தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 24-11-2023

சூழ்ந்து பாதுகாக்கும் தேவன்.

1 சாமுவேல் 23 : 26,27

சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள். அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும். பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்

சவுலும் அவருடைய மனுஷர்களும் தாவீதை கொலை செய்ய தேடி வருகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டவுடன் , தாவீது கன்மலையிலிருந்து இறங்கி மாக்கோன் வனாந்தரத்திலே போய் தங்குகிறார். அதைக் கேள்விப்பட்ட சவுல் அங்கும் அவனைத் தேடி வருகிறான். அங்கே தாவீதை பிடிக்கத்தக்கதாக சவுலும் அவனுடைய மனிதரும் தாவீதை சூழ்ந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தேவன் தாவீதை பாதுகாத்தார்.

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து வரும்போது முன்னால் செங்கடல், பின்னால் எகிப்தின் படைகள். அவர்களைச் சுற்றி ஆபத்து சூழ்ந்திருந்த அந்த வேளையில் கர்த்தர் அவர்களையும் பாதுகாத்தார்.

1) சங்கீதம் 18 : 5 ல் பாதாளக்கட்டுகள் என்னை சூழ்ந்து கொண்டது, மரணக் கண்ணிகள் என் மேல் விழுந்தது என்கிறார்.

2) சங்கீதம் 22 : 12 ல் அநேகம் காளைகள் என்னை சூழ்ந்திருக்கின்றன. பாசான் தேசத்து பலத்த எருதுகள் என்னை சூழ்ந்து கொண்டன என்று சொல்கிறார். 16 ம் வசனத்தில் நாய்கள் என்னை சூழ்ந்திருக்கின்றது , பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்து கொண்டது என்று சொல்லி தாவீது கதறியதைப் பார்க்கிறோம்.

3) யோனா 2 : 3 – 5
” சமுத்திரத்தின் நடு மையமாகிய ஆழத்திலே நீர் என்னை தள்ளி விட்டீர். நீரோட்டம் என்னை சூழ்ந்து கொண்டது. வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என் மேல் புரண்டது. தண்ணீர்கள் பிராணப் பரியந்தம் என்னை நெருக்கியது.ஆழி என்னை சூழ்ந்தது. கடற்பாசி என்னை சுற்றி கொண்டது. ” யோனாவை அந்த நிலையிலும் கர்த்தர் பாதுகாத்தார்.

4) சங்கீதம் 31 : 11 ல் அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன். விரோதமாய் அவர்கள் ஏகமாய் ஆலோசனை பண்ணுவதால் திகில் என்னை சூழ்ந்து கொண்டது என்று சொல்கிறார்.
இப்படியாக தன்னை சூழ்ந்து கொண்ட ஆபத்துகள் மத்தியிலும் தேவனை நோக்கி அவர் பார்க்கிற பார்வையை கீழ்க்கண்ட சங்கீதத்தில் பார்க்கலாம்.

1)சங்கீதம் 5 : 12 ” கர்த்தாவே நீர் நீதிமானை ஆசீர்வதித்து காருண்யம் என்னும் கேடகத்தால் அவனை சூழ்ந்து கொள்வீர் “
2) சங்கீதம் 32 : 7 ” நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர். என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கி காத்து இரட்சண்யப் பாடல்கள் என்னை சூழ்ந்து கொள்ளும்படி செய்வீர். “
3) சங்கீதம் 32 : 10 ” கர்த்தரை நம்பியிருக்கிறவர்களை கிருபை சூழ்ந்து கொள்ளும். “

4) சங்கீதம் 34 : 7
” கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். “
அநேக வேளைகளில் என் ஆபத்து நேரங்களில் என் வீடு , மருத்துவமனை எல்லாவற்றையும் சுற்றி தூதர்கள் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நாம் எலிசாவின் வாழ்க்கையை பார்க்கும்போதும் அவர் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணிய போது அவரைச் சுற்றிலும் ஆக்கினிமயமான தூதர்கள் இருந்ததை காண்கிறோம்

5) சங்கீதம் 125 : 2
” பர்வதங்கள் எருசலேமை சுற்றி இருக்குமாப் போல் கர்த்தர் இது முதற்கொண்டு என்றென்றைக்கும் தம்முடைய ஜனங்களை சுற்றி இருக்கிறார். “

நம்மைச் சுற்றியுள்ள எல்லா பகுதிகளிலும் ஆபத்துகள் நிறைந்திருக்கின்றன. நாம் வசிக்கின்ற இடங்களில் , பணிபுரியும் இடங்களில், ஊழியத்தின் பாதைகளில் எங்கும் பிரச்சனைகள் இருக்கலாம். கர்த்தர் இந்த நேரத்தில் நம்மைப் பார்த்து , பர்வதங்களைப் போல நான் உங்களை பாதுகாப்பேன் என்று சொல்கிறார். நாம் இருந்தாலும் நடந்தாலும் கர்த்தரால் சூழப்பட்டிருக்கிறோம்.
அவர் நம்மை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். அவர் தமது செட்டைகளின் நிழலில் நம்மை மறைத்து வைத்திருக்கிறார். அவர் நம்மை சூழ்ந்திருக்கும் தேவன்.

ஜெபம்.

Sol. Dr. Petricia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *