நாள் 17-10-2022
குடும்ப ஜெபம்
” நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்.” யோசுவா 24 : 15

நான் திருமணம் செய்தபோது போதகர் முன்னிலையில் என்னுடைய திருமணத்தை பதிவு செய்த வேளையில், நீங்கள் கண்டிப்பாக தினம்தோறும் குடும்ப ஜெபம் செய்யவேண்டும் என்று கூறினார். இன்றைய கிறிஸ்த்துவர்கள் மத்தியில் நான் ஏன் குடும்ப ஜெபம் பண்ண வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. ஆண்டவர் வேதாகமம் மூலமாக நான் ஏன் குடும்பமாக கூடி அவரை ஆராதிக்கவும் ஜெபிக்கவும் வேண்டும் என்று நமக்கு கற்றுத்தருகிறார்
” கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப்பின்வரும் தன் வீட்டாருக்கும் : நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து , கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றான். ” ஆதியாகமம் 18 : 19.
கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தை கொடுத்து விட்டு நிச்சயமாக ஆபிரகாம் தன் பிள்ளைகளுக்கு கர்த்தர் முன்பாக நீதியாய் நடப்பதை அந்த வாக்குத்தம் நிறைவேற சொல்லிக்கொடுப்பான் என்று நிச்சயித்து இருந்தார்.ஆபிரகாம் இதை எப்படி செய்ந்திருப்பார். குடுமபமாக அமர்ந்து கர்த்தரை பற்றி கற்றுக்கொடுத்து இருப்பார்
ஆதியாகமம் 25 : 22 ல் ஈசாக் ரெபேக்காளை திருமண செய்த போது அவளுக்கு கர்த்தரை குறித்த தெளிவு இல்லை. ஆனால் அவள் பிரசவத்தின் போது ஈசாக்கின்னிடத்தில் அல்ல ஆண்டவரிடத்தில் விசாரிக்கிறாள். ஈசாக் கர்த்தரை பற்றி சொல்லி கொடுத்ததும் அவர்கள் கர்த்தருடைய சமூகத்தில் செலவிட்ட நேரம் ரெபேக்காக்களுக்கு பிரசவத்தை குறித்த பயத்தை கர்த்தரிடத்தில் கொண்டு போக வைத்தது.
உபாகமம் 6 : 8
” நான் உனக்கு கட்டளையிடுகிற வார்த்தைகளை, உன் பிள்ளைகளுக்கு கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிற போதும் வழியில் நடக்கிறபோதும் , படுத்துக்கொள்ளுகிறபோதும்,எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்து பேசி , அவைகளை உன்கையின்மேல் அடையாளமாகக் கட்டிக் கொள்வாயாக, அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக் குறியாய் இருக்கக்கடவது. “
மோசேயும்கூட தன்மக்களுக்கு கட்டளையிடும்போது , உங்கள் குழந்தைகள் வீட்டிலிருக்கும் போதும், நடக்கும்போதும் எழுந்திருக்கும் போதும் ,படுக்கும்போதும் கர்த்தரின் கற்பனைகளை கற்றுக் கொடுங்கள் என்று சொன்னார். நாமும் நமது குழந்தைகள் சிறுவயதிலிருந்தே , கர்த்தரின் வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும்படியாக சொல்லவேண்டும். அதற்கு சிறந்தவழி நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குடும்பமாக ஜெபிப்பதுதான்.
