தானியேல் –II – தேவ செய்தி

நாள்: 18-02-2023

கர்த்தர் உன்னுடன் செல்வார்.

உபாகமம் 31 : 6 ” நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார் , அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை. “


மோசே மேலும் யோசுவாவைப் பார்த்து, கர்த்தர் அவர்களுக்கு கொடுத்த தேசத்திற்கு மக்களை அழைத்துச் செல்வதால் அவர் பலமாகவும் , தைரியமாகவும் , உறுதியாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார். கர்த்தர் ஒருபோதும் அவரை தோல்வி அடையச் செய்யவோ கைவிட மாட்டார் என்றும் அவரை வெற்றிக்கு அழைத்துச் செல்ல கர்த்தர் அவருடன் செல்வார் என்றும் உறுதியளித்தார். கர்த்தர் இன்றும் உங்களுக்கும் எனக்கும் இதே உறுதியை அளிக்கிறார்.

நாம் செல்லும் இடமெல்லாம் கர்த்தர் வழியை ஆயத்தம் செய்ய நம்முன்னே செல்கிறார் என்பது தெரியவருவது நமக்கு ஆறுதலான விஷயம். என்ன சூழ்நிலையாக இருப்பினும் நமக்கு முன்னே செல்வதாக கர்த்தர் வாக்கு தருகிறார். உங்களுக்கு நீதிமன்ற வழக்கு வந்தால் , நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்வது அவசியம். நீங்கள் செல்வதற்கு முன்னே நீதிமன்றத்திற்கு கர்த்தர் சென்றிருப்பார். அல்லது நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கும் உங்கள் முதலாளிக்கும் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் , கர்த்தருடைய வசனங்களை நம்புங்கள். உங்களுக்குச் சாதகமானதை செய்வார் . மேலும் அதற்குரிய நேரம் வரும்போது அன்பான வழிகளில் சரியான வார்த்தைகளை பேசவும் வைப்பார்.

நீங்கள் எங்கெங்கு சென்றாலும் என்னென்ன சூழ்நிலைகள் வந்தாலும் உங்களுக்கு முன்பாகச் சென்று பாதைகளை செம்மைப்படுத்த கர்த்தரிடம் கேளுங்கள். அவர் செய்வார். பின்பு நீங்கள் செய்யவேண்டியது அதைப்பின்பற்றுவது தான்.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் நம் மனதில் முன்வைக்கப்படுகின்றன. நம் எண்ணங்களை மாமிசத்தினால் அல்ல ஆவியினால் எண்ணங்களால் புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். நம்முடைய சரீரம் சார்ந்த எண்ணங்கள் எந்தவித முயற்சியும் இல்லாமலே தவறான சிந்தனைகளை சுதந்திரமாக பயிற்சி செய்கிறது. மறுபுறம் நாம் கண்டிப்பாக சரியான எண்ணங்களை சிந்திப்பதை தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக கர்த்தரிடம் நாம் ஒருமித்த எண்ணம் கொண்டவர்களாக இருக்க முடிவு செய்த பிறகு தொடர்ந்து சரியான சிந்தனைகளை தேர்வு செய்வது அவசியம்.

நம் எண்ணங்களுடன் போர் புரிவது கடினமானது என்று உணரத் தொடங்கும் போது ,நாம் விரும்பாததை செய்ய போகிறோம் என்ற எண்ணம் வரும்போது எஎல்லா எதிர்மறையான எண்ணங்களை களைய வேண்டும். நாம் இதை செய்யப்போகிறோம் , இந்த காரியத்தை விட்டு பின்வாங்க மாட்டேன் என்று தீர்மானிக்க வேண்டும். நாம் சந்தேகத்தாலும் பயத்தாலும் தாக்கப்படும் போது , நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன், கர்த்தர் என்னுடன் இருக்கிறார் , அவர் என்னை அன்பு செய்கிறார் மற்றும் எனக்கு உதவி செய்கிறார் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் வாழ்நாள் முழுவதும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.
உபாகமம் 30 : 19 ல்
” நான் ஜீவனையும் மரணத்தையும் , ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன், ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படி க்கு, நீ ஜீவனைத் தெரிந்து கொண்டு ” என்று வாசிக்கிறோம். கர்த்தர் தம்முடைய மக்களை வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும்படி அவர்களுக்கு முன் வைத்ததாக கூறுகிறார்.
நீதிமொழிகள் 18 : 21 ம் வசனமும் மமரணத்தையோ அல்லது வாழ்வையோதெரிந்தெடுங்கள் என்று சொல் கிறது.
” மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும் அதில் பிரியப்படுபவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். “

நம்முடைய எண்ணங்களே வார்த்தைகளாக மாறுகிறது. எனவே வாழ்வு தரும் எண்ணங்களை நாம் தேர்வு செய்வது முக்கியமானது. மேலும் ஒவ்வொரு நிலையிலும் கர்த்தரை நம்ப வேண்டும். ஆமென்.

Sol. கமல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *