நாள்: 30-04-2023
கர்த்தரின் சர்வாயுதவர்கம்
நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 6:11
ஆங்கிலப் பதிப்பில், பிசாசின் திட்டங்களுக்குப் பதிலாக, பிசாசின் வஞ்சகம் என்று பொருள்படும் wiles என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
நம் வாழ்வில் சிலர் நம்மை ஏமாற்றியிருப்பார்கள். நாம் முதலில் அவர்களை நல்லவர்களாக உணர்வோம். ஆனால் பின்னர் அவர்கள் தந்திரமானவர்களாகவும் நம்மிடம் பொய் சொல்வதையும் காண்கிறோம். இவர்களே இப்படி தந்திரமாக இருந்தால், நம்மை ஏமாற்றி, கர்த்தரிடம் இருந்து நம்மை பிரிக்க , இவர்களுக்குப் பின்னால் இருக்கும் சாத்தான் எவ்வளவு அதிகமான தந்திரமுடையவனாக இருப்பான்.
இந்த பிசாசின் தந்திரங்களிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?
மேலே உள்ள வசனத்தின்படி, இதற்குரிய பதில் கர்த்தரின் சர்வாயுதவர்கம் அணிய வேண்டும் என்பதாகும்.
கடற்படையின் போர்க்கப்பல்களில் வீரர்கள் உறங்கச் செல்லும்போது அவர்கள் சீருடை, காலணிகள் மற்றும் பிற பொருட்களை தயாராக வைத்திருப்பார்கள். அவசரநிலை ஏற்படும் போதும், சைரன் அடிக்கும் போதும் ஒரு நிமிடத்தில் அவசரத்திற்கு தயாராகி விடுவார்கள். போர் அல்லது அச்சுறுத்தல் இல்லாதபோதும் இந்த நடைமுறை 365 நாட்களும் பின்பற்றப்படுகிறது.
நாம் படுக்கையில் இருந்து எழுந்ததும் கர்த்தரின் கவசத்தை அணிகிறோமா?
நாம் சாத்தானுடன் ஒரு போரில் இருக்கிறோம், தினமும் காலையில் எழுந்ததும் சாத்தான் நம் குடும்பம், பயணம், நம் வேலை போன்றவற்றுக்கு எதிரான திட்டங்களைத் திட்டமிடுகிறான்.
ஆனால் நாம் எழுந்து கர்த்தரோடு உட்காரும்போது, தேவனுடைய கவசத்தை அணிந்துகொள்ளலாம். முதல் பகுதியாக, கர்த்தர் செய்த அனைத்திற்கும் நன்றி செலுத்தி அவரை துதிக்க வேண்டும் . இரண்டாவது பகுதியாக, முந்தைய நாளில் நாம் தவறவிட்டதையும், கர்த்தருக்கு எதிராக நாம் செய்த தவறுகளையும் பற்றி ஆராய்ந்து, நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எதையாவது இழக்க நேரிடலாம் மற்றும் கர்த்தருக்கு எதிராக பாவம் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் அதை அறியாமலும் இருக்கலாம். ஆனால் அடுத்த நாளில் நாம் பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தில் நம்மை நாமே ஆராய்ந்து பார்க்கும்போது, நம்முடைய குறைகளை நாம் காணலாம், அதை நாம் ஒப்புக்கொள்ளும்போது கர்த்தர் நல்லவர் உண்மையுள்ளவர், மன்னித்து நம்மை பரிசுத்தப்படுத்துகிறார்.
நாம் அனைவரும் மனிதர்கள் .நாம் தெரிந்தோ அல்லது தெறியாமலோ பாவம் செய்யலாம். ஒவ்வொரு பாவமும் நம்முடைய எதிரிகள் முன்னேற அல்லது நமக்கு எதிராக அவர்கள் அதிக சக்தியைப் பெற உதவுகிறது. நாம் நம் பாவத்தை அறிக்கையிடும் போது கர்த்தரின் நான்கு கவசங்களை அணிந்து கொள்ளலாம்
1.சத்தியம் என்னும் கச்சை ,
2. நீதி என்னும் மார்க்கவசம் ,
3. இரட்சிப்பு என்னும் தலைக்கவசம் ,
4. சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை.
நாம் ஜெபிக்கும்போதும்,வேதவசந்தை தியானிக்கும் போதும், விசுவாசம் என்ற கேடயத்துடன் தயாராக ஆவியின் பட்டயத்தையும் தயாராகி ஆவிக்குரிய தாக்குதலுடன் எதிரி நம்மிடம் வரும்போது அவனைத் தாக்க ஆயத்தமாக இருப்போம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் இதை செய்ய வேண்டும். ஒருமுறை நான் ஒரு பிரார்த்தனைக் குழுவில் இந்த அழகான மேற்கோளைப் பார்த்தேன் “பகுதி நேர கிறிஸ்தவர்கள் முழு நேர பிசாசுடன் சண்டையிட முடியாது” . ஆம், இது உண்மைதான், ஏனென்றால் கர்த்தருடன் இரவும் பகலும் ஜெபத்தில் அமர்ந்திருக்காமல், நம்மை நோக்கி தீய திட்டங்களைத் தீட்டும் பிசாசை எதிர்த்துப் போராட முடியாது.
ஜெபம்
எங்கள் அன்பான பரலோகத் தந்தையே, நாங்கள் உமது கவசத்தை அணிந்துகொண்டு, பிசாசுகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராக நின்று, எதிரியின் மீது வெற்றிபெறும்படியாக, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
Sol.லியோ
