தானியேல் – II
நாள் 13-04-2022 – தேவ செய்தி

விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

எபே 3:17-19.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனம்- எபேசு சபை மனித அறிவுக்கு அப்பாற்பட்ட அன்பில் வேரூன்றியதாக இருக்க வேண்டும் என்று பவுல் எபேசு சபைக்காக செய்த ஜெபம்.

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

ரோம 5:5

பரிசுத்த ஆவியானவர் அதே அன்பை நம்மில் பொழிந்துள்ளார். வேதம் சொல்லும் இப்படிப்பட்ட அன்பை நம்முடைய குடும்பத்திலும், சபைகளிலும் அல்லது கிறிஸ்தவ சமுதாயத்திலும் காண்கிறோமா?. இப்படிப்பட்ட அன்பு நம் மத்தியில் ஏன் காணப்பட வில்லை. கர்த்தர் நமக்கு சொல்லும் பதில் இதுதான், “யாரும் என்னை கேட்க வில்லை.” இயேசு சொன்னார், கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும். நாம் கேட்காத ஒன்றை கர்த்தர் நமக்கு கொடுக்க இயலாது. நமக்கு எதிராக குற்றம் செய்தவர்களை மன்னிக்கவோ, நமக்கு எதிராக எழுந்தவர்களை அன்பு செய்யவோ, நமக்கு பிடிக்காதவர்கள், நம்மைவிட கீழ்தரமாக நாம் நினைக்கும் சிலர் என இவர்களை அன்பு செய்ய நாம் ஆசைப்பட்டு கேட்டால்தான் அவர் நமக்கு கொடுப்பார். மத் 5:44 – உங்களுடைய எதிராளியை அன்பு செய்யுங்கள் என்று இயேசு சொன்னதோடு நிறுத்தாமல் அவ்வாறு செய்ய அன்பையும் நமக்கு கொடுக்கிறார்.

அதே அன்பை இயேசு இவ்வுலகில் வெளிப்படுத்தியுள்ளார். உடலாலும், இரத்தத்தாலும் அவர் நம்மைபோலவே இருந்தார் ஆனால் அவர் அடிக்கப்பட்டார், துன்புறுத்தப்பட்டார், துப்பப்பட்டார், ஆனால் அவருக்குள் பரிசுத்த ஆவியினால் ஊற்றப்பட்ட அந்த அன்பின் காரணத்தால் அனைத்தையும் சகித்துக்கொண்டார்.

ஆவியின் கனிகளில் முதன்மையனது அன்பு. அப்போஸ்தலர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய நிறுபத்தில் பரிசுத்த ஆவியின் வரங்களைப் பற்றி விளக்கிச் சொல்கிறார் – 1கொரி 12,14 – அன்புக்கு முக்கியத்துவமும் கொடுக்கிறார். 1கொரி 13 சொல்லுகிறது, நாம் பற்பல பாஷைகளில் பேசினாலும் , நற்செய்தியை போதித்து, தீர்க்கதரிசனம் சொன்னாலும், ஏழைகளுக்கு செல்வத்தை அள்ளிக்கொடுத்தாலும், அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும், அன்பில்லா விட்டால் கர்த்தருடைய பார்வையில் இவை வீணே.

அநேகர் கர்த்தருடைய அன்பு எனக்குள் இருக்கிறது என சொல்கின்றனர்.

ஆனால் அது வேதம் சொல்லும் அன்பா?
கடையில் நாம் அரிசி வாங்கும்போது அதன் எடையை சரிபார்த்தபிந்தானே நமக்கு கொடுக்கப்படுகிறது. எடை பார்க்காமல் இது போதும் என்று எப்படி சொல்ல முடியும்? 1கொரி 13 தான் அன்பின் அளவை காட்டுகிறது. இது அன்பின் 13 குணாதிசயங்களை காட்டுகிறது. கர்த்தரிடமிருந்து வரும் இந்த அன்பு, பரிசுத்த ஆவியினால் நமக்குள் ஊற்றப்படுகிறது. கர்த்தருடைய ராஜ்யத்தை இவ்வுலகில், சமுதாயத்தில், நமது குடும்பத்தில் நிலைநாட்ட கர்த்தரிடம் இந்த அன்பை கேட்போம்.

ஜெபம்

எங்கள் பரலோக பிதாவே, இந்த செய்தியை படிக்கும் அனைவருக்கும் நீர் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பை புரிந்துகொள்ளவும் அதே அன்பை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தவும் ஜெபிக்கிறேன். ஆமேன்.

Sol.Leo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *