தம்முடைய வலதுகரம்வரை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினார், ஆகையால் தேவனும் அவரை மிகவும் உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான ஒரு பெயரை அவருக்குக் கொடுத்தார்: இயேசுவின் நாமத்தினாலே ஒவ்வொரு முழங்காலுக்கும் வணங்க வேண்டும், பரலோகத்தில் உள்ளவை, பூமியில் உள்ளவை, பூமிக்குக் கீழே உள்ளவை; மேலும், பிதாவாகிய கடவுளின் மகிமைக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்பதை ஒவ்வொரு நாவும் ஒப்புக்கொள்ள வேண்டும்.


ஆகவே அன்பான சகோதர சகோதரிகளே, 2 தீமோத்தேயு 2:21ல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவது போல, கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கும் எல்லாவற்றிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வோம். அப்பொழுது நாம் கனத்திற்குரிய பாத்திரமாக பரிசுத்தமாக நம் தேவனின் பயன்பாட்டிற்காக ஆயத்தமாக்க பட்டு பயன்படுவோம்
பிதாவாகிய தேவனுக்கும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஸ்தோத்திரம்.

சோல். பிரான்சிஸ் கோவா

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 14-02-2023

” என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. “

சங்கீதம் 103 :1


நாம் எல்லோரும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். காரணம் நமது கர்த்தர் இரக்கமும், கருணையும் , கோபத்தில் தாமதப்படுபவராகவும் , அன்பு நிறைந்தவராகவும் இருக்கிறார். அவர் எல்லா நன்மைகளாலும் நம்மை திருப்திப்படுத்துகிறார். கழுகைப் போல நம் இளமையை புதுப்பிக்கிறார்.

இரு மாதங்களுக்கு முன்பு மதிய உணவு சாப்பிடும்போது உணவு ஒவ்வாமை காரணமாக கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு வாயின் வழியாக சுவாசிக்க கடினமாக இருந்தது. நான் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு என் குடும்ப உறுப்பினர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாமலிருக்க சாப்பாட்டு மேசையைவிட்டு வேகமாக வெளியேறினேன். நான் என் அறைக்குச் சென்று முற்றிலும் உதவியற்ற அந்த நிலையில் கர்த்தரிடத்தில் ஜெபித்தேன்.


சங்கீதம் 118 : 7 ” கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், என் சத்துருக்களின் சரிக்கட்டுதலைக் காண்பேன். ” என்ற வசனத்தை பரிசுத்த ஆவியானவர் வாக்குறுதியாக தந்தார். அதன்படியே நான் சாக மாட்டேன், ஆனால் வாழ்ந்து கர்த்தருடைய செயல்களை அறிவிப்பேன் என்று கூறினேன்.


யோவான் 10 :10
“திருடன்
திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் , அது பரிபூரணப்படவும் வந்தேன். ”
இந்த வாக்குத்தத்த வசனங்கள் , நாம் வாழவும் , நிறைவான வாழ்வு வாழவும் கர்த்தர் விரும்புகிறார் என்று கூறுகின்றன. எனவே நான் அதை பெற்றுக் கொள்ள வேண்டி ஜெபித்தேன். சில நிமிடங்களுக்குள் , சுவாசக்குழாய் வீக்கம் குறைந்து என்னால் சகஜமாக சுவாசிக்க முடிந்தது. அல்லேலூயா. கர்த்தருக்கே மகிமை.

நம்மை பலப்படுத்துகின்ற , உதவுகின்ற, தம்முடைய நீதியினால் தாங்குகின்ற அற்புதமான வல்லமைமிக்க கர்த்தரை நாம் கொண்டிருக்கிறோம்.
எசாயா 41 : 40 ” நீ யப்படாதே , நான் உன்னுடனே இருக்கிறேன். திகையாதே நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் , என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”

அந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்தினர் ஏதோ சரியில்லை என உணர்ந்து என் அறைக்கு வந்தனர். அப்போது நான் ஒவ்வாமைக்கான மருந்து எடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்தால் நான் நிவாரணம் பெற 20 – 30 நிமிடங்கள் ஆகியிருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. இரண்டாவது , சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் முடிவு நன்றாக இருந்திருக்காது. என் குடும்பத்தினர் என்னைச்சுற்றி இருந்தாலும் உதவியற்ற நிலையில் தான் இருந்தேன்.
சங்கீதம் 60 : 11 – 12
” இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும், மனுஷனுடைய உதவி விருதா. தேவனாலே பராக்கிரமம் செய்வோம் , அவரே எங்கள் சத்ருக்களை மிதித்துப் போடுவார்.
ரோமர் 8 : 31 ” தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் , நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? “
எசாயா 54 : 17 ” உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.”
மிக ஆச்சரியமான அற்புதத்தை என் வாழ்வில் செய்தார். நான் எந்த மருந்தும் எடுக்கவில்லை. எந்த மருத்துவரையும் கூட சந்திக்கவில்லை. கர்த்தருடைய வசனம் என்னை குணமாக்கி காப்பாற்றியது. இவ்வளவு வல்லமையான அற்புதமான கர்த்தர் நமக்கு இருக்கிறார். அவர் நம்மிடம் கேட்கிறார், ” நானே கர்த்தர், எல்லா மனிதகுலத்துக்கும் நானே கர்த்தர். எனக்கு ஏதாவது கடினமாக இருக்குமா? “

ஆம். கர்த்தாவே உமக்கு எதுவுமே கடினமானது அல்ல. உம் வழியாக உம்மால் மட்டுமே சாத்தியமாகும். ஆமென்.

நாம் நம்முடைய ஜெபங்களில் வாக்குத்தத்த வசனங்களை பெற்றுக் கொண்டால் , அது நமது ஜெபத்தை வல்லமையாக்கும்.
எபேசியர் 6 : 17 ” தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

நான் பயந்து உதவியற்ற நிலையிலிருந்தபோது பரிசுத்த ஆவியானவர் எனது சிந்தனையில் எல்லா அதிசயமான, வல்லமையுள்ள வாக்குத்தத்த வசனங்களைத் தந்தார் . என்னால் ஜெபிக்க முடியாத, சரியாக பேச முடியாத நிலையிலும் , இந்த வாக்குத்தத்த வசனங்களை பெற்றேன். சர்வவல்ல கர்த்தர் உடனடியாக என்னை குணப்படுத்தினார். அத்தகைய அன்பான கருணை.

எனவே கர்த்தருடைய வார்த்தையான வேதாகமத்தை படிப்பது அவசியம் . ஏனென்றால் நாம் கர்த்தருடைய வார்த்தையை படித்து தெரிந்து கொள்ளாவிட்டால் , அவருடைய சித்தத்தின்படி எப்படி ஜெபிக்க முடியும்.? நாம் வசனங்களை படித்து தியானிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் இந்த அழகான வாக்குத்தத்த வசனங்களின் வழியாக நம்முடன் பேசுகிறார். ஏனென்றால் யோவான் 14 : 26 ல் இயேசு இவ்வாறு கூறுகிறார். ” என் நாமத்தினாலே பிதா ஆனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து , நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். “

ஜெபம்


அன்பின் பரலோகத் தந்தையே, நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மை நம்புகிறோம். நாங்கள் எங்கள் சொந்தபுரிதலில் சாய்ந்து கொள்ள மாட்டோம். எங்கள் எல்லா வழிகளிலும் உம்மை ஏற்றுக் கொள்ளுவோம். எங்கள் பாதைகளை நேராக்குவீர். ஆம் , கர்த்தாவே , நாங்கள் எதற்கும் கவலைப்பட மாட்டோம். எல்லாவற்றிற்கும் நன்றியுடன் ஜெபிப்போம். மனித புரிதலைக் கடந்த உம்முடைய சமாதானம் எங்களுக்கு வந்து ,எங்கள் இருதயத்தையும் எண்ணங்களையும் காத்து கிறிஸ்துவுக்குள் வாழ கிருபை புரியும்.

Sol. ரும்னா

 நிழல் பாராளு மன்ற  கூட்டத்திற்காக ஜெபம்

     4, மார்ச் ,2023 , ராஜபாளையத்தில் நடை பெற இருக்கும்  தமிழ் நாடு 

                                       ஜெபக்கருத்துகள் 

1. இக்கூட்டம் பரிசுத்த ஆவியானவரால் இயக்கப்பட

2. இந்த இடத்தில் வான்வெளியில் சுற்றி திரியும்  சகல அந்தகார சக்திகளின் கிரிகைகளும் இயேசுகிறிஸ்துவின் திரு நாமத்தினால் கட்டி அழிக்கப்பட

3. கூட்டத்திற்கு வர வேண்டிய எல்லோரும் தவறாமல் வந்து சேர

4.  பயண பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்க

5. நிகழ்ச்சி நிரல் கர்த்தரின் விருப்பப்படி அமைக்கப்பட

6. ஒவ்வொரு நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களும் மிகுந்த  கவனத்துடன் செயல்பட 

7.இயேசுவின் திரு நாமம்  உயர்த்தப்பட

8. கூட்டம் முழுவதும்  தேவனின்  மகிமையை பறை சாற்ற 

9. தங்கும் இடம் , உணவு,முதலிய  அனைத்தும்  கர்த்தரால் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட

10.ஒவ்வொருவரின் சிந்தனை , சொல், செயல் களும் பரிசுத்த ஆவியானவரால்  ஆட்கொள்ளப்பட

11.ஆராதனையும் ஜெபங்களும் தூப கலசங்களில்  போடப்பட்டு  தேவ தூதர்களால் பரலோக திருப்பீடத்துக்கு எடுத்துச்  செல்லப்பட

12. திருப்பீடத்தின்  நெருப்பு அதில் போடப்பட்டு நறுமணபுகையாக தேவசன்னிதியில் எழும்ப

13.பங்கு பெறுவோரிடையை ஒருமனப்படு விளங்க

14. மன்றம் முழுவதும் தேவ பிரசன்னத்தால் மூடப்பட

15. பங்கு பெறுவோர் ,உதவியாளர்கள், ஜெபவீர்ர்கள் அனைவரும் தேவ ஆவியால் ஆட்கொள்ளப்பட

16. தீர்மானங்கள் தேவனின் ஏவுதலின் படி எடுக்கப்படவும் நுணுக்கமாய்

நிறை வேற்றப்படவும்.

17.இக்கூட்டத்தின் விளைவாக  தமிழகத்திலும் ,இந்திய தேசத்திலும் பெரிய எழுப்புதல் ஏற்பட

18. எங்கும் சுவிசேஷ விதைகள் தெளிக்கப்பட

19. பங்கு பெறுவோர் குடும்பங்களின்  பாதுகாப்பு ஆசீர்வாதங்களுக்காக 

20. சகலமும் கர்த்தருக்குள் நிறைவாய் இருக்கும் படி

தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 13-02-2023

" இதோ, நான் வாசலில் நின்று தட்டுகிறேன்,யாராவது என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் அவனிடம் வந்து அவனோடும் , அவன் என்னோடும் உணவருந்துவான். "

வெளிப்படுத்தின விசேஷம் : 3 : 20


வேதாகமத்தில் மகவும் பரிச்சயமான வசனம் இது. இதில் நம்முடைய கர்த்தர் கதவுக்கு வெளியே நின்று கதவைத் தட்டுகிறார். அவர் கதவை தள்ளவும் இல்லை. திறப்பதற்காக உடைக்கவுமில்லை. அவர் உங்கள் இருதயம் என்னும் கதவை மெதுவாகத் தட்டுகிறார். நீங்கள் அவரை உள்ளே விட்டால் அவர் உங்களுடனும் நீங்கள் அவருடனும் உணவருந்துவீர்கள்.

எசாயா 45 : 1- 2
” கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து , அவன் வலது கையை பிடித்துக் கொண்டு அவனுக்குச் சொல்கிறதாவது ; நான் உனக்கு முன்னே போய் , கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.” இந்த அதிகாரத்தில் இதற்கு பின் பகுதியில் இதே இயேசு , ” நான் உனக்கு முன்பாகச் சென்று வெண்கலக் கதவுகளை உடைத்து இரும்பு தாழ்ப்பாளை முறித்து ” என்று சொல்கிறார். கர்த்தர் உங்களுடைய வீட்டில் மெதுவாகத் தட்டுகிறார், ஆனால் உங்களுடைய எதிரிகளின் கதவை , அது எந்த உலோகத்தினால் இருந்தாலும் , எந்த அளவில் இருந்தாலும் அவற்றை உங்களுக்காக உடைப்பார். அது உங்களுக்கான அவரது செயல்பாடு.

சங்கீதம் 24 : 7 சொல்கிறது
” வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் , அநாதி கதவுகளே, உயருங்கள் , மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். ” மகிமையின் ராஜா உள்ளே வரும்போது , தட்டுவதும் உடைப்பதும் வெட்டுவதும் தேவையில்லை. ஒவ்வொரு கதவும் அவருக்கு முன்பாக எழுந்து நிற்கிறது. அல்லேலூயா!!. இந்த மகிமையின் ராஜா வலிமையானவர். போரில் வல்லவர். படைகளின் ஆண்டவர்.
நியாதிபதிகள் 16 : 3
” சிம்சோன் நடுராத்திரி மட்டும் படுத்திருந்து , நடுராத்திரியில் எழுந்து , பட்டணத்து வாசல் கதவுகளையும் அதன் இரண்டு நிலைகளையும் பிடித்து , தாழ்ப்பாளோடே கூடப் பெயர்த்து தன் தோளின்மேல் வைத்து , எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்கு சுமந்து கொண்டு போனான். ” காசாவில் சிம்சோன் விபச்சாரியுடன் தங்கியிருந்த போது பெலிஸ்தியர்களின் பிரபுக்கள் அவரைப் பிடிக்க காத்திருந்தனர். ஆனால் நள்ளிரவில் சிம்சோன் நகரத்தின் வாயில் , நுழைவாயில்கள் , தடைகள் எல்லாவற்றையும் அகற்றினான். இது ஈடு இணையற்றது. அவர் அதை அங்கே எறியவில்லை , ஆனால் கடல் மட்டத்திலிருந்து 100 அடி உயரத்திலுள்ள காசாவிலிருந்து 36 மைல் மற்றும் 3300 அடி உயரமுள்ள ஹெப்ரோனுக்கு கொண்டு சென்றார். கர்த்தரின் வல்லமையால் மட்டுமே ஒரு மனிதனுக்கு இந்த அசாதாரண சாதனையை செய்ய உதவ முடியும். இவரே இஸ்ரவேலின் கர்த்தர். உங்களுடைய மூடிய கதவுகளை அழிக்கக்கூடிய அதிகாரத்தை அவர் உங்களுக்கு அளிக்க முடியும் . சுவர்கள் எத்தனை காலம் வேண்டுமானாலும் அங்கே இருக்கட்டும். நாம் அங்கே இருக்கிறோம். பிரிட்டானிகா. காம் கூறுகிறது , எரிக்கோவிலுள்ள குடியேற்றத்தைச் சுற்றி மிகப் பெரிய கற்சுவர்கள் குறைந்தபட்சம் 13 அடி ( 4 மீட்டர் ) உயரமும் , கண்காணிப்பு கோபுரமும் ,பெரும்பலம் கொண்ட 28 அடி உயரமுள்ள சுவரும் அதன் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்தன. அதைச் சுற்றி மனித ஊடுருவல்களைத் தடுக்க தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. அந்தச் சுவர்கள் மிகவும் பலமாக இருந்தன. இஸ்ரவேலர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைவது சாத்தியமற்றதாகிவிட்ட நிலை அது. ஆனால் கர்த்தர் பேசினார். ஏழு ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னால் சென்றார்கள். ஆயுதமேந்திய வீரர்கள் எக்காளம் ஊதிய ஆசாரியர்களுக்கு முன்னால் அணிவகுத்துச் சென்றார்கள் . பின் வீரர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை பின்தொடர்ந்து சென்றனர். இது 7 வது நாள் தவிர மற்ற எல்லா நாட்களிலும் செய்யப்பட்டது , அவர்கள் 7 முறை சுவரைச் சுற்றி சுற்றி சென்றார்கள். யோசுவா அவர்களைக் சத்தமிட்டு ஆர்ப்பரிக்கும்படி கட்டளையிட்டார். கோட்டையாகக் கட்டப்பட்ட சுவர், இஸ்ரவேலர்களுக்கு முன்னால் ஒரு அட்டைப் பொதியாய் விழுந்தது. அவர்கள் நேராக உள்ளே சென்றனர். யோசுவா 6 ம் அதிகாரத்தில் இதைக் காணலாம்.
வெளிப்படுத்தின விசேஷம் 3 : 7
” தாவீதின் திறவுகோலை உடையவரும் , ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடி பூட்டுகிறவருமாயிருக்கிறவர். “
உங்கள் முன்னே கதவுகள் , சுவர்கள் , வாசல்கள் மூடப்பட்டு உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கிறதா?

உங்களிடம் அனைத்திற்கும் சாவிகள் உள்ளன. வெவ்வேறு கதவுகளுக்கு வெவ்வேறு சாவிகள் உள்ளன. எந்த சாவியை பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அதை கர்த்தருடைய வசனத்தில் ஜெபிக்கும் இடத்தில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் முதலில் நீங்கள் இயேசுவை உள்ளே வர அனுமதிக்க வேண்டும். இயேசுதான் அதைத் திறக்கும் குறியீடு. இயேசுவின் வல்லமையான நாமத்தில் உங்களுக்கு கதவு திறக்கட்டும். ஆமென்.

Sol. லலிதா மேனன்.