நாள்: 17-02-2023
நூற்றுவர் தலைவனும் அவனது விசுவாசமும்.
” இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு , திரும்பி, தமக்கு பின் செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி;இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். “
லூக்கா 7 : 9

இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட கர்த்தர், ரோமானிய படைவீரர்களின் தலைவனாகிய புறஜாதிக்காரனாகிய நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தைக் கண்டு வியந்து ஆச்சரியமடைந்தார். நாம் வேதாகமத்தில் நிறைய நிகழ்வுகள் பார்த்த போதிலும் அங்கே விசுவாசத்தின் காரணமாக இயேசுவிடமிருந்து குணம் பெறுவதை காண்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் மிகவும் அசாதாரணமான ஒன்று என்ன தெரியுமா?
நூற்றுவர் தலைவன் மிக அதிகாரம் படைத்தவர் , அதிக வல்லமை படைத்தவர், செல்வந்தர் மற்றும் செல்வாக்கு மிக்கவர். தம்முடைய வேலைக்காரனின் பலவீனமான நிலையை அவர் எப்படி கவனித்து அவர் குணமாக வேண்டும் என்று விரும்பினார் என்பதைக் காண்கிறோம் . அவர், இயேசு இஸ்ரேலில் எப்படி குணப்படுத்துகிறார் , எவ்வாறு அற்புதங்கள் செய்கிறார் , என்பதை கேள்விப்பட மட்டுமே செய்திருந்தார். மேலும் அவர் இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு வல்லமையான அதிகாரம் இருக்கிறது என்று நம்பினார். அவரை ஏற்றுக் கொண்டார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இயேசுவை தன்னிடம் வரும்படி கட்டளையிட்டிருக்கலாம். ஆனால் அவர் தம்மை மிகவும் தாழ்த்தினார். இயேசுவைப் பார்ப்பதற்கு அவருடைய தகுதி போதும் என்று அவர் எண்ணவில்லை. ஆனால் இஸ்ரேலில் உள்ள மதிக்கப்படக்கூடிய தலைவர்களிடம் அவருக்காக பேசும்படி கேட்டார். (எசாயா 49 : 7
நீதிமொழிகள் 15 : 33 ” கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்: மேன்மைக்கு முன்னானது தாழ்மை.”
மத்தேயு 18 : 4 ” ஆகையால் இந்த பிள்ளையைப் போலத் தன்னை தாழ்த்துகிறவன் எவனோ அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்”
மேலும் அவன் இயேசு அவ்வழியே வந்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து குழப்படைந்து , என்னுடைய இடத்திலே இயேசுவை வரவேற்க நான் தகுதியானவன் தானா? என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான். அவன் முழுவதும் தன்னை வெறுமையாக்கி அவருடைய வார்த்தையால் மட்டுமே குணமாக்க முடியும் என்பதை உணர்ந்து , அவனுடைய வேலைக்காரனை குணமாக்கச் சொல்லும்படி கேட்டுக் கொள்ள தன் நண்பர்களை அனுப்பினான்.
சங்கீதம் 107 : 20 ” அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். ”
அவன் இயேசுவின் அதிகாரத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டினான். மேலும் இயேசுவை தன்னுடைய இடத்திற்கு அழைத்து வர தகுதியில்லை என்றும் எண்ணினான். கர்த்தருடைய தயவைப் பெறுவதற்கு நாம் எதைக் குறித்து பெருமை பாராட்ட முடியும்? ஒன்றுமில்லை. அவருடைய கிருபையைத் தவிர வேறெதுவும் நம்மைக் காப்பாற்ற முடியாது. அதுதான் நாம் பெருமை பாராட்டக்கூடிய விஷயம்.
கர்த்தர் மீதான நம்பிக்கை என்பது நமது செயல்களால் காட்டப்பட வேண்டும்.
யாக்கோபு 2 : 26
” அப்படியே ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறது போல , கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது. “
புறஜாதிக்காரனாகிய நூற்றுவர் தலைவன் இயேசுவின் தெய்வீக அதிகாரத்தையும் அவருடைய வார்த்தையின் வல்லமையையும் ஒப்புக் கொண்டு மிகப் பெரிய விசுவாசத்தை வெளிப்படுத்தினான். கர்த்தருடைய ராஜ்யத்தில் யூதரென்றோ, புறஜாதிக்காரன் என்றோ இல்லை. இயேசு கிறிஸ்துவுக்குள் நாம் எல்லோரும் ஒருவரே.
கலாத்தியர் 3 : 28
” யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை. ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். “
எபேசியர் 3 : 12 ” அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. “
பரலோகத் தந்தையே, எங்களை முழுமையாக தாழ்த்தவும் நாங்கள் ஒன்றுமேயில்லை, உம்மைக்குறித்து மட்டுமே பெருமைப்படவும் இயேசுகிறிஸ்துவின் தியாகத்தின் வழியாக எங்களை உமது மகனாக மகளாக தெரிந்துகொண்டதை ஏற்றுக் கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்யும். நூற்றுவர் தலைவன் அனைவருக்குமுன் காட்டிய அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தவும் உலகம் முழுவதும் நற்செய்தியை அறிவிக்கவும் எங்களுக்கு உதவி செய்யும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.
Sol. நேகா.
