தானியேல் – II

நாள் – 10-04-2022 – தேவ செய்தி

அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

1பேது 1:7

தங்கம் அழிந்துபோகும். அது நிரந்தரமானதல்ல. தங்கத்தின் உண்மையான மதிப்பு நெருப்பில் சோதிக்கப்படும் போதுதான் வெளிப்படுகிறது.  தங்கமானது நெருப்பில் சுட்டெரிக்கப்படாவிட்டால் அதன் மதிப்பு தெரியாது. மண், குப்பை மற்றும் அசுத்தமான பொருட்களுடன் அது கலந்துவிடும். சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தை தட்டான் எரியும் நெருப்பில் சரியான வெப்பநிலை இருக்கும்போது போடும்போது அதோடு கலந்திருக்கும் மணல், அழுக்கு போன்ற அனைத்து மாசுகளும் நீங்கி 22 காரட் தங்கமாக மாறும். பிறகு தட்டான் தங்கத்தை தான் விரும்பிய வடிவத்தில்ல் வடிவமைத்து, ஆயிரம், இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அழகான ஆபரணமாக மாற்றுகிறார்.

அதே போல மலைப்பாறையை வெட்டும்போது அது பாறையாகவே இருக்கிறது. ஆனால் சிற்பி பாறையை செதுக்கும்போது அவன் மனதில் இருக்கும் அழகான வடிவத்தை உருவாக்குகிறான். சிற்பி செதுக்கும்போது ஏற்படும் வலியில் இருந்து தப்ப பாறை நிறுத்தச் சொன்னால் அது சிற்பிக்கு அல்ல, பாறைக்குதான் இழப்பு. அது பாறையாகத்தான் இருக்கும் சிற்பமாக மாறாது. அதேபோல் நம் வாழ்வின் சிற்பி இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையை செதுக்கும்போது நமக்கு வலிகள் ஏற்படலாம். நாம் மனமுவந்து நம்மை அவர் கைகளில் ஒப்புகொடுக்கும்போது அவர் நம்மை அவருடைய சாயலாக மாற்றுகிறார்.

புடவைகள் சல்வார்களில் எம்ப்ராய்டரி வேலைகளைப் பார்க்கும்போது பூக்கள் மற்றும் பொம்மைகளின்  அழகான, வடிவமைப்புகளை பார்க்கிறோம், ஆனால் அதற்கு முன் அதே வடிவமைப்பை நூற்றுக்கணக்கான முறை ஊசிகளால் துளைத்து ஒரு பூ அல்லது பொம்மையில் பல வண்ண வடிவமைப்பை உருவாக்கப்படுகிறது.

1சாமுவேல் 1 – இல் அன்னாள் கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று மனம் கசந்து  மிகவும் அழுதாள்.  ஏன்? ஏனென்றால் பெனின்னாள் அவளை மனம் நோகச் செய்தாள். எனவே, அன்னாள் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருக்கு முன்பாக தன் இருதயத்தின் பாரத்தை இரக்கி வைத்தாள். அதற்குபின் தான் தீர்க்கதரிசி சாமுவேல் பிறந்தான்.

நம்முடைய இருதயம் நொருங்கியிருக்கும்போது, மற்றவர்களால் கைவிடப்பட்டிருக்கும்போது, இது கர்த்தருடைய சாயலை நம்மில் உருவாக்குவதற்காகத்தான், கர்த்தருடைய சித்தத்தை செய்யத்தான், நம்மில் ஒரு தீர்க்கதரிசி உருவாகத்தான்.

யோசுப்பு கூட  ஜெயிலில் இருக்கும் போது இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்துதான் சென்றான். ஆதி 39:20,21 சொல்லுகிறது யோசுப்பு தனியாக இல்லை அவனோடு தேவன் இருந்தார். அவருடைய கிருபை யோசேப்புக்கு ஜெயில் அதிகாரியின் கண்களில் கிருபை கிடைக்கச் செய்தது.

நம்முடைய எல்லா வழிகளிலும், இயேசு கிறிஸ்துவின் சாயலை நாம் பிரதிபலிக்க வேண்டும் எனவும், கர்த்தருடைய சித்தம் நம்மில் நிறைவேற வேண்டும் எனவும் அவர் விரும்புகிறார்.

சாட்சி

தன்னுடைய 40 வது வயதில் என் தாய் என்னை கர்ப்பம் தரித்தாள். உடல் பலவீனத்தின் காரணமாக அநேக முறை கரு கலைப்பு செய்ய என் தாய் முயற்சித்தாள் ஆனால், என் தாயின் கருவிலே தேவன் என்னை காப்பாற்றினார். என்னுடைய 52 வயது வாழ்க்கையில் அநேக முறை கர்த்தர் என்னை உடைத்தார், உருவாக்கினார், புதிதாக்கினார். கர்த்தருடைய சித்தம் என்னில் நிறைவேற நான் என்னையே அவர்கையில் ஒப்புகொடுத்தேன். சங் 119:73 – உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, அனைத்தையும் படைத்த சிருஷ்டிகரே, என்னை என் தாயின் வயிற்றிலே காப்பாற்றியெ அன்பு தெய்வமே, உம்மை ஆராதிக்கிறேன். இயேசப்பா, என்னுடைய வாழ்க்கை உமக்காக, உம் சித்தம்போல என்னை உருவாக்கும் பிதாவே. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே. ஆமேன்.

Sol.Rani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *