நாள்: 15-12-2022
ஒரு கிறிஸ்தவனுக்கு சரியான முன்மாதிரி - ஈசாக்
ஈசாக் , பரலோகத் தந்தையால் – சர்வவல்லமையுடவரால் வாக்களிக்கப்பட்ட ஆபிரகாமுடைய மகன் என்பதை நாம் அறிவோம்.
ஈசாக்கை ஒரு தெய்வீக மனிதனாக மாற்றும் பண்புக்கூறுகள் பின்வருமாறு.

ஈசாக் இளமைப் பருவத்தில் இருந்தபோது மோரியா மலையில் ஈசாக்கை காணிக்கையாக செலுத்தும்படி கர்த்தர் ஆபிரகாமிடம் கேட்டார். ஈசாக் பலியிடுவதற்காக விறகுகளை எடுத்துக் கொண்டு வரும்போது, பலியிடுவதற்குரிய ஆட்டுக்குட்டியைப்பற்றி தன் தந்தையிடம் விசாரித்தார். அது கர்த்தருக்கு பலியாக கொடுப்பதற்கு என்று யூகித்தார்.
மேலும் தன் தந்தைக்கு பலிபீடத்தை அமைக்க உதவினார். வயதான தன் தந்தை ஆபிரகாம் அவரை பலிபீடத்தில் வைத்தபோது , அதை ஏற்றுக் கொண்டு கர்த்தருடைய முடிவுக்கு கீழ்படிந்தார். இப்போதுள்ள நவீன உலகத்துப் பிள்ளைகள் அந்த சூழ்நிலையில் இருந்தால் , அவர்கள் எளிதாக அந்த இடத்தைவிட்டு ஓடியிருப்பார்கள். ஆனால் ஈசாக்கு தன்னுடைய தந்தையின் விசுவாச வார்த்தைகளை நம்பினார்.
( a ) ஆதியாகமம் 22 : 5
” அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி : நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள் ,நானும் பிள்ளையாண்டானும் அவ்விடம்மட்டும் போய் தொழுது கொண்டு , உங்களிடத்துக்கு திரும்பி வருவோம் என்றார்.”
( b ) ஆதியாகமம் 22 : 8
” அதற்கு ஆபிரகாம் : என் மகனே , தேவன் தமக்கு தகனபலிக்கான ஆட்டுக்குட்டியை பார்த்துக் கொள்வார் என்றான்.”
ஈசாக்குடைய விசுவாசமும் அவருடைய தந்தையின் மேலிருந்த நம்பிக்கையும்
‘குழந்தைகள், உங்கள் பெற்றோருக்கு எல்லா வகையிலும் கீழ்படியுங்கள்’ என மேற்கூறிய வசனங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
நீண்ட ஆயுளுடன் இருப்பதற்கு , பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும் என்று வேதாகமம் சொல்கிறது. ஈசாக்கு இந்த வசனங்களுக்கு கீழ்படிந்தார்.
140 வயதான தன் தந்தை , தன்னுடைய உண்மையான வேலைக்காரனை அனுப்பி அவருக்காக ஒரு மணமகளை கொண்டுவரும் வரை, ஈசாக் 40 வருடம் பொறுமையாக காத்திருந்தார். தன்னுடைய தந்தையின் முடிவிற்காக காத்திருந்தார்.
இன்றைய கிறிஸ்தவ பிள்ளைகள், தங்களுடைய பெற்றோரிடம் கலந்து ஆலோசியாமல், தாங்கள் சொந்தமாகவே வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கின்றனர். மட்டுமல்லாமல் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெற்றோருக்கு கீழ்படிபவர்களாகவும் அவர்களை மதிப்பவர்களாகவும் இருக்கிறார்களா?
ஈசாக் தியானம் செய்யும் மனிதர். ஒவ்வொரு நாள் மாலையும் ல- ஹாய் – ரோய் என்ன கிணற்றருகே சென்று அங்கு தியானம் செய்தார். பாலைவனத்தில் கர்த்தருடைய தூதன் ஆகாரைச் சந்தித்த நீரூற்று அது. அவள் சாராவிடமிருந்து ஓடி வந்த போது இந்த இடத்தில் தான் கர்த்தருடைய வழிகாட்டுதலையும் வழிநடத்துதலையும் பெற்றாள். இந்த இடத்திற்குத் தான் ஈசாக் தியானம் செய்ய சென்றார்.
அவர் கர்த்தரை எதிர்பார்த்து அவருடைய உதவியை நாடினார். கர்த்தர் அவருக்கு ஒரு இனிமையான அதிர்ச்சியை கொடுத்தார். அவர் ல ஹாய் ரோய் என்ற கிணற்றிற்கு அருகே ஈசாக்கை, தன்னுடைய அழகான மணப்பெண்ணாகிய ரபேக்காளை சந்திக்க வைத்தார்.
சங்கீதக்காரன் சொல்கிறான். ” வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடமிருந்து எனக்கு உதவி வருகிறது. ” நாம் நம்முடைய விருப்பங்கள் நிறைவேற கர்த்தருக்கு காத்திருப்போம்.
ஈசாக் ஒரு ஜெப மனிதன்.
திருமணத்திற்குப் பிறகு 20 வருடங்களாக ஈசாக்கிற்கு குழந்தை இல்லை. அதனால் தன் மனைவி கருவுற வேண்டுமென்று மனதார வேண்டிக் கொண்டார். பின்பு அவர் மனைவி கருவுற்றாள்.
கர்த்தர் அவளுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரு மகன்களை கொடுத்து ஆசீர்வதித்தார்.
சாட்சி
எனது பெற்றோருக்கு 5 பிள்ளைகள் இருந்தனர். நாங்கள் அனைவரும் எங்கள் பெற்றோருக்கு கீழ்படிந்தோம். அவர்கள் எங்களுக்கு கல்வி கற்பித்தார்கள். அது, எங்கள் வாழ்க்கையின் இலக்குகளை அடைய உதவியது.
ஜெபம்
கர்த்தாவே உம்மீதும் ,எங்களை வழிகாட்டுகின்ற ,வழிநடத்துகின்ற எங்கள் பெற்றோர் மீதும் விசுவாசம் கொள்ளவும் , எங்களுக்கு உதவி செய்யும். உமது வார்த்தைகளை தியானிக்கவும் எப்போதும் ஜெபிக்கவும் உதவி செய்யும் . எங்களது விருப்பங்கள் நிறைவேறும் வரை உமக்காக காத்திருக்கவும் உதவி செய்யும்.
ஆமென்.
Sol. விக்டிமிதிலா.
