அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
லூக் 16:11
சீடர்களுக்கு இயேசு இந்த வசனத்தைச் சொன்னதின் மெய் பொருள் என்னவென்றால், தன்னுடைய சொத்துக்களை இவர்களிடம் ஒப்படைக்கப்போகிறார் என்பதுதான். அவற்றை புத்திசாலிதனமாகப் பயன்படுத்த அவர்கள் பொறுப்பெடுப்பார்கள் எனபதற்காகவே இப்படி சொன்னார். இவ்வாறு தன்னுடைய சீடர்களிடம் தன்னுடைய சொத்தை இயேசு கொடுத்துச் சென்றிருக்கிறார். நம்மிடம் இருப்பதெல்லாம் அவரிடமிருந்து வந்ததே. கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் அவரது பணம், திறமை, அதிகாரம், செல்வம், நிலம், வேலை, பதவி போன்றவைகளை நாம் எப்படி செலவிடுகிறோம் என்பதற்கு நாம்தான் பொறுப்பு. ஒரு நாள் வரும் அப்போது கர்த்தர் நம்மை அழைத்து நாம் எப்படி இவைகளை பயன்படுத்தியிருக்கிறோம் என்று நம்மிடம் கணக்கு கேட்பார்.
பணம் பரலோகத்தின் நாணயம் அல்ல என்று இயேசு கூறுகிறார். உதாரணத்திற்கு உங்களிடம் இந்திய நாட்டின் பணம் அதிகமாக இருந்தும் வெளிநாட்டில் பட்டினி கிடக்கும் விசித்திரமான அனுபவம் உங்களுக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். வெளி நாட்டில் பொருட்களை வாங்குவதற்கு வங்கிக்குச் சென்று உங்கள் பணத்தை நீங்கள் இருக்கும் அந்த நாட்டின் பணத்தில் மாற்ற வேண்டும்.
ஆனால் நாம் பரத்திற்கு போகும்போது அங்கு பரிமாற்ற வங்கிகள் எதுவும் இருக்காது. நம்முடைய பணத்தை பரலோக நாணயமாக மாற்றும் சந்தர்ப்பம் இந்த உலகில்தான் உள்ளது. பரலோக வாசல்வரை நாம் காத்திருந்தோமேயானால், காலம் கடந்து போய்விடும்.
இயேசு கிறிஸ்து ‘உண்மையான செல்வம்’ மற்றும் ‘பொய் செல்வம்’ இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்டுகிறார். பொய்யான செல்வம் இவ்வுலக செல்வமாகும், இதை நம்முடைய வங்கி கணக்கிலும் வங்கியிலும் அளந்து பார்க்கலாம். உண்மையான செல்வம் நித்தியமானது. மத் 6:19-21 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; பொருள்சார்ந்த செல்வம் உண்மையான செல்வம் அல்ல. உண்மையான செல்வம் வங்கிகள் நம்முடைய வங்கி எண்ணில் மதிப்பிடுவது அல்ல, மாறாக பரலோக வங்கியில் நாம் சேர்த்துவைத்திருக்கும் செல்வமே.
லூக் 21:1-4 இல் ஒரு ஏழை விதவை தன் வறுமையிலிருந்து இரண்டு காசுகள் போட்டாள், மற்றவர்களை பார்க்கிலும் இது மிகக் குறைவு ஆனாலும் இயேசு மற்றவர்களை விட இவள் அதிகமாக கொடுத்தாள் என்றும் , மற்றவர்களோ தங்கள் பரிபூரணத்திலிருந்து கொடுத்தார்கள் ஆனால் இவளோ தன்னுடைய ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார். லூக் 12:15 – பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
அவருடைய திராட்ச்சை தோட்டத்தில் வேலை செய்யவும், அவருடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கவும், எல்லைகளை விரிவுபடுத்தவும், அவருடைய ஒளியை அந்தகாரம் நிறைந்த இடங்களுக்கு எடுத்துச் செல்லவும், அவருடைய தரிசனம் நிறைவேற உழைக்கவும் அவர் நம்மை அழைத்துள்ளார் நாம் அவருக்கு இதற்கான கணக்கை கொடுக்க வேண்டும். நம்மிடம் அவர் ஒப்படைத்திருக்கும் அனைத்து தாலந்துகளுக்கும் ஒரு நாள் அவரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
Sol. Dr. Mohan Parmar
