நாள்:13-05-2022 – தேவ செய்தி
அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
லூக் 18:14

ஜெபத்தைப் பற்றி பேசும் போது கர்த்தரை நாம் அணுகுவதற்கு சரியான மனநிலை என்ன என்பதை இயேசு கிறிஸ்து இந்த உவமையின் மூலம் எடுத்துச் சொல்கிறார். ஆலய்த்திற்கு ஜெபிக்கச் சென்ற இரண்டு மனிதர்களைப் பற்றி அவர் பேசினார். அவர்களில் ஒருவன் பரிசேயன் மற்றொருவன் ஆயகாரன்.
பரிசேயன் அங்கே நின்றுகொண்டு தான் எப்படிப்பட்ட நீதிமான் என்று தன்னைத்தானே உயர்த்தி ஜெபித்தான். ஆனால் அந்த ஆயகாரன் தன் மார்பிலே அடித்துக்கொண்டு தான் ஒரு பாவி என்று ஏற்றுக்கொண்டான் அதற்காக கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டான்.
பரிசேயனுடைய ஜெபத்தில் என்ன தவறு இருந்தது, பரிசேயனுடைய ஜெபத்தில் எது சரியாக இருந்தது. இவர்கள் இருவரைப் பற்றிய கர்த்தரின் மதிப்பீடு நமது எதிர்பார்ப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டுமா? இதை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் இல்லை.
பரிசேயன் தன்னுடைய ஜெபத்தை எப்படி துவங்குகிறான் என்று பார்ப்போம், “கர்த்தாவே இந்த ஆயகாரனைப் போல நான் இல்லாததால் நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.”
நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்கச் செல்லுகிறீர்கள், அவரிடம் நீங்கள் இவ்வாறு சொல்லுகிறீர்கள், நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கு மருந்து தேவை இல்லை. உங்களுடைய காத்திருப்பு அறையில் இருக்கும் நோயாளிகளைப் போல நான் இல்லை. என்னிடம் எந்த குறையும் இல்லை.
மருத்துவர் அவனை செக்கப் செய்து பார்க்க கூட அவன் அனுமதிக்க வில்லை. இப்படிப்பட்டவனோடு மருத்துவர் என்ன செய்வார்? இந்த மனிதனில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது, அவனுடைய வியாதி கண்டுபிடிக்கப்படாது, ஏனென்றால் அவனுக்கு எதுவுமே தேவை இல்லை. மருத்துவரை அவன் அனுமதித்திருந்தால் அவனுக்கு இருக்கும் வியாதி என்ன என்பதை அவர் கண்டறிந்து அதற்கு மருந்து கொடுத்திருப்பார்.
இதைத்தான் வேறு இடத்தில் இயேசு சொல்லுகிறார்,, “ பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.” மத் 9:12. இந்த வசனத்திற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இந்த பரிசேயன். தேவாலயத்தில் தான் நீதிமான் என்றும் தன்னுடைய ஆன்மீக மற்றும் தார்மீக தன்மையை நியாயப்படுத்தவே வந்தான். அவன் ஜெபிக்க வரவே இல்லை..
ஏன் இந்த பரிசேயன் இப்படி ஜெபிக்கிறான் என்பது ஆயக்காரனுக்கு நன்றாகவே தெரியும். தன்னை அசிங்கப்படுத்தவே. பரிசேயன் உரத்த குரலில் சொன்னான், “பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.லூக் 18:11,
ஆயக்காரன் பதிலுக்கு ஒன்றுமே சொல்ல வில்லை. அவன் தனது ஆத்துமாவின் நோயை அறிந்திருந்தான். அவன் யாரையும் வெறுக்க வில்லை, தனது தேவையைப் பற்றி மட்டுமே நினைத்து தன் மார்பை அடித்துக்கொள்கிறான், அவனை துன்புறுத்திய அந்த நோயானது வெடித்து வெளியே வந்தது.
தேவனே பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும் என்றான். தான் மட்டும் தான் இந்த உலகிலேயே இருக்க கூடிய ஒரே பாவி என்று தன்னை நினைத்தான். ஆனாலும் இயேசு சொல்லுகிறார் இப்படிப்பட்ட ஜெபத்தைத்தான் கர்த்தர் கேட்கிறார்.
பெருமையும் மன நிறைவோடும் தங்களுடைய வார்த்தை ஜாலத்தால் தைரியமாக ஜெபிப்பவர்கள், எப்படி கர்த்தருடைய தேவாலயத்திற்குள் வந்தார்களோ அப்படியே திரும்பி செல்வார்கள்.
ஜெபம்
உமக்கு முன்பாக எப்போதும் எங்களை தாழ்த்த எங்களுக்கு கிருபை தாரும். எங்களை உம்மிடம் ஒப்புகொடுக்கிறோம். ஆமேன்.
–Sol.Gerard
