நாள்: 01-04-2023
ராகாப் : விசுவாசத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
யோசுவா 6:22-25
” யோசுவா , தேசத்தை வேவு பார்த்த இரண்டு புருஷரையும் நோக்கி, நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய் , நீங்கள் அவளுக்குஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டு வாருங்கள் என்றான் .
அப்பொழுது வேவுகாரனான அந்த வாலிபர் உள்ளேபோய் , ராகாபையும் அவள் தகப்பனையும் தாயையும் சகோதரர்களையும் அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக் கொண்டு வந்து அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்கு புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். வெள்ளியையும் பொன்னையும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரங்களையும் கர்த்தரின் ஆலய பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.
எரிக்கோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்து வைத்தபடியினால் அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான். அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள். ”
விசுவாசத்தால் வாழ்வது என்றால் என்ன?
விசுவாசத்தின் சாராம்சம், கடவுளை அவருடைய வார்த்தையினால் எடுத்துக்கொள்வதும், அவர்மீது நம்பிக்கை வைப்பதும் ஆகும். வேதாகமத்தின் இரண்டு ஏற்பாடுகளிலும், விசுவாசிகள் மன்னிப்பு மற்றும் இரட்சிப்புக்காக கடவுளைச் சார்ந்திருக்க அழைக்கப்பட்டனர். விசுவாசத்தோடு வாழ்பவர்கள், அவரால் மட்டுமே செய்யக்கூடியதைச் செய்யும் கர்த்தரைச் சார்ந்திருக்கிறார்கள்.
எபிரேயர் 11 : 1
” விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.”
ராகாபின் கதையில் விசுவாசம் பெரும் பங்கு வகித்தது. யோசுவா 3-6 ம் வசனம் எரிகோ நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவத்தின் முன்னேற்றத்தை விவரிக்கிறது. இது ஒரு அசாதாரண போர்த் திட்டமாகும். அதை நிறைவேற்றுவதற்கு மிகுந்த விசுவாசம் தேவைப்பட்டது. அரணால் சூழப்பட்ப நகரத்தின் மீது நேரடியாகத் தாக்குவதற்கு அல்லது பதுங்கிச் செல்வதற்குப் பதிலாக, மக்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பேழையைச் சுமந்துகொண்டு ஆறு நாட்களுக்கு எரிகோவைச் சுற்றி ஒரு நாளைக்கு ஒருமுறை அணிவகுத்துச் செல்லும்படி சொன்னார்கள். ஏழு ஆசாரியர்கள் ஆட்டுக்கடாக்களின் கொம்புகளின் எக்காளங்களை ஏந்தியிருந்தனர்.
ஏழாவது நாளில், அவர்கள் ஏழு முறை சுற்றிவந்து , உரத்த கூச்சலிட்டு எக்காளம் ஊதினார்கள். விசுவாசத்தினால் கர்த்தர் கட்டளையிட்டதைச் செய்தார்கள். சுவர்கள் இடிந்து விழுந்தன. தெளிவாக இது கர்த்தரின் செயல் .
யோசுவா 6 : 22-25 ம் வசனங்களில் யோசுவாவும் வேவுபார்ப்பவர்களும் ராகாபிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்கள். அவளுடைய கருணையினால் பயனடைந்த அதே இரண்டு ஆண்கள், இடிந்து விழுந்த இடிபாடுகளிலிருந்து அவளது குடும்பத்தை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
யோசுவாவின் புத்தகம் எழுதப்பட்டபோது, ராகாப் இன்னும் இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்து கொண்டிருந்தாள் என்று சொல்லப்படுகிறது. அவள் கர்த்தரின் சொந்தத்தில் ஒருத்தியாகிவிட்டாள். ராகாப்பின் துணிச்சலான மற்றும் விசுவாசம் நிறைந்த செயல்கள் புதிய ஏற்பாட்டில், எபிரேயர் மற்றும் யாக்கோபு புத்தகங்களில் இரண்டு முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு , யோசேப் மற்றும் மோசே ஆகியோருடன் ராகாப்பின் பெயரும் "நம்பிக்கைக்குரியவர்களின் வரிசையில் " பாராட்டப்பட்டுள்ளது. தன்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் மாறாக, அவள் இஸ்ரவேலின் கர்த்தரின் மீது நம்பிக்கை வைத்தாள். விசுவாசத்தால் வாழ்வதற்காக தன் உயிரைப் பணயம் வைக்க அவள் தயாராக இருந்தாள்.
நம்முடைய சொந்த வாழ்க்கையில் நாம் எந்த அளவு விசுவாசத்தோடு வாழ்கிறோம் என்று சிந்திப்போம்.
Sol. அருண்.