லேவியராகமம் 23 ம் அதிகாரத்தில் , ஏழு பண்டிகைகளை குடும்பமாக சபையாக ஆசாரிக்க சொல்கிறார் என்பதை பார்க்கிறோம்.. குழந்தைகளுக்கும், அடுத்த தலைமுறைக்கும் இறைவார்த்தையைக் கற்றுக் கொடுப்பதே இவ்விழாக்களுக்கு முக்கியக் காரணம். பாஸ்கா பண்டிகையை கொண்டாடும் போது, ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தை புளிப்பில்லாத அப்பத்தை உண்ணும் போது, அப்பாவிடம் இந்த புளிப்பில்லாத அப்பம் சுவையற்றது. இதை ஏன் சாப்பிடுகிறோம் என்று கேட்கும் போது நம் முன்னோர்கள் அடிமைகளாக இருந்தபோது எகிப்தில், ஒரே இரவில் கர்த்தர் அடிமை நாட்டிலிருந்து அவர்களை மீட்டு கொண்டு வந்தார் , .அதைக் கொண்டாடவும் அதை நினைவுகூரவும் நாம் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிறோம், ஏனென்றால் நம் முன்னோர்கள் அன்று இந்த புளிப்பில்லாத அப்பம் சாப்பிட்டார்கள். கூடார பண்டிகையில் குழந்தை கொண்டாடும் போது குழந்தை அப்பாவிடம் நாம் ஏன் இந்த கூடாரங்களில் வசிக்க வேண்டும் என்று கேட்கும்போது, நம் வீட்டில் வாழாமல், ஒரு காலத்தில் நாம் வீடில்லாமல் வனாந்தரத்தில் இருந்தோம், கர்த்தர் நமக்கு காட்டாத வீட்டையும் நடாத விருட்சத்தையும் கொடுத்தார் அதை நினைவு கூர்ந்து இந்த கூடாரங்களில் இருந்து நாம் கர்த்தரை மகிமை படுத்துகிறோம். நம் குடும்ப ஜெபத்தில் கர்த்தர் செய்த அதிசயங்களை நம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும்.
அப்போஸ்தலர் 18 ம் அதிகாரத்தில் அக்வில்லா, பிரிசில்லா என்ற தம்பதியர் , தேவனிடம் விசுவாசம் கொண்டு அப்போஸ்தலராகிய பவுலின் ஊழியத்திற்கு குடும்பமாக ஜெபத்தோடு துணைநின்றார்கள்.
2 திமோத்தேயு 2 : 5 ல் அப்போஸ்தலராகிய பவுல் திமோத்தேயுவின் தாய் மற்றும் அவரது பாட்டியினுடைய விசுவாசத்தை பரிசோதித்து அவர்கள் அதில் உறுதியாயிருந்து திமோத்தேயுவையும் தங்களுடைய குடும்ப ஜெபத்தின் வழியாகவே விசுவாசத்திலே வளர்த்தார்கள் என்பதை அறிந்தார்.
எனக்கு திருமணம் முடிந்தபோது என் மனைவியினுடைய ஆவிக்குரிய வாழ்வைப்பற்றி எனக்குத் தெரியாது. நாங்கள் குடும்பமாக ஜெபிக்க ஆரம்பித்தபோது, ஒருநாள் தேவன் ஒரு தரிசனத்தை காண்பித்ததாக என் மனைவி என்னிடம் கூறினார். முதலில் அது என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதன்பிறகு அந்த வெளிப்பாடு என்னைக் குறித்தும் என்னுடைய பயத்தைக் குறித்தும்தான் என்பதை தேவன் வெளிப்படுத்தினார். இப்போது நிறைய விஷயங்களை என் மனைவியின் வழியாக தரிசனத்தின் மூலம் தேவன் வெளிப்படுத்துகிறார். நாம் குடும்பமாக ஜெபிக்கும் போது நம்முடைய அன்றாட போராட்டங்கள் மாறுகிறது, குடும்பத்தில் வருகிற வாக்குவாதங்கள் தீர்கிறது, நம்முடைய குழைந்தைகள் ஆண்டவருடைய வார்த்தையை கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் கர்த்தர் எப்படி குடும்பத்தை வழிநடத்தி ஆசீர்வதிக்கிறார் என்பதை பார்க்கிறார்கள்
எனவே நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம். குடும்ப ஜெபத்தை தவறாது கடைபிடிப்போம்
Sol. Leo
